தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வில் பெரும் குறைபாடு உள்ளது என மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு நியமித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி இதுகுறித்துப் பேசுகையில், "உலகிலேயே தேர்தல் நடத்தும் அமைப்புகளில் அதிக அதிகாரமும், பலமும் கொண்டது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால், அதன் ஆணையரைத் தேர்வு செய்வதில் பெரும் குறைபாடு உள்ளது. மற்ற நாடுகளில் உள்ளது போல் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. யார் தேர்தல் ஆணையர் என்பதை பிரதமர் முடிவு செய்கிறார்.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்கிறார். அதனால்தான் அண்மையில் நடந்த நியமனம் கூட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் மூன்றாவது தேர்தல் ஆணையர் பணியிடம் ஆறுமாதமாக காலியாக இருந்தது.
குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் அறிவித்த நேரத்தில் கூட மூன்றாவது ஆணையர் பதவியை அரசு காலியாகவே வைத்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் 12 மணி நேரத்தில் நியமனம் நடத்துகிறார்கள். அதனால்தான் உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய தேர்தல் நடத்தும் முறைக்கு உலக அளவில் நன்மதிப்பு உள்ளது. ஆனால், அதன் தலைமையை முடிவு செய்வதில் பெரும் குறைபாடு உள்ளது. பாகுபாடு இல்லாத நியமனம் நடைபெற வேண்டுமானால் எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடங்கிய குழு அமைக் கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் கீழ் ஆயிரத்துக்கும் குறைவான நிரந்தர ஊழியர்கள்தான் உள்ளனர். ஆனால், தேர்தல் நடத்த பயிற்சி பெற்ற ஒரு கோடியே இருபது லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த நடைமுறை பலமானது. அதனை வழிநடத்தும் தலைமை சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சமில்லாத, நேர்மையான தேர்தலை உறுதிசெய்ய முடியும்.
தற்போது தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம் மாற்றத்துக்கான உத்தரவை பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
பொதுவாக விருப்ப ஓய்விற்கு 3 மாதகால அவகாசம் கொடுக்கவேண்டும் என்பது விதிமுறை, ஆனால் அருண்கோயல் வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கிறார், அன்றே அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது, அரசு விடுமுறை நாளான ஞாயிறு அன்று பணி ஆணை வழங்கப்படுகிறது, மறுநாள் திங்கள்(21.11.2022) அவர் பதவியேற்கிறார்.
ஒருவர் வகிக்கும் அரசு பதவியை விரும்பாமல் விருப்ப ஓய்வு பெறுகிறார். உடனே பெரிய அரசு பதவியில் அமர்த்தப்படுகிறார். இது குறித்து உச்சநீதிமன்றம் அருண் கோயலை புதிய தேர்தல் ஆணையராக நியமித்தது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசை ஏற்கெனவே கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
ஏற்கெனவே நீதிமன்றம் இவரது நியமனத்தில் குளறுபடி என்று கூறியுள்ள நிலையில் மேனாள் தேர்தல் ஆணை யர் குரேஷி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை எல்லாம் கால் பந்தாகக் கருதி விளையாடுவது என்பது - மோடி அரசின் குழந்தை விளையாட்டாகி விட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளே செய்தியாளர்களைச் சந்தித்து மனக் குமுறல்களைக் கொட்டவில்லையா?
ஒரு மோசமான ஆட்சி - சட்ட விதிகளை, மரபுகளைப் புறந்தள்ளி எதேச்சதிகாரமாக நடக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மோடி தலைமையிலான ஆட்சி! இதற்கு முடிவு கட்டும் ஆயுதம் மக்களின் வாக்குச் சீட்டில்தான் உள்ளது.
No comments:
Post a Comment