ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினம்

ஜெயங்கொண்டம், நவ. 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5.11.2022 சனிக்கிழமை அன்று 16ஆவது  விளையாட்டு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. 

விளையாட்டு தினம் காலை 10 மணியளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இவ்விளையாட்டு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக  சசிக்குமார் (விஞ்ஞானி, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்) வருகை புரிந்திருந்தார் மற்றும் திராவிட கழக அரியலூர் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ்   கலந்து கொண்டார். பள்ளியின் முதல்வர் முனைவர் சசீதா  தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முதலாவதாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப் பட்டது. பள்ளி மாணவர் தலைவன்  எஸ். பாலமுருகன்  ஒலிம்பிக்  சுடர் ஏந்தி  வந்தார்.

பள்ளி மாணவர்களின் ஒருமித்த கூட்டு முயற்சியுடன் கூடிய அணிவகுப்பு மத்தள ஒலியின் இசைக்கு ஏற்ப கர்ஜிக்கும் சிங்கங்களைப்போல  சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என வண்ணக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வீரநடையிட்டு வந்து நிதானம் ,நேர்மை, துணிவு, கம்பீரம்  ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக  அணிவகுத்து வந்தது கண்களை கவரும் வகையில் இருந்தது. சிறப்பு விருந்தினர் தேசியக் கொடியை ஏற்றி விழாவினை இனிதே தொடங்கி வைத்தார்.  எல்கேஜி மற்றும் யுகேஜி மழலையர்கள்  காற்றாலை பயிற்சியும் (Windmill drill)  முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் மின்மினி பூச்சி மின்னுவது போல அழகாக மின்னிக்கொண்டுவந்து (Pim Pom drill)  பிம்பாம் பயிற்சி செய்து காட்டியும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர்.

மூன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஹீலா வளையங்கள்  (Hula Hoops) வைத்து செய்து காட்டிய பயிற்சி பார்வையாளர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

ஏழாம்  வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் உடம்பை வளர்த்து உயிரை காக்கும் யோகக் கலையைச்  செய்து காட்டி உடல், மனம், அறிவு மற்றும் உணர்வின் சமன் பாட்டிற்கு உதவும் மருந்தில்லா மருத்துவத்தை  வலியுறுத்தினர்.   மேலும்  தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மாணவ மாணவிகள் செய்து காட்டியவிதம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நான்கு வண்ணக் கொடிகளை வைத்துக் கொண்டு செய்த பயிற்சியும்,  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் நான்கு வண்ண பிம்பாம்களை வைத்து கொண்டு செய்து காட்டிய பயிற்சியும் மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் செய்து காண்பித்த டெய்சி பயிற்சியும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

கூட்டு முயற்சி, தோள்வலிமை, விவேகம் ஆகியவற்றால் வரவேற்பு, கோபுரம் கட்டடங்களின் சரிகை மற்றும் ஒட்டகம்  போன்ற பலவிதமான  பிரமிடு கட்டமைப்புகளைச் செய்து காட்டி அசத்தினர். 

மேலும் சிறப்பு விருந்தினர் தனது உரையில்  உடலுக்கும், மனதிற்கும் உறுதியைத் தரக்கூடிய யோககலையின் சிறப்புகளை எடுத்துரைத்து எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் செய்து காண்பித்த அத்தனை பயிற்சிகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன எனக் கூறி மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். பல போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கமும் கேடயமும் வழங்கப்பட்டன.

இதுமட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடை பெற்றன. இப்போட்டிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களை குழந் தைகளாக நினைத்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர் போட்டியில் வென்ற பெற்றோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும்  பகிர்ந்து கொண்டனர். மேலும் இருபால் ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.  இவ்விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment