சென்னை,நவ.25 அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்களை மீண்டும் தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை ஒன்றிய மருத்துவக் கலந்தாய்வு குழு நிரப்பி வருகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு மீதமாகும் இடங்களை மாநில அரசிடமே ஒப்படைப் பது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டில் அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இறுதி வரை அந்த இடங்கள் ஒப்படைக்கப் படாததால், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 24-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் வீணாகின. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னர் அவை நிரப்பப்பட்டன.
இந்தச் சூழலில், பழைய நடைமுறைப்படி, நிரப்பப்படாத இடங்களை மீண்டும் மாநிலங்களுக்கு ஒப்படைக்குமாறு தமிழ் நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அடுத்த மாதத்தில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு அரசு சார்பில் சந்திக்க டில்லி செல்ல உள்ளோம். அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் விவகாரம் குறித்து பேசப்படும். நிரம்பாத இடங்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்போம் என்றார் அவர்.
No comments:
Post a Comment