பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சாவர்க்கர் யார்? - 'ஆனந்த விகடன்' படப்பிடிப்பு

சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் ஏதோ குற்றம் சொல்லி விட்டாராம். அவர்மீது வழக்காம் - இதோ ‘ஆனந்த விகடன்' (18.10.2021) சாவர்க்கரைப் பற்றி எழுதிய விரிவான கட்டுரையைப் படியுங்கள்:

அமித்ஷாவின் ‘சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் படம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்த படிதான், போட்டோவுக்கு போசே கொடுப்பார் மனிதர்.

ஆக, ஒரு விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலு வையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும்.

இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந் திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீ காரமும் கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார்? அவரது அரசியல் எப்படிப்பட்டது? அவர் பாடுபட்டது யாருக்காக? என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது.

இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்தியாருக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித்ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!

சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனை வாதி தான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. ஹிந்து ராட்டிரம் தான்! அந்த ஹிந்து ராட்டிரம் எப்படியிருக்கும் - அவரே அதை விவரிக்கிறார்...

`எவரெல்லாம் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல!’

ஒரு தேசியத்துக்குக் கொடுக்கப்படும் Motherland, Fatherland என்ற கருத்துருவாக்கங்களைத் தாண்டி,`Holy land’ என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர்.

அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ் தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதா வது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஹிந்துப் பெண்களைச் சூறையாடி யதைப் போலவே, ஹிந்துக்கள் இஸ்லாமியப் பெண் களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக் கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்குக் கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.

ஜனநாயக அரசியலில் ஒரு பாலபாடம் உண்டு. அதாவது, ‘அனைவரையும் உள்ளடக்கும் அரசிய லுக்கு (Inclusive Politics) எவரெல்லாம் அச்சுறுத் தலாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஜன நாயகத்துக்கும் எதிராகவே நிற்கிறார்கள்’ என்பதே அது!

ஜனநாயகப் பண்புக்கு எதிரானவர்

சாவர்க்கர், அனைவரையும் உள்ளடக்கும் அர சியலுக்கு எதிராக நின்றவர். இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை `Others’ என்று கூசாமல் சொன்னவர் அவர். `அவர் களுக்கு எந்த விதத்திலும் இந்த நாடு சொந்தமில்லை’ என்ற கருத்தாக்கத்தை, சாவர்க்கரின் எழுத்துகளில் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. ஆகவே, அவர் இந்தியாவின் ஜனநாயகப் பண்புக்கு முற்றிலும் எதி ரானவர்! இப்படிப்பட்டவருக்கு, அகிலத்தின் மாபெரும் ஜனநாயக நாட்டினரான நாம், பாரத ரத்னா கொடுத்து அழகு பார்க்கப் போகிறோமா? அப்படிச் செய்தால், நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் நம்மைப் பற்றி என்ன மதிப்பு வைத்திருப்பார்கள்?

காந்தியார் ‘Power to people’  என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறு பட்டு ‘Power over people’  என்று சொன்னார். அதா வது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.

போதாக்குறைக்கு, இந்தியாவை ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உரு வகித்தார் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. ‘இந்தி யாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’ என்று சில ஆய்வாளர்கள் சொல்வது அதனால்தான்!

ஹிந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர் தான்! விவேகானந்தரும், அரவிந்தரும், திலகரும் ‘ஹிந்துயிஸம் (Hinduism)' என்று பேசியதை, `ஹிந் துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர்.

ஹிந்துயிஸத்தை, ஹிந்து மதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றிப் பேசுவது, அதன் தத்துவங்களைப் பரப்புவது என்று வரையறுக்கலாம்.

ஆனால், ஹிந்துத்துவம் அப்படியல்ல. அது, ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் ஹிந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, ஹிந்துயிஸம் ஹிந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், ஹிந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத் தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர் களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த ‘Holy land’ என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

இந்தியாவை முழுவதுமாக `ஹிந்து மயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்கு வது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர் களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதி காரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத் தன்மை யைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர்.

சமூகத்தைப் பிளவுபடுத்தி பார்த்தவர்

`Hinduise all politics, Militarize Hinduism’  என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலைச் செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், ஹிந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others’  என்று அழைத்து, `ஷிமீறீயீ’ எனப்படும் ஹிந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக் கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பவுத்தர்களைக் கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பவுத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, ‘Hindutva : Who is a Hindu’ புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் ‘Mein kampf’ என்ற புத்தகத்துக்கு இணையானது!

சாவர்க்கரின் ஹிந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது ஹிந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பதாகும்.

இத்தனைக்கும், சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும் கூட அவருக்குக் குறைவுதான். Agnostic   வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோது கூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்டக் குரல் கொடுத்திருக்கிறார். 1939இல் டில்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றி யைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே ஹிந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார்.

கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டு மானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! ஹிந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு ஹிந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.

சாவர்க்கரின் ஹிந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்ஜாதி ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்து வதாகவே அது இருக்கும். ஏனென்றால், ஹிந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறார் சாவர்க்கர். அந்த ஹிந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும் கூட ஹிந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே! `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தைத் துறந்துவிட்டு, ராம வழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த ஹிந்து மதத்தை, ஜாதி தான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக் கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே! ஆங் கிலத்தில் `Escapism’ என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல் வாதம்!

இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை ஹிந்துக்களாக ஏற்றுக் கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. ஹிந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர் களின் கடமை அடுப்பங்கரை, குழந்தைகளைப் பார்த் துக்கொள்ளுதல் மட்டுமே!’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தாலும், அவரை அங்கீகரிப்பதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன.

முதலாவது, அடிமைப்படுத்திய ஆங்கிலேயனி டமே `நான் உங்கள் சேவகன்’ என்று அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இரண்டாவது, `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன’ என்று ஜின்னாவுக்கு பாயின்ட் எடுத்துக் கொடுத்ததும் கூட அவரேதான். மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, காந்தியார் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முதல் மன்னிப்புக் கடிதம்!

1911ஆம் ஆண்டு ஜூன் மாதம், அந்தமான் செல்லுலார் சிறையை வந்தடைகிறார் சாவர்க்கர். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன் கொலைக்கு, அவர் தூண்டுதலாக இருந்தார் என்பது வழக்கு. அப்போது, `ஆபத்தான கைதி’ என்று அவருக்கு அடையாளம் இடப்பட்டது உண்மைதான். ‘D’ என்பது அந்த கோட்வேர்ட். ஆனால், சாவர்க்கர் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவராக ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை என்பதுதான் முரண்பாடு.

சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம் பித்து விட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை.

ஆனால், 1913இல் அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில், `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. `To : The home member of the government of India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்...’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.

பகத்சிங்

சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையிலிருந்து 1931ஆம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், `உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்து கிறது. ஆம், நாங்கள் போர்க்கைதிகள்தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப் பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்’ என்று, அறி வித்தான் அந்த 23 வயது இளைஞன்.

அடுத்து, `இந்தப் போர் தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, `எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்’ என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர். கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக் கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்’ என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.

கடிதம் முழுவதுமே அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. குருதி முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக் குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த் தைகள். உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்!

அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க் கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுப விக்கிறேன்... கருணை காட்டுங்கள்... நல்ல படியாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர். இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்’ என்றெல்லாம்கூட ஆங்கிலேயர்களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.

1924இல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்’ என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர். `நான் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்து கொள்கிறேன்...’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார்.

சிறையிலிருந்து வெளியேவந்த பிறகுதான் ``Hindutva: Who is a Hindu’ புத்தகத்தையே எழுதினார். அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது. ஜின்னாவுக்கும் அது ‘ரெஃப்ரன்ஸாக' மாறியது.

1926இல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது - பெயர், `Life of Barrister Savarkar’. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்ன வென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர் தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை. எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுயவரலாறு எல்லோரும் எழுதுவதுதான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர். இதுதான் அவரது நேர்மை!

`அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்’ என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியே வந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழுவீச்சில் செய்யவும் இல்லை. மழைக்குப் பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக் கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார். ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவர மாக விலகி நின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

(தொடரும்)


No comments:

Post a Comment