எழுத்தாளர் ஓவியா
பெரியார் எனும் சொல் இன்று படித்த பெண்களனைவரையும் ஈர்க்கும் மகுடிச் சொல்லாகி விட்டது. அதுவும் குறிப்பாக திராவிட இயக்கத்திற்கு எதிர் முகாமிலிருக்கும் பெண்கள் கூட யாரை எதிர்த்துப் பேசினாலும் பெரியார் என்கின்ற சொல்லில் கட்டுப் பட்டு விடுகிறார்கள். இதனை நாம் எத்தனையோ முறை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். பெரியாருக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்குமான இந்த உறவுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. 13 வயதில் என்னை விதவையாக்கிக் கொடுமை செய்கிறீர்களே என்று தன் காலில் விழுந்து கதறிய தன் தங்கை மகளைத் தூக்கி நிறுத்தும்போது இந்தத் தமிழ்நாட்டுப் பெண்ணினத்தை அது அதுகாறும் அனுபவித்து வரும் சொல்லொண்ணா இன்னல்களிலிருந்தும் இழிநிலைகளிலிருந்தும் விடுவிப்பேன் என் வைராக்கியம் பூண்டு அவ்விதமே இப்பாரில் தன்னிகரற்ற சேவையாற்றி வரலாற்றில் நிலை நின்று விட்ட தலைவர் பெரியாரை அவருக்குரிய மரியாதையுடன் ஏற்று பெருமிதம் கொண்ட தமிழ்நாடு பெண்கள் 1938இல் நடத்திய சிறப்பு மிக்க மாநாட்டைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.
13.11.1938
தமிழ்நாடு வரலாற்றில் , தமிழியக்க வரலாற்றில், பெண்கள் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட நாள் 13.11.1938. இந்த நாளில்தான் தமிழ்நாடு பெண்கள் மாநாடு கூட்டப்பட்டது. சென்னை ஒற்றைவாடை அரங்கில் இந்த மாநாடு கூடியது. 5000 பெண்கள் இந்த அரங்கில் கூடியிருந்தார்கள். அரங்கிற்குள் இடமில்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கில் ஆண்கள் வெளியில் நின்று மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம் பெண்கள் கல்வியறிவின்றி முடங்கிக் கிடந்த அந்த நாளில்.. கைப்பிள்ளைகள் கைம்பெண்களாகவும் இருந்த கொடுமை கோலோச்சிய அந்த நாளில். பொம்பிளை சிரிச்சாலே போச்சு போச்சு என்று அயோக்கியர்கள் ஆர்ப்பரித்திருந்த அந்த நாளில். பெண்களை பொட்டு கட்டி தேவதாசிகளாகக்கி, கலையை வாழ வைக்கிறோம் என்று சல்லாபம் பேசியவர்கள் நிமிர்ந்து நின்றிருந்த அந்தக் காலகட்டத்தில் எப்படி அய்யாயிரம் பெண்கள் திரண்டார்கள் என்று இன்று நினைத்தாலும் வியப்பில் திகைத்து விடுகிறோம் நாம். அதிலும் முக்கியமான மற்றொரு விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களல்ல; இவர்கள் தங்கள் இனமானப் பெண்களின் உரிமைக்கு மட்டும் கூடியவர்களுமல்ல. இவர்கள் அனைவரும் பெண்ணுரிமைப் போராளிகளே. ஆனால், அன்றைய தினத்தில் இவர்களை இணைத்திருந்த உணர்வலை மொழி உரிமைப் போராட்டம். ஆம். அதற்கு மறுநாள்தான் (14.11.1938) இந்தி எதிர்ப்பு ஊர்வலம் அதே பெண்களால் மிகுந்த எழுச்சியோடு நடத்தப்பட்டு அவர்களில் பல பெண்கள் சிறையேகினர். அவர்களை அந்த அளவு உணர்ச்சியூட்டிய உரையை நிகழ்த்தியது குற்றம் என பெரியார் மீது வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.
தமிழக மண்ணில் மிகப் பெரிய பெண்ணுரிமைப் போர் பிற எந்த நாடுகளிலுமில்லாத முன்மாதிரியோடு நடந்திருக்கிறது என்பது நாம் ஊன்றிக் கவனித்து பாடம் பெற வேண்டிய உண்மை என்பதற்கு இந்த மாநாடு மலையென சாட்சி பகர்கிறது. இந்த மாநாட்டின் பொருளமைவு பற்றி கூறுமுன்பாக இதில் கலந்து கொண்ட பெண்மணிகளின் சிறப்பறிய வேண்டும்.
திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலை அடிகளாரின் மகள்) மாநாட்டின் தலைவர்
தனித் தமிழ் இயக்கத்தின் செயற்பாட்டாளர் அவ்வியக்கத்தைத் தோற்றுவித்த அறிஞர் மறைமலையடிகளாரின் மகள். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நேசித்தவர். பெரியார் நடத்திய ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமண முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர். இவரே இந்த பெண்கள் மாநாட்டின் தவைராவார்.
தாமரைக்கண்ணி அம்மையார்
இவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இவருடைய துணைவர் மத்திய அரசுப் பணியிலிருந்து கொண்டே "தெரு விளக்கு" எனும் இதழ் நடத்தினார். இருவரும் இணைந்து பயணித்தனர். நாவலாசிரியர். பெரியாரின் சமுதாய சீர்திருத்த பணிகளில் முக்கியமாக பெண்களுக்கான உரிமைச் செயற்பாடுகளில் பங்காற்றியவர். இவர்தான் இந்த மாநாட்டைத் திறந்து வைத்தவர்.
பண்டிதை நாராயணியம்மையார்
பண்டிதர் என்கின்ற ஆண்பால் சொல்தான் நமது வரலாற்றுப் பக்கங்களை நிரப்பியிருக்கிறது. அதில் பண்டிதை என்கின்ற முன்னொட்டுடன் திகழ்ந்த பெண்மணியின் கல்விப் புலமையை சொல்லவும் வேண்டுமோ? பெரியாரை நேசித்த பெண்களில் பெரும்பாலோர் கல்வியில் மேம்பட்டிருந்தனர்.
மருத்துவர் தர்மாம்பாள்
இவர் சாதாரண மருத்துவரல்ல, சமுதாய மருத்துவர். பல பெண்களின் வாழ்க்கையை மீட்டுத் தந்து ஆலமரமாய் நின்றவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை அவர் மாட்டிக் கொண்ட வழக்கொன்றிலிருந்து லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று மீட்டவர் என்றால் அவர் எவ்வளவு வலிமை மிக்க பெண்மணி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? புரட்சிகர வீராங்கனை இவர்!
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
தேவதாசி முறை ஒழிப்புக்காக தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனைகளை நிகழ்த்தியவர். அரசியல் பொது வாழ்வில் பெரியாரின் முழுமையான தொண்டராக சிங்கமென வலம் வந்த புரட்சியின் இலக்கணம்.
மீனாம்பாள் சிவராஜ்
மேலைநாட்டுக் கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் பொருந்தியவர். செல்வமும் வளமும் கொண்ட இவர் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் பிற்காலத்தில் அறிஞர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட பெருமைக்குரியவர். இணையர் சிவராஜ் அவர்களுடன் இணைந்து அரசியற் பணிகளில் ஈடுபட்டவர். தொடக்க காலங்களில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பயணித்தவர். மாநாட்டின் வரவேற்புக் குழு இவரையே அன்று அம்மாநாட்டில் தமிழ்க் கொடியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்ள அவர் ஏற்றி வைத்தார்.
மேலும் மாநாட்டுப் பொறுப்பாளர்களாகிய பெண்களும் மலர்முகத்தைம்மையார், பார்வதி யம்மாள் கலைமகளம்மையார் ஆகிய வீரப் பெண்களும் தலைவர் பெரியாருடன் ஊர்வலமாக இந்த மாநாட்டிற்கு வந்து சேர்ந்தனர். தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! என்கின்ற முழக்கங்கள் விண்ணை முட்டின. பெண்கள் தமிழ்க் கொடியை ஏந்தி வந்தார்கள், ஊர்வலத்தில் இரண்டாயிரம் பெண்கள் கலந்து கொண்டார்கள். வெறும் சுயமரியாதை இயக்கப் பெண்கள் மட்டுமல்ல அன்று தமிழ்நாட்டில் தமிழ் மண்ணுக்கான அரசியலையும் சுயமரியாதை அரசியலையும் முன்னெடுத்த அனைத்துப் பெண் மாமணிகளும் கலந்து ஓருணர்வாய் ஒருமித்து நின்றார்கள், முகப்பு நிகழ்வாக அன்னை நாகம்மையார் அவர்களின் திருவுருவப் படம் திறந்து வைக்கப் பட்டது.
மாநாட்டின் தீர்மானங்கள்
இந்த மாநாடு தனது முகாமையான தீர்மானமாக வரலாற்று சிறப்பு மிக்க அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. பெரியாரை இனி பெரியார் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கேட்டுக் கொண்டது. அதனைப் பற்றி நாம் அறிந்தும் புரிந்தும் தெளிய வேண்டும்,
ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்று தமிழகத்தின் அரசியல் அரங்கில் அறிமுகமான பெரியார் 1927ஆம் ஆண்டே தனது ஜாதிப் பெயரை நீக்கி விட்டார். அதன்பின் மக்கள் அவரைப் பெரியார் என அழைக்கலாயினர். 1938இல் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு தனது முதல் தீர்மானத்தை இவ்விதம் நிறைவேற்றியது:
"இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது."
ஆம். பெரியார் என்கின்ற பட்டத்தை இம்மாடு முதன்முறையாக அளிக்கவில்லை. மாறாக ஏற்கனவே நிலவி வந்த அந்தப் பட்டத்தை மட்டுமே அதாவது பெரியார் என்கின்ற சொல்லை மட்டுமே அவரைக் குறிக்க பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இது சாதாரண அன்பு அல்ல. பேரன்பு. பெருநன்றிப் பெருக்கு!
ஏன் அந்த நன்றிப் பெருக்கு?
• 1921களில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுழன்றடித்து பெரியார் நடத்தி வந்த பெண்ணுரிமைப் பிரச்சாரம்.
• பிறர் பேச அஞ்சியதையெல்லாம் சிதறு தேங்காய் உடைத்தது போல் சிம்ம கர்ஜனையாக பேசி பிறரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் செங்குத்தான மலை போல் ஏறுவது போல் கருத்தேணியைக் கட்டி எழுப்பிய புரட்சியின் பெரும்புயல்.
• மனித இனத்தைக் காப்பாற்றணும்ங்கறதுக்காக பொம்பிளை உனக்குப் பிள்ளை பெத்துக் கொடுத்து, உன் அடிமையாவே வாழணுமா என்று அகிலம் கேட்டிராத குரலை எழுப்பிய எரிமலை.
• கொத்தடிமையாய் வாழ்ந்த பெண்ணிடம் ‘உன்னை ‘என்னடி’ன்னு சொன்னா நீ திருப்பி ‘என்னடா’ன்னு கேளு' என்று மணமேடையில் வைத்து சுயமரியாதையின் அரிச்சுவடி கற்றுத் தந்த பெருந்தந்தை.
• நாய்க்குக் கட்டுற மாதிரி லைசென்சு கட்டுவியா நீ என்று கேட்டு தாலிகளைப் பறித்தெறிந்து விடுதலைப் பயிர் நட்ட மாமனிதன்.
• ஆண் பெண் சேர்க்கையின்றி குழந்தைகள் பிறக்கும் காலம் வருமென்று சொன்ன சமுதாய விஞ்ஞானி.
• தொலைதொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் கணித்த தொலைநோக்காளர்...
வேறெப்படிச் சொல்வது நன்றியை... பெரியார் என்றால் நீ ஒருவர்தானய்யா பெரியார்ஞ்ஞ் உனக்கீடாக வேறெவரையும் காண இயலவில்லையே என்று பொங்கியெழுந்த நன்றிப் பெருக்கை தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் தீர்மானமாக வடித்தனர். இன்றும் நாங்கள் (தமிழ்நாட்டுப் பெண்கள்) அந்தத் தீர்மானத்தின் வரிகளை எங்கள் நாடி நரம்புகளில் எழுதி வைத்திருக்கிறோம்.
இந்த மாநாட்டை நினைவு கூர்கின்ற வேளையில் பெரியார் என்கின்ற பட்டம் அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒரு மாபெரும் பெண்கள் இயக்கத்தால் அளிக்கப் பட்டது என்பதையும் நாம் சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும். இது ஏதோ ஒருசில பெண்களின் தனிச் செயலல்ல. அந்த மாநாடு மூன்று முக்கிய நோக்கங்களை தனது தீர்மானங்கள் வாயிலாக முன்வைக்கிறது.
ஒன்று, பெண்களுக்கான மறுமணம். இரண்டு, ஜாதியொழிப்பு. மூன்று, இந்தியை எதிர்த்தும் தமிழ் மொழிக் காப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கான ஆதரவு. மேலும் அந்த மாநாடு அப்போது இந்திய மாதர் சங்கம் இந்திக்கு ஆதரவாக இருந்தமைக்கான கண்டனங்களையும் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பான்மையான முன்னணிப் பெண்கள் மறுநாள் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறையேகி வரலாறு படைத்தனர்.
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் பெண் விடுதலை அமைப்புகள் தங்கள் முன்னோடிகளாக இந்தப் பெண்களை நிறுத்தி தங்கள் இயக்கப் பணிகளை அமைத்திட வேண்டும். 1970களிலிருந்து கிட்டத்தட்ட 1990கள் வரை கட்டப்பட்ட பெண்ணுரிமை இயக்கங்கள் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணவில்லை. இன்றும் கூட இப்பெண்களைப் பற்றிய அறிதல் பெண் விடுதலை பேசுவோர் மத்தியில் மிகக் குறைவாகவே இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாற்றையும் பெண்கள் தேட வேண்டும். அந்த அடிச்சுவடுகளிலிருந்து இம்மண்ணுக்குத் தேவையான பெண்ணுரிமை இயக்கங்களைக் கட்டியெழுப்பிட வேண்டும்.
(நன்றி: தரவுகள் தந்த "விடுதலை" மலருக்கு.)
No comments:
Post a Comment