முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், ஹிந்தி எதிர்ப்பு மொழிப் போர் தியாகியும், தீவிரமான கொள்கைப் போராளியுமான திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் மானமிகு தோழர் ஓவியர் சிவகாசி மணியம் (வயது 90) அவர்கள் 9.11.2022 மாலை சிவகாசியில் மறைந்தார் என்ற செய்தியை மாவட்டத் தலைவர் திருப்பதி மூலமாக அறிந்து மிகவும் துயரமும், துன்பமும் அடைகிறோம்.
தோழர் மணியம் அவர்களை நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அறிவேன்; சிவகாசி பகுதியில் கறுப்புச் சட்டைக்காரராக, பெரியார், அண்ணா, கலைஞர், நம்மிடமும் மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட தோழராகவும் திகழ்ந்தவர். பல கூட்டங்களில் அவரை பெருமைப்படுத்துவதை கடமையாகக் கொண்டவர்கள் நாமும், நமது தோழர்களும்.
அவரது கட்டுக்கடங்காத கொள்கை உணர்வும், போராட்டக் குணமும் எடுத்துக்காட்டானவை.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; கொள்கைக் குடும்பமான நமது இயக்கத்திற்கும்கூட பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி வெற்றிச்செல்வி மற்றும் குடும்பத்தினர், கழக உறவுகள் அனைவருக்கும் ஆறுதலும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
குறிப்பு: அவரது உடல் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 'உடற்கொடையாக' அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment