நிகும்பன்
மனச்சாட்சிக்கு மதிப்பளித்து வாழக்கூடிய எந்த மனிதனும், கூடுமானவரை மனிதாபிமானியாகவே வாழ்வான் - வாழ முடியும் என்பது பொதுவிதி. ஆனால், துர்ப்பாக்கியமான இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதாபிமானியாக ஒருவன் வாழ்ந்து வர வேண்டுமென்றால் - அவன் மனச்சாட்சியோடு வாழ்ந்தால் மட்டுமே போதாது. அவன் நிச்சயமாக பார்ப்பன துவேஷியாகவும் வாழ்ந்தே தீர வேண்டும். அதுவும் இந்திய குடிமகனாக இருப்பவன் ஓர் ஹிந்துவாகவும் இருந்துவிட்டால் அவன் பார்ப்பன துவேஷியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது, கடவுள் வெறுப்பாளனாகவும் இருந்தே தீர வேண்டும்.
அப்போதுதான் அவன் பாரபட்சமற்ற - தீர்க்கமான மனிதாபிமானியாக வாழ்ந்து காட்ட முடியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு ஜாதியினர் மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாதவர்களாக அவமானப்படுத்தப்பட்டு வந்துள்ளது மட்டுமல்ல உயர் ஜாதி ஹிந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங் களுக்குக்கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து, அவர்களுக்கு தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்துள்ளது மட்டுமல்ல - நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக அவர்களின் பெண்மணிகளின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக் கிறது. நிலைமைகள் இவ்வாறிருக்க, மனச் சாட்சியின் உறுத்தலுக்கு மதிப்பளித்து மனிதாபிமானத்துடன் வாழ எண்ணும் ஒரு நல்ல ஹிந்து - பார்ப்பன துவேஷமில்லாமலும் கடவுள் வெறுப்பில்லாமலும் எப்படி வாழ இயலும்?
நாலந்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததாகக் கூறப்படும் தர்மகீர்த்தி என்பவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:-
“அறிவைவிட ஏட்டுச்சுவடிகளுக்கு முக்கியத் துவம் கொடுப்பது, உலகத்தை தோற்றுவித்தவர் கடவுள் என்று ஒப்புக் கொள்வது, தீர்த்தமாடுவதை மதச் சடங்காக ஆக்குவது, பிறப்பிலே ஜாதிவேற்றுமை காண்பது, பாவத்தைப் போக்குவதற்காக சரீரத்தை வாட்டுவது இவை அய்ந்தும் மனிதர்கள் ஜடப் பொருளாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு லட் சணங்கள்.”
தேசப்பிதா என போற்றப்படும் மரியாதைக்குரிய காந்தியார் அவர்களுக்கு மனச்சாட்சியின் உறுத் தல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன. கூடுமான வரை மனிதாபிமானத்துடனேயே வாழ வேண்டும் என்ற உந்துதலும் இருந்து கொண்டுதான் வந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் - ஹிந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் - தானும் ஒரு ஹிந்துவாகவே இருந்து கொண்டு - “மனச்சாட்சி” “மனிதாபிமானம்” என்ற அளவோடு செயல்படுவது என்பது “பாதிக் கிணறு” தாண்டுவது போலத்தான்.
“மனச்சாட்சி” “மனிதாபிமான” உந்துதல். இல்லாமல் பேராசிரியர் தர்மகீர்த்தி கூறுவது போல் “ஜடப் பொருளாக” வாழ்ந்திருந்தால் மரியாதைக்குரிய காந்தியார் கொல்லப்பட்டிருக்கவே மாட்டார். அதுவும் ஒரு பார்ப்பனனால் அவருக்கு அந்த முடிவு ஏற்பட்டிருக்காது. அதுவும் ஒரு பார்ப்பன மதவெறி அமைப்பினால் அக்கொடுமை நிகழ்ந்திருக்கவே இருக்காது.
காந்தியாருக்கு “மனச்சாட்சி”யின் உறுத்தல்கள் இருந்து வந்தன என்பதற்கும் அவ்வப்போது மனிதா பிமான உந்துதல்களுக்கு ஆளாகியுள்ளார் என்ப தற்கும் அவருடைய சுய சரிதையிலே காணப்படும் இரு நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை - காந்தியார் அவர்களையே பேச வைப்போம்.
“நான் அரித்துவாரத்துக்கு யாத்திரை நோக்கத் துடன் போகவில்லை புண்ணியத்தை நாடி யாத்திரை தலங்களுக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. கல்கத்தாவிலிருந்து அரித்துவாரத்திற்கு ரயில் பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. இத்தகைய பயணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட வைதீக ஹிந்துக்கள் முஸ்லீம் களிடமிருந்து தாகத்திற்குத் தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். “ஹிந்து” தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இதே ஹிந்துக்கள் நோயுற்றுவிடும்போது டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட் டிறைச்சி சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிறிஸ்தவக் கம்பவுண்டரா முஸ்லீம் கம்பவுண்டரா என்பதை விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டி யதாகும்.”
துன்பம் வரும்போது வைதீக ஹிந்து - எவ்வளவு நளினமாக, “தான் போற்றிப் பாதுகாத்து வருவதாக நடித்துவரும் வைதீகத்தை ஒதுக்கி விடுகிறான்” என்பதை காந்தியார் கிண்டல் செய்வதைப் பாருங்கள்.
“கும்பமேளா” என்னும் தலைப்பிலேயே மரியாதைக்குரிய காந்தியார் மேலும் எழுதுவதைக் கவனிப்போம்.
“யாத்ரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும்; துப்புக் கெட்டதனமுமே அதிகமாக இருப்பதைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.
இங்கே அய்ந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால், விஷயம் தெரிந்தவர்கள், சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரம்மையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான அய்ந்து கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலி யானதேயன்றி வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த அய்ந்தாவது காலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன். இவ்வித இரட்டைக் கொடுமையின் பலனைக் கொண்டு ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த அய்ந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத ஹிந்துவே இல்லை, இந்த அற்புத(?)ப் பசுவிற்குத் தாராளமாகத் தருமஞ் செய்யாத ஹிந்துவும் இல்லை.”
கும்பமேளாத் திருவிழாவில் சாதுக்கள் நடத்தும் கோணங்கித் தனத்தைக் கண்டு குமுறிய உள்ளத் தோடுதான் காந்தியார் இவ்வாறெல்லாம் எழுதுகிறார்.
No comments:
Post a Comment