சென்னை, நவ.2- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான ஓசல்டாமிவிர் மாத்திரை 3 லட்சம் வாங்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும்‘ஏடிஸ் எஜிப்டை’ வகை கொசுக்கள்மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகரிக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் டெங்குவால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020இல் தமிழ்நாட்டில் மொத்தம் 2,410 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. 2021இல் 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: பொதுவாக பருவ கால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருள்களும் தமிழ்நாட்டில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக் கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மாத்தி ரைகள் வாங்கப்பட்டன. டெங்குவுக்கு வழங்கப்படும் ஓசல்டாமிவிர் மாத்திரைகள் 3 லட்சம் வாங்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தொண்டை அடைப் பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ராமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பருவ மாற்றநோய்களைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment