எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைப்பிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா?
அ.தி.மு.க. தனது கட்சிக்கு முடிவுரை எழுதப் போகிறதா? சிந்திக்கட்டும்!
சமூகநீதிக் கொள்கையை கைவிட்டு, பா.ஜ.க. வின் ‘உயர்ஜாதி கண்ணிவெடி'யில், ஆர்.எஸ்.எசுக் குத் துணைபோகும் விதத்தில் அ.தி.மு.க.வில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடந்துகொள்ளலாமா? ஒரு மாபெரும் கட்சியை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விடம் அடகு வைப்பதுபோல நடந்துகொள்ளலாமா? அ.தி.மு.க. விற்கு இதன்மூலம் ஏற்படும் கறை அழிக்கப்பட முடியாத கறையாகும்; தங்கள் தவறைத் திருத்தி, சரியான பாதைக்கு வர முயற்சிக்கட்டும் அவர்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:உயர்ஜாதியினரில் உள்ள நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும், உத்தியோகங்களிலும் (அரசு துறைகளில்) என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தையே தகர்க்கும் வகையிலும், காலங்காலமாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தவர் - எஸ்.சி., எஸ்.டி., ஆகியவர்களுக்கும், ஓ.பி.சி. என்ற தலைப்பில் உள்ள பிற்படுத்தப்பட் டோருக்கும் இட ஒதுக்கீடு பெறும் வகையில்தான் 15(4) என்ற முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால்
நேரு அவர் களும், அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப்படுத்த சரியான அளவுகோல்களாக ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்' என்ற வாசகத்தினை அதில் அமைத்தனர்.
தங்களது நீண்ட கால ஆசையை
நிறைவேற்றிக் கொண்டனர்
இதற்கு ஏற்பட்ட அவசியம் என்ன? என்பதை இன்றைய சமூகநீதி வரலாறு தெரியாதவர்கள் கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வது போல பொருளாதார அடிப்படை என்ற ஒரு பார்ப்பன ‘மாயமானை' அனுப்பி, 1928 முதல் தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணத்தில்) நீதிக்கட்சி ஆதரவு அரசினால் செயல்படுத்தப்பட்ட வகுப்புரிமையை (கம்யூ னல் ஜி.ஓ.) செல்லாது என்று 1949 இல் உருவாக்கப்பட்ட அர சமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டு, உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றத் திற்குச் சென்று, தங்களது நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்; அரசமைப்புச் சட்ட வரைவு எழுதிய குழுவினர் அறுவரில் ஒரு முக்கிய உறுப் பினராகிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே, ஒரு பார்ப்பனப் பெண்மணிமூலம் வழக்குப் போட வைத்து அதன்படி கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறவும், மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றம் அதையே உறுதி செய்தது.
தந்தை பெரியார் ஒரு மாபெரும்
மக்கள் கிளர்ச்சியை நடத்தியதன் விளைவாக...
அதை எதிர்த்துதான் தந்தை பெரியார் 1950 இல் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியை நடத்தியதன் விளைவாக, மேலே கூறப்பட்ட முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் பிரதமர் நேருவால் அன்று கொண்டுவரப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949, நவம்பர் 26 இல் வழங்கப்பட்டு, 1950 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசாக மலருகிறது!
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
1950-லேயே மேற்காட்டிய வகுப்புரிமை ஆணை செல்லாது என்று வழக்குப் போட்டனர். அதற்கு அரசமைப்புச் சட்ட வரைவு கர்த்தாக்களில் முக்கிய மானவர் என்று கருதப்படும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதாடியது எல்லாம் என்ன தற்செயலாக நிகழ்ந்த சம்பவமா? எவ்வளவு முன்கூட்டியே திட்டமிட்டிருக் கிறார்கள்?
பொதுவாக அவ்வளவு பிரபலமாகி பெரும் நிலையில் இருந்தவர் எவராவது (வழக்குரைஞர்கள் அறிவார்கள்) இப்படி வாதாட முன்வருவதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோமா?
வகுப்புரிமையை ஒழிக்கவே இது திட்டமிடப்பட்டது!
முதலமைச்சர் ஓமாந்தூராரின் பெரும் பங்கு!
அதற்கு முன்பேகூட 1945-1946 இல் ஆந்திர பார்ப்பனர் பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராக ஓராண்டு இருந்தபோது - அவரது நெருங்கிய சகாவான தென்னோட்டி விசுவநாதன் என்ற பார்ப்பனர் (காங்) கம்யூனல் ஜி.ஓ.வை ரத்து செய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் (ஆந்திரா இணைந்திருந்தது அப்போது) தொடர்ந்து முயற்சித்தார். அம்முயுற்சி சட்டசபையில் தோற்றுப் போனது என்பதும் பழைய வரலாறு! 1947 இல் முதலமைச்சர் ஓமாந்தூரார், அந்த முயற்சிகளை முறியடிப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர் ஆவார்!
அதன் தொடர்ச்சிதான் அண்மைக்கால (EWS Quota) என்ற இந்தப் பொருளாதார அடிப்படை என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பற்றவர்களுக்கு கல்வி, அரசுப் பணியில் உதவக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு, சமூகநீதி என்பது!
பந்தி முழுவதையும் புளியேப்பக்காரர்களே ஆக்கிரமிக்கும் நிலை!
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய 23.5, 27 சதவிகிதம்கூட, கல்வியில், உத்தி யோக இடங்கள்கூட இன்று வரை கிடைக்காத நிலையில், புளியேப்பக்காரர்களே பந்தி முழுவதையும் ஆக்கிர மித்துக் கொண்டு, பசியேப்பக்காரர்களாக உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.,காரர்களுக்குப் பட்டை நாமத்தையே சாத்தி வருகின்றனர்.
புள்ளி விவரங்கள் இதனைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
இதற்குப் பரிகாரம் தேடத்தான் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கம் இருந்தது - இருக்கிறது!
எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்!
இதனை அடையவேதான் காங்கிரசில் சேரும் முன்பே தனியே ஒரு சமூகநீதி அமைப்பைப் பெரியார் நடத்திட துணை நின்றார்!
பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உழைத்து, வகுப்புவாரி உரிமைக்காக ஆண்டுதோறும் முயற்சித்தும் தோல்வி கண்டதால், 1925 இல் காஞ்சிபுரத்தில் வெளி யேறி, தனியே சுயமரியாதை இயக்கம் கண்டார்.
தான் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டே நடந்தார் என்பது வரலாறு!
இந்த நிலையில், அண்ணா பெயரைக் கொண்ட அ.தி.மு.க., இந்த சமூகநீதியை ஆழக் குழிதோண்டிப் புதைக்க, முன்னோட்டமான பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை முன்னேறிய ஜாதி பார்ப்பனர்கள் முதன்மை லாபம் பெறும் நிலையில் பா.ஜ.க.வுக்குத் துணை போகிறது!
ஆர்.எஸ்.எசுக்குத் துணைபோகும் விதத்தில்
எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடந்துகொள்ளலாமா?
பொருளாதார அடிப்படையை தவறாகப் புகுத்திய தற்குக் கடும் எதிர்ப்பினை திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில காங்கிரஸ், ஜனதா நண்பர்கள் இணைந்து மேற்கொண்ட தொடர் எதிர்ப்பினால் ஏற்பட்ட தேர்தல் தோல்வி உள்பட பலவற்றினால்,அதன் பிறகு தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 68 சதவிகிதமாக ஆக்கினார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, கலைஞர் 69 (68+1) சதவிகிதமாக ஆக்கிய நிலையில், பின்னர் அதற்குப் பாதுகாப்பு - நமது ஆலோசனையை ஏற்று செயல்பட்டு தனிச் சட்டமாக (ஆணையாக அல்லாது) நிறைவேற்றி, ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு - அரசமைப்புச் சட்டம் 76 ஆவது திருத்தமாக்கிய முதலமைச்சர் செல்வி ஜெய லலிதா ஆகியோர் பின்பற்றிய சமூகநீதிக் கொள்கையைக் கைவிட்டு, பா.ஜ.க.வின் உயர்ஜாதி கண்ணிவெடியில், ஆர்.எஸ்.எசுக்குத் துணைபோகும் விதத்தில் அ.தி.மு.க. வில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடந்துகொள்ளலாமா?
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வில்லுக்கு
அம்பாக மாறிடலாமா?
மேனாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பி.எஸ்., கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன் போன்றவர்களும் எடுத்து விளக்கியுள்ளதற்கு மாறாக சட்டமன்ற, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வில்லுக்கு அம்பாக மாறிடலாமா? அது அவர்கள் கூறும் ‘‘எம்.ஜி.ஆர்., அம்மா'' ஆட்சிவழியா? சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
எனவே, ஒரு மாபெரும் கட்சியை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விடம் அடகு வைப்பதுபோல நடந்துகொள்ள லாமா?
அ.தி.மு.க.விற்கு அழிக்கப்பட முடியாத
கறை ஏற்படும்!
அத்தொண்டர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும். அ.தி.மு.க. விற்கு இதன்மூலம் ஏற்படும் கறை அழிக்கப்பட முடியாத ஒன்றே!
அதன் முடிவுரையை எழுத இதுபோன்ற கொள்கைக் குழப்பங்கள் தூண்டுதலாகிவிடும் என்பதை எச்சரிக்கை செய்வது, நம்மைப் போன்ற சமூகநீதிப் போராளி இயக்கத்தவரின் தலையாய கடமையாகும்!
சிந்தித்து, தங்கள் தவறைத் திருத்தி, சரியான பாதைக்கு வர முயற்சிக்கட்டும் அவர்கள்!
எப்போது உங்களை பா.ஜ.க.விடமிருந்து ‘‘மீட்டுக் கொள்ளப் போகிறீர்கள்?'' என்பதே நம் கேள்வி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16.11.2022
No comments:
Post a Comment