ஒன்றிய பாஜக அரசுக்கு புதுச்சேரி - மாணவர்கள் கூட்டமைப்பு கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

ஒன்றிய பாஜக அரசுக்கு புதுச்சேரி - மாணவர்கள் கூட்டமைப்பு கண்டனம்

புதுச்சேரி,நவ.23- புதுச்சேரி - மாணவர்கள் கூட்ட மைப்பு சார்பில் சீ.சு.சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

நவம்பர் 26 சட்ட நாளில் மன்னராட்சியின் மேன் மைகள், வேதங்கள், மனுஸ்மிருதி , அர்த்தசாஸ்திரங்கள், இதிகாச புராண கதைகளின் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழுவின் சுற்றறிக்கை கூறியிருப்பது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இத்தகைய அறிவிப்பு கூட்டாட்சி இந்திய தேசத்தின் ஒற்றுமையை சிதைத்தெடுக்கும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. முக்கியமாக கல்விக்கூடங்களை காவிமய மாக்கி கல்வி பயிலும் இளம் உள்ளங்களில்  மத நஞ்சை கலந்து இளம் சிறார்களின்  சிந்தனையை மத வெறுப்பு அரசியலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க ஒன்றிய அரசு செயல்படுவது என்பது மதச்சார்பற்ற இந்திய தேசத்தின் ஒற்றுமையை சிதைத்து விடும். 

மன்னர் ஆட்சியின் மேன்மை, வேதங்கள், மனுஸ் மிருதி, அர்த்த சாஸ்திரங்கள் இதிகாச புராணக் கதைகளில் ஜனநாயகம் எங்கு இருக்கிறது என்ற கேள்வியை பல்வேறு தலைவர்கள் எழுப்பி உள்ளது போல் இன்று நாங்களும் எழுப்புகிறோம்.

ஜனநாயகத் தன்மை இல்லாத வேதங்கள் சமஸ் கிருதங்கள் புராணக் கதைகளை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வது ஏன் அதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய அரசு இறையாண்மை உள்ள சமதர்ம மதசார்பற்ற ஜனநாயக குடியரசாகவே இயங்கும் என்பதற்கு மாறாக  இன்று ஒரே நாடு ஒரே மதம் என்ற அடிப்படையில் கொண்டு செல்ல மதவாதத்தை இங்கு இளம் தலைமுறை மத்தியில் திணிக்கும் இத்தகைய போக்கினை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்க வேண்டிய நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஒன்று திரள வேண்டிய அவசியம் உள்ளதை அனைவரும் உணர வேண்டும் புதுச்சேரி  முதலமைச்சர் ஒன்றிய பல்கலைக்கழக மானிய குழுவின் சுற்றறிக் கையை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment