திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்

 நவம்பர் 26 அரசமைப்புச் சட்ட நாளில் கல்வி நிறுவனங்களில் வேதம், மனுஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்வதா?

பல்கலைக்கழக மானியக் குழு  அறிவிப்பைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 25, இந்திய அரசமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்களில் வேதம், மனுஸ்மிருதி, இதிகாசம், புரா ணங்கள் குறித்து கருத்தரங்குகளை நடத்துமாறு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளதைக் கண்டித்து இன்று (25.11.2022) திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் அறவழி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட (Constitution Day)  நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில், பல்கலைக்கழக மானியக்குழு (ஹி.நி.சி.) சார்பில் கருத் தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதில், கீழ்க்காணும் தலைப்புகள் இடம்பெற வேண்டுமாம்!

“1. மன்னராட்சியின் மேன்மைகள், 2. வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்தசாஸ் திரம், இதிகாசம், புராணங்கள் ஆகிய சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ‘ஜனநாயகச் சிந்தனைகள்’ என்பன வற்றை கருப்பொருளாகக் கொண்டதாக இருக்க வேண்டுமாம்!”

என்ன கொடுமை!

இது ஆரிய சமஸ்கிருத கலாச்சாரப் பரப்புத் திட்டமல்லாமல் வேறு என்ன?

நாட்டில் நடப்பது ஜனநாயகம் என்ற போர்வையில் நரேந்திர மோடி என்ற தனிக்காட்டு ராஜாவின் தலைமையில் மன்னராட்சி தானே நடந்து கொண் டுள்ளது.

2030இல் நிலாவில் குடியிருக்கலாம் என்று ஒரு பக்கத்தில் செய்தி வருகிறது. இன்னொரு பக்கத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வேத காலத்திற்குக் காலைப் பிடித்து இழுக்கிறது

“ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் - ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்தான் எங்கள் கொள்கை” என்று மார்தட்டும் ஓர் ஆட்சியில் பல்கலைக்கழக மானி யக் குழு வர்ண சாலையாக இருப்பதில் ஆச்சரியம் ஏது?

அறிவுக்குத் தூக்குப் போடும் இந்த அழுக்கு மதவெறிப் படையெடுப்பை மண் மூடச் செய்ய மக்களை ஆயத்தப் படுத்துவோம்!

வாரீர்! வாரீர்! நவம்பர் 26ஆம் நாளை சனாதன நாளாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் திட்டங் களை முறியடிக்க ஒன்று திரள்வோம், வாரீர்! வாரீர்! மாணவர்களே, கண்டனக் குரலை எழுப்புவீர்! என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 25.11.2022) அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (25.11.2022) காலை 11 மணியளவில் சென்னையில், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையிலும், கோவை, திருச்சி,  மதுரை, நெல்லை,  சேலம்,  தஞ்சை,  நாகை,  வேலூர்,  ஆகிய இடங்களிலும்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

சென்னையில்...

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலை மையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்கள், பல்கலைக் கழகங் களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பைக் கண்டித்து விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்  இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையாற்றினார்.

முன்னதாக திராவிட மாணவர் கழகத் தோழர் முகிவேந்தன் வரவேற்புரையாற்றினார். சமூகநீதி மாணவர் இயக்க நிர்வாகி அப்துல் ஆசீப், எஸ்.எப்.அய்., அமைப்பின் நிர்வாகி ரூபன் சக்கரவர்த்தி கண்டன உரையாற்றினர். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பகனி, கல்வியாளர் 

ச. இராஜசேகர், கல்வியாளர் மருதுபாண்டியன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ. சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், காஞ்சி கதிரவன், தென் சென்னை மாவட்ட கழக தலைவர் 

இரா. வில்வநாதன், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், நெய்வேலி வெ.ஞானசேகரன், சிதம்பரம் செல்வரத்தினம் மற்றும் திராவிட மாணவர்  தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில பெருந்திரளாகப்  பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே! மாற்றாதே மாற்றாதே!

கல்விக்கான துறைகளை காவித்துறையாய் மாற்றாதே!

யு.ஜி.சி. வேலை என்ன? இந்துத்துவாவைத் திணிப்பதா?

மக்களாட்சி நாட்டிலே மனுஸ்மிருதி தேவையா?

அரசமைப்புச் சட்டம் இருக்க அர்த்தசாஸ்திரம் ஏனய்யா?

பழம் பெருமை என்னும் பெயரால் 

பழைய குப்பைகளைத் திணிக்காதே!

ஜாதிக்கொரு நீதி சொல்லும் சாஸ்திர புராணக் குப்பைகளை

ஜனநாயக நாட்டிலே மாணவர்களிடம் திணிக்காதே!

அவமதிக்காதே அவமதிக்காதே 

ஜனநாயகத்தை அவமதிக்காதே!

காப்போம், காப்போம் மக்களாட்சியைக் காப்போம்!

மாய்ப்போம், மாய்ப்போம்  மனுதர்மத்தை மாய்ப்போம்! 

சாய்ப்போம் சாய்ப்போம் சனாதனத்தைச் சாய்ப்போம்! 

என ஒலி முழக்கமிட்டனர்.


No comments:

Post a Comment