சென்னை,நவ.3- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நேற்று (2.11.2022) சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மம்தாவுக்கு பொன்னாடை போர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களாட்சி தொடர்பான ஆங்கிலப் புத்தகம் மற்றும் தஞ்சாவூர் ஓவியத்தைப் பரிசளித்தார். அப்போது மம்தா, தான் எடுத்துவந்த இனிப்பு வகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின், மம்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘‘மம்தா பலமுறை சென்னை வந்துள்ளார். முரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலையை அவர் திறந்துவைத்தது பெருமைக்குரியது. மேற்கு வங்கத்துக்கு தனது விருந்தினராக வருமாறு மம்தா அழைப்பு விடுத்துள் ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை’’ என்றார்.
மம்தா கூறும்போது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு சகோதரரைப் போன்றவர். இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. மு.க.ஸ்டாலினை சந்திப்பதை என் கடமையாகக் கருதுகிறேன். இரு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கும் போது, ஏதாவது விசயங்கள் பேசியிருப்போம். அரசியல் பேசுவதைவிட, வளர்ச்சி பற்றி பேசுவதே சிறந்தது. வேறு கட்சியின் செயல்பாடுகள் குறித்தோ, மாநிலங்களில் ஆளுநர் தலையீடு குறித்தோ நாங்கள் பேசவில்லை. நாங்கள் பேசியது அரசியலா அல்லது சமூக, கலாச்சார ரீதியிலானதா என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுகிறேன்" என்றார்.
No comments:
Post a Comment