அறுந்து தொங்கும் குஜராத் மாடல்!
'முரசொலி' தலையங்கம்
குஜராத் மாடல் என்று பீற்றிக் கொள்கிறார்களே.. அது என்ன என்பதை மோர்பி நகர் மச்சு ஆற்றில் தொங்கும் பாலம் அறுந்து தொங்கியதன் மூலமாக இந்தியா அறிந்து கொண்டது. இவர்களது அரசியல் அலட்சியத்துக்கு அப்பாவிப் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியான துயரம் தான் சோகமானது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழைமையானது இந்தப் பாலம். சிதிலம் அடைந்த இந்த பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக அங்கு நடந்து வந்தது. இந்த பாலத்தை குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26 அன்று திறந்து வைத்துள்ளார்கள். விடுமுறை தினமான 30.10.2022 ஞாயிறு அன்று அந்த பாலத்தைப் பார்க்கவும், பயணம் செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தார்கள். அப்போது அந்தப் பாலம் அறுந்து விழுந்தது. இது குஜராத் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜாவின் தொகுதிக்கு உட்பட்டது ஆகும்.
1879 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் இது. 230 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட தொங்கும் பாலம் ஆகும். இதனை மீண்டும் செப்பனிட்டு தனது சாதனையாகக் காட்ட நினைத்தது மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு.
குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறந்துள்ளார்கள். இதனை உடனடி யாகத் திறப்பதற்கு துறையின் அதிகாரிகள் முறையான அனுமதி தரவில்லை என்றும் சொல்லப் படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பாலத்தில் சில குறைபாடுகள் இருந்ததால் தடையில்லா சான்றிதழ் வழங்கப் படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
குஜராத் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. தான் இந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணத்துக்கு பொறுப் பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
‘’மக்களின் உயிரோடு விளையாடும் விபரீத விளையாட்டை பா.ஜ.க., இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்’’ என அக்கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன. “தேர்தல் ஆதாயத்துக்காக அவசர, அவசரமாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டதாலேயே குஜராத் தொங்குபாலம் அறுந்து விழுந்து 140க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தார்கள்” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
“140 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் களால் கட்டப்பட்ட இந்தப் பாலம் பயன்படுத்தப் படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்தப் பாலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டு இருந்தது. இதற்குக் காரணம் அதற்கு சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் எந்தவிதமான அனுமதியும் வழங்கவில்லை. பாலத்தில் சில குறைபாடுகள் இருந்ததால் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட வில்லை. இதையெல்லாம் மீறி தேர்தல் ஆதாயத்துக்காக குறைபாடு உள்ள பாலத்தை திறந்து வைத்து 140க்கும் மேற்பட்டோரின் உயிர் களை பா.ஜ.க., அரசு பலி கொடுத்து விட்டது. உயிரிழப்புக்கு முழு பொறுப்பையும் பா.ஜ.க., அரசு ஏற்க வேண்டும். நாட்டு மக்களிடம் பா.ஜ.க., அரசு மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜ.க., ஆட்சியில் இருப்பதாகவும், ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இந்த பாலத்தை எப்போதோ சீர் செய்து திறந்திருக்க லாம் என்றும், ஆனால் இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது தேர்தல் ஆதாயம் கருதி பாலத்தை அவசர, அவசரமாக புதுப்பித்து திறந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரண மாகவே பாலம் அறுந்து விழுந்து 140க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலத்தை திறக்கும் முன் உரிய அனுமதியை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இப்போதுதான் தெரியவந்துள்ளது. பாலத்தை நிர்வகிக்கும் குழு மீது இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இவ்வளவு பேர் இறந்து போன பிறகு. வாய்கிழியப் பேசும் ‘அண்ணாமலைகள்’ இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள்.
திறக்கப்பட்ட நான்கு நாட்களில் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்றால் அதன் தரம் எப்படி இருந்திருக்கும் என்றும் அவர் வினவியுள்ளார். மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாததே இதற்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன. சிலர் குஜராத் மாடல்.. குஜராத் மாடல் என்று குதிக்கிறார்களே இதுதான் குஜராத் மாடல் ஆகும்.
* போதைப் பொருள் மய்யமாக இருக்கிறது குஜராத்.
* கள்ளநோட்டுகளின் குவியலாக இருக்கிறது குஜராத்.
* கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூலையில் 42 பேர் பலியானார்கள் ‘மதுவிலக்கு அமலில் உள்ள’ குஜராத்தில்.
* கூட்டுப்பாலியல் செய்து கொன்றதால் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்தது அந்த மாநில அரசு.
* லாக் அப் மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக அது இருக்கிறது.
குளுக்கோஸ் பாட்டிலில் சாத்துக்குடி ஜுஸை ஏற்றுவதும், சப்பாத்திக்கு உப்பு வைத்து மாணவர் களைச் சாப்பிட வைப்பதும் தான் உ.பி.யோகி மாடல் ஆகும். பாலம் அறுந்து அப்பாவிகளைப் பலியிடுவதுதான் குஜராத் மாடல் ஆகும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் உ.பி. போலவும், குஜராத் போலவும் மாற்றுவதற்குத்தான் துடிக்கிறார்கள்.
நன்றி: 'முரசொலி' 1.11.2022
No comments:
Post a Comment