சென்னை, நவ. 26- சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 24.11.2022 அன்று கூடியது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி யாக பதவி வகித்து வரும் டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.
மேலும், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பணி புரிந்து வரும் நீதிபதி பட்டு தேவானந்த் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி டி.நாகார்ஜுன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ராஜா அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ள நிலையில், அவரது ஒப்புதல் இல்லாமல் ராஜஸ் தானுக்கு அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தினர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment