ராகிங்: வேலூர் சிஎம்சி தான் பொறுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

ராகிங்: வேலூர் சிஎம்சி தான் பொறுப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.15- வேலூர் கிறிஸ்தவ மருத் துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல் லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாண வர்கள், 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாண படுத்தி ராகிங் செய்ததாக காட்சிப்பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிகழ்வு தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், இடைநீக்கம்  செய்து உத்தரவிட்டது. மேலும், கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப் படையில், பாகாயம் காவல்துறையினர் இடைநீக்கம்  செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நேற்று (14.11.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது மருத் துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், "கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதிக் காப்பாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 7 மாணவர்கள் இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசா ரணையில் 7 மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சட்டப் படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள். கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. ராகிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி முறையாக பின்பற்றி வருகிறது" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பெயர் பெற்ற கல்வி நிறுவனமான சிஎம்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப் பினர். அதற்கு மருத்துவ நிர்வாகம் தரப்பில், "இதுதொடர்பாக விசாரணை நடந்து வரு கிறது. அதன் அடிப்படையில் பொறுப்பான வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment