வெற்றிக்கனி பறிக்க உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உளம் பூரித்த வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

வெற்றிக்கனி பறிக்க உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உளம் பூரித்த வாழ்த்து!

இளம் வீரர் - வீராங்கனை களைப் பக்குவப்படுத்தி திராவிடக் கொள்கை நாற்றுகளை உரு வாக்கும் பணியில் திட்டமிட்டு செயல்பட்டு -வெற்றிக்கனி பறிக்க உழைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உளம் பூரித்த வாழ்த்துகள்!  அணிவகுத்து பணி முடித்து வரலாறு படையுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க.வின் இளைஞரணி செய லாளர் செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அவர்களுக்கு இன்று (27.11.2022) 45 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதை அறிய திரா விடர் கழகமான தாய்க்கழகம் மிகுந்த பூரிப் பும், பெருமையும் அடைகிறது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறது.

நம்மைப் போன்ற பலருக்கு!

காரணம், அவர் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக, தி.மு.க. தலைமையால் நியமிக்கப் பட்டபோது, நம்மைப் போன்ற பலருக்கு, அவரால் அப்பணியை சிறப்புடன் செய்ய முடியுமா? காரணம், ‘‘அவர் திரைப்படத் துறை யில் ஒரு நடிகராகவும், தயாரிப் பாளருமாக அத்தொழிலில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருப்பதால், இப்பணியில் ஆர்வமும் காட்டி, உழைப்பைத் தர முடியுமா?'' என்று அய்யப்பட்டது உண்டு.

ஆனால், அந்த எண்ணம் தவ றானது என்பதை அவரது தொடர்ந்த துடிப்புமிகுந்த செயற்பாடுகள்மூலம் நிரூபித்து வருகிறார்!

அதைவிட ஒரு சீரிய கொள்கை வீரராகவும், பகுத்தறிவாளராகவும் கடமையாற்றி, உழைப்பின்மூலம் நாட்டோருக்குக் காட்டி வருகிறார்!

தொகுதி வாக்காளர்களை  மனநிறைவு அடையச் செய்கிறார்!

பிரச்சாரப் பணிகளைச் செம்மை யாகச் செய்து, திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பொறுப்பிலும் முத்திரைப் பதித்து, அத்தொகுதி வாக்காளர் களை மனநிறைவு அடையச் செய்கிறார்!

எல்லாவற்றிற்கும் சிகரம்போல, தி.மு. கழக இளைஞர்களுக்குத் திராவிடப் பாசறை அமைத்து, பயிற்சி வகுப்புகளை நன்கு திட்ட மிட்டு ஏற்பாடு செய்து திராவிடக் கொள்கை நாற்றுகளை உருவாக்கும் கொள்கை உணர்வுக் கொடி பறக்க நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைந்து வருகிறார்!

திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தப் பணிமூலமாக முக்கியத்துவம் பெறவேண்டிய கொள்கையை இளைஞர்களுக்குப் போதித்து விட்டால் - இயக்கம் இரும்புக் கோட்டையாகும்!

அவரை மீண்டும் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக நியமித்ததுடன், மக ளிரணி தொடங்கி எல்லா அணி களிலும் இளைஞர்கள், வாலிபர்கள், ஆற்றலாளர்களாக அடையாளம் கண்டு புதிய பொறுப்புகளைத் தந்து, இயக்கத்தினை வேக நடை போட வைத்து, செயல்வீரர்கள், வீராங் கனைகளாக்கிடும் சிறந்த தலைமை - ஆளுமைத் திறனுள்ள இன்றைய தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை தம் அருஞ்சாதனையாக்கி நல்ல நம்பிக்கையை நாளும் வளர்த்து வருகிறார்.

பதவிகள் அல்ல; பொறுப்புகள் இவை!

பதவிகள் அல்ல; பொறுப்புகள் இவை என்று உணர்ந்து, தொண் டாற்றும் நமது இளம் வீரர்களை, வீராங்கனைகளைப் பக்குவப்படுத்தி தளகர்த்தர்களாக்கிடும் பணியில் ஈடுபட்டு, வெற்றிக் கனி பறிக்க உழைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர் களுக்கு உளம் பூரித்த வாழ்த்துகள்!

அணிவகுத்து பணி முடித்து வரலாறு படையுங்கள்!

வாழ்க! வளர்க!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2022


No comments:

Post a Comment