ஆன்லைன் சூதாட்ட தடை - ஒரேநாளில் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

ஆன்லைன் சூதாட்ட தடை - ஒரேநாளில் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு விளக்க அறிக்கை

சென்னை நவ.27 அரசமைப்புச் சட் டத்துக்குள்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசு பதிலளித்துள் ளது. மேலும், மசோதாவுக்கு அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட் டத்துக்கு தடை விதித்து, பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா தொடர் பாக சில கேள்விகளை ஆளுநர் எழுப்பி, அதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு மாநில அரசு சார்பில் பதில் அளிக்கப் பட்டது. ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவில் அரசு, ஆளுநரிடையே நடந்து வரும் கடிதப் பரிமாற்றம் உள் ளிட்ட விஷயங்கள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களுக்கு 24.11.2022 அன்று அளித்த பேட்டி:

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யவும், மற்றவற்றை ஒழுங்கு படுத்தவும் சட்டப் பேரவையில் மசோதா இயற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது. இதற்கான அவசர சட்டம் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அதே ஷரத்துகள், பிரிவு களின் அடிப்படையில் மசோதா பேர வையில் நிறைவேற்றப்பட்டு ஆளுந ருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், 24.11.2022 அன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் வரப் பெற்றது. அதில், சில சந்தேகங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந் தார். இதற்குரிய பதிலை சட்டத் துறை 24 மணி நேரத்தில் தயாரித்து அளித் துள்ளது. முந்தைய அரசால் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் கொண்டு வர அனுமதி தந்திருந்தது. எந்தெந்த காரணங் களுக்காக சட்டத்தை ரத்து செய்ததோ, அந்தக் காரணங்களுக்கு விளக்கம் தந்து புதிய ஷரத்துகளை உள்ளடக்கி சட்டம் கொண்டு வந்துள்ளோம். இந்த சட்ட மசோதா, அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா என ஆளுநர் கேட்டுள்ளார்.

 ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டம் நவம்பர் 27-ஆம் தேதியுடன் முடி வடைகிறது. 

எனவே, மசோதாவுக்கு தாமதம் இல்லாமல் அனுமதி தர வேண்டும். மற்ற மாநிலங்களை விட, தமிழ் நாட்டில்தான் முதல் முறையாக ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங் குபடுத்துதல், தடை விதித்தல் என்ற அளவில் கொண்டு வந்துள்ளோம். ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மசோதாவின் முகப்புரையில் முழு மையான, தெளிவான விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றி ஏழை, எளிய மக்களை காப்பாற்றுவோம் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

ஆளுநரின் வினாக்களும், 

அரசின் பதில்களும்...

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு சட்டத் துறை அளித்த பதில்கள்:-

வினா: ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்குள்பட்டதாக இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழலில், இப்போது இயற்றப் பட்டுள்ள சட்டத்திலும் அதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. விளையாட் டுக்கான வாய்ப்புகள், திறன்களை வேறுபடுத்திப் பார்க்காமல் முழுமை யாகத் தடை செய்வது, அரசமைப்புச் சட்டக்கூறு 19 (1)க்கு எதிரானது.

பதில்: அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டு, சில முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணம் வைத்து சூதாடுவது, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம் போன்ற விஷயங்கள் அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பட்டியல் 2-இல் வருகின்றன. இந்தப் பட்டியலில் வரக்கூடிய அம்சங்களை இணைத்தே சட்டம் இயற்றப்பட் டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலில் உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. சட்டத்துக்குள்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா அமைந்துள்ளது.

வினா: திறமை அடிப்படையிலான விளையாட்டுகளைத் தடை செய்யும் முடிவு என்பது அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள பிரிவுகளுக்கு உட்பட்டு வரும் என்று குறிப்பிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த மசோதாவில் நீதிமன்றத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பதில்: ஆன்லைன், நேரடியாக விளையாடும் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டே அவசர சட்டத்தில் ஆன் லைன் சூதாட்டங்களை மட்டும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேரில் விளையாடும் போது, அனைத்துச் சூழல்களும் கண்கூடாகத் தெரியும். ஆனால், ஆன்லைனில் யாரையும் எளி தாக ஏமாற்றி, பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. இதனடிப்படையிலேயே, ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது.

வினா: குறிப்பிடத்தக்க அளவு தடை மட்டுமே அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி தடை அமைந்துள்ளது.

பதில்: இப்போதைய சட்டத்திலும் விளையாட்டுகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப் பட்டுள்ளன. எனவே, இது தேவையான அளவில் மட்டுமேயான தடைதான்.


No comments:

Post a Comment