புதிய விமான நிலையம் தேவை: அமைச்சர் தங்கம் தென்னரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

புதிய விமான நிலையம் தேவை: அமைச்சர் தங்கம் தென்னரசு


சென்னை, நவ 3 புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூரில் உள்ளூர் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்; பரந்தூர் விமான நிலையத்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.  சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 'பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி' என்ற தலைப்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

 தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.   அப்போது அவர் கூறியதாவது:- 

2030ஆ-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொரு ளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதற்காகவே பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில் தற்போது செயல்பட்டு வரும் மீனம்பாக்கம் விமான நிலையமும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும். பல்வேறு சவால்கள் ஏற்கனவே இருந்து வரும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தலாமே, இவ்வளவு தொலைவில் புதிய விமான நிலை யம் அமைக்கப்பட வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியமில் லாதது. அதற்கு முக்கிய காரணம் தேவையான நிலம் அங்கிருந்து எடுக்க முடியாது என்பது தான். புதிய விமான நிலையம் அமைக்க 11 இடங்களை தேர்வு செய்தோம். பல இடங்களை சுற்றி ஏரி, பறவைகள் சரணாலயம், விளை நிலங்கள், மலைப்பகுதி போன்ற பல்வேறு சவால்கள் இருந்தன. பரந்தூர்தான் பல சாதகமான அம்சங்களையும், மிக குறைவான சவால்களையும் கொண்டிருந்தது. இதன்காரணமாகவே புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. பொருளாதாரம் உயரும் பரந்தூர் விமானநிலையத் தால் உள்ளூர் மக்களின் வாழ்வா தாரம், இருப்பிடம், எதிர்கால வாழ்க்கை போன்றவை பாதிக்கப் படாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். 

புதிய விமான நிலையத்தால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் சமூக-பொருளாதார முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

புதிய விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். புதிய விமான நிலையத்தால் மட்டுமே பயணிகள் சேவை, சரக்கு சேவை போன்ற வற்றில் அடுத்த கட்டத்தை எட்ட முடியும். புதிய விமான நிலையத்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment