ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்லவாம்! கூறுகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்லவாம்! கூறுகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

 திருவனந்தபுரம், நவ 17 ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை என்று திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் லோக் அயுக்தா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- லோக் அயுக்தா சட்டம் அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஒன்றாகும். இந்த சட்டத்தை யாரும் பலவீனப்படுத்தக்கூடாது. எந்த வகையிலும் அதற்கான முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. இதனை மீறி லோக் அயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அந்தந்த மாநில ஆளுநர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் ஆளுநர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை உச்சநீதிமன்றமும் தெளிவுபடுத்தி உள்ளது. ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? அவர்கள் ரப்பர் ஸ்டாம்புகளா? என தீர்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் அமைப்பில் கவர்னர்களின் அதிகாரம் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் தேவை. நீதித்துறை, லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் மீது மக்கள் இப்போது நம்பிக்கை வைத்து உள்ளனர். அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாப்பது நமது கடமை என்று அவர் கூறினார். இந்த விழாவில் நீதிபதி சிரியக் தாமஸ், கேரள சட்ட அமைச்சர் ராஜீவ், எதிர்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கேரளாவில் லோக் அயுக்தா சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு கவர்னர் கையெழுத்து போடவில்லை. இந்த நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜீவ்  பேசினார். அதனை விமர்சிக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் பேசியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment