டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 சிந்தனை வளம் - எழுத்தாற்றல் - நடிப்பு என்ற பல்திறன் கொள்கலன் தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்

1945  - பொன்மலை திராவிட வாலிபர் கழகத்தின் முக்கிய தூண் அவர் - ஆண்டு விழாவில் நானும் பேசியிருக்கிறேன்!

இயக்கத்திற்கு வந்தால் எந்தப் பதவி என்பதல்ல - இயக்கத்திற்கு என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்!

சென்னை, நவ.25  தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் பல்திறன் கொள்கலன். சிறு வயதிலிருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு, இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இளைஞர்கள் இதில் கவனம் கொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா

நேற்று (24.11.2022) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் புத்தகங்களை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

அழைப்பிதழில் மிகப் பொருத்தமாக...

மிகுந்த மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய தத்துவ மேதை, இந்த இயக்கத்தினுடைய அடிநாள் வரலாற்றில், திராவிட இயக்கத்தில் தன்னுடைய முத்திரையை, சிறப்பான பேச்சுகளின் மூலமாகவும், எழுத்தாற்றல் மூலமாகவும், நடிப்பாற்றல் மூலமாகவும், சிந்தனை வளமையின்மூலமாகவும் நிலைநாட்டிய நூற்றாண்டு விழா நாயகர், இலக்கியச் செம்மல், தத்துவமேதை, கொள்கை நெறியாளர் டி.கே.சீனிவாசன் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவிற்குத் தலைமையேற்று - விழா தலைமை என்று இந்த அழைப்பிதழில் பொருத்தமாக அளித்திருக்கிறார்கள்.

விழாவிற்கு மட்டும் தலைவர் அல்ல;  எங்கள் முதலமைச்சர் - 

‘விழா' தலைவர்

ஆம்! விழாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எங்கள் முதலமைச்சர் - விழா தலைவர் - எவ்வளவு பெரிய கொம்பனானாலும் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு ஆற்றல், திறமை, உழைப்பு, நாணயம், அடக்கம் இவை அத்தனையும் உடைய தலைவர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எனக்கு முன் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களே,

அதற்குமுன் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் அருமைச் சகோதரர் மாண்புமிகு டி.ஆர்.பாலு எம்.பி., அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அற்புதமான உரையை, சுருக்கமாகவும், தெளிவாகவும் நிகழ்த்திய நம்முடைய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண் டியன் அவர்களே,

மானமிகு கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய ஆர்.என். வெளியீட்டகத்தைச் சார்ந்த அருமைத் தோழர் சி.வி.குமரன் அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செய லாளர் அன்பிற்குரிய மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி அவர்களே,

அவருடைய எழுத்துரைகளை, கருத்துரைகளையெல்லாம் தொகுத்து, மூன்று தொகுதிகளாக....

நன்றியுரை கூறவிருக்கக் கூடிய திராவிட முன்னேற் றக் கழகத்தின் செய்தித் தொடர்புச் செயலாளரும், டி.கே.எஸ். அவர்களுடைய பெருமையை, ஒரு நாளிலே கொண்டாடி முடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வரலாற்றுக் காவியமாக, அவருடைய எழுத்துரைகளை, கருத்துரைகளையெல்லாம் தொகுத்து, மூன்று தொகுதி களாக பயனுள்ள ஒன்றை ஆவணப்படுத்தியிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

அவருடைய அன்பார்ந்த குடும்பத்தவர்களே, கொள்கைக் குடும்பத்தவர்களே, 

அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்ப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி என்பது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, முத்திரை பதிக்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும்.

முதலமைச்சர் அவர்கள், அவருடைய உடல் நலத்தைப்பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்திலேகூட இதுபோன்ற நிகழ்ச்சிகளும் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் கலந்து கொண்டு, தன்னுடைய நேரத்தை இதற்காக ஒதுக்கி யிருக்கிறார்கள் என்று சொன்னால், டி.கே.எஸ். அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா இது என்பதினால்தான்.

வேர்கள் எப்படிப்பட்டவை என்பதை 

விழுதுகள் அறியவேண்டும்!

இந்தக் காலகட்டத்தில்  திராவிட இயக்கத்தவர்களுக்கு ஏராளமான நூற்றாண்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால், வேர்கள் எப்படிப்பட்டவை என்பதை விழுதுகள் அறியவேண்டும். அதுதான் மிக முக்கிய மானது.

தாய்க் கழகத்தின் நன்றி!

விழுதுகள் அறிந்தால்தான், வரலாற்றை அவர்கள் புரிந்துகொள்ள முடியும். அந்த வரலாற் றைப் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெறுகிற நேரத்தில், இது ஏதோ ஒரு நாள் விழா - அல்லது உரையரங்கம், கவியரங்கம் போன்று மட்டுமே நடத்திவிடாமல், இன்னும் சிறப்புச் சேர்க்கும் வகையில், இங்கே மூன்று தொகுதிகளை அவர் வெளியிட்டு இருப்பது, அதிலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளியிட, நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பை, தாய்க் கழகத்திற்கு வழங்கியிருப்பதற் காக எங்களுடைய நன்றியை முதற்கண் அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏனென்றால், டி.கே.சீனிவாசன் அவர்கள், திருச்சியில், இந்த இயக்கத்திலிருந்து, திராவிடர் கழகத்திலிருந்து மலர்ந்தவர் ஆவார்.

எங்களின் கருத்துரை!

தோழர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள், சில நாள்களுக்கு முன்பு என்னிடம் இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகிவிட்டது. இந்தப் புத்தகத்திற்கு முதலமைச்சரும் கருத்துரை வழங்கியிருக்கிறார்; நீங்களும் ஒரு கருத்துரை தர வேண்டும் என்று கேட்ட நேரத்தில், பழைய நினைவு களை மனதில் எடுத்துக்கொண்டு, ‘‘வாழ்க நூற்றாண்டு விழா நாயகர் டிகே.சீனிவாசன்!'' என்ற தலைப்பில் ஒரு குறிப்பை எழுதுகிறபொழுது, உங்களுக்கெல்லாம் ஒரு வியப்பான செய்தியை திராவிடர் கழகத்தின் சார்பில் அதில் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.

‘‘நூற்றாண்டு நாயகர் டி.கே.சீனிவாசன் அவர்கள் திருச்சியில் இரயில்வேயில் பணியாற்றியபோதே திராவி டர் கழகத்தில் ஈடுபட்டு தந்தை பெரியாரிடமும், அண் ணாவிடமும், கலைஞருடனும் பழகிய அடிநாள் இயக்க முன்னணித் தோழர்களில் முக்கியமானவர் ஆவார்.

பலருக்கு வியப்பாக இருக்கும்; அவரை நான் பார்த்ததும், அவரது ஆற்றொழுக்கான சொற்பெருக்கைக் கேட்டதும் முதன்முதலில் திருச்சி பொன்மலையில்தான் (28.7.1945) - 77 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பொன்மலை திராவிட வாலிபர் கழகம்!

திருச்சி பொன்மலையில் தோழர் பாராங்குசம், பொன்மலை வடிவேல் ஆகியோர் தலைமையில் ஏராள மான இயக்கத் தோழர்கள், இரயில்வே தோழர்கள் - அன்றைய இளைஞர்கள் சிறப்பான ஓர் அமைப்பினை சுயமரியாதை இயக்க காலப் பருவத்தில் ‘பொன்மலை திராவிட வாலிபர் கழகம்' என்ற பெயரில் அமைத்து நடத்தி வந்தனர். அதன், திராவிட வாலிபர் கழகத்தின் 15 ஆவது ஆண்டு விழா- பொன்மலை திடலில் நடந்தது!

அந்த நிகழ்ச்சிக்குத்தான் என்னை அழைத்திருந்தனர். அவர்களது அழைப்பை ஏற்று தனியாகவே பொன் மலைக்கு அனுப்பி, என்னை பங்கேற்கச் செய்தார் எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள்.

அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் என்னையும் பகுத்தறிவுச் சிறுவன் கடலூர் வீரமணி என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், கலந்துகொண்டு பேச வாய்ப்பளித்தபோது, எனக்குமுன்பு ஒரு வரவேற்பாளராக, இணைப்புரையா ளராக பேசியவர் தோழர் டி.கே.சீனிவாசன் அவர்கள்!

‘ஒலிபெருக்கி உண்டு’ என்று விளம்பரப்படுத்துவார்கள்!

இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு (ஆண்டு விழா) மட்டும் ‘ஒலிபெருக்கி உண்டு’ என்று விளம்பரப்படுத்தி கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள் நம் தோழர்கள்!

நூற்றாண்டு விழா நாயகர் டி.கே.சீனிவாசன் அவர்கள் குரலின் ஒலி தொலைவிலிருந்து கேட்டால், அறிஞர் அண்ணா பேசுவதுபோலவே இருக்கும்!

கருத்தாழம், தனித்த அணுகுமுறை, எதுகை மோனை நீர்வீழ்ச்சிகளும் இயல்பாகவே அவர் அழைப்பதற்கு முன்பே அவரது பேச்சினை கேட்டால் பிணிக்கும் - ஈர்ப்பை உருவாக்கும்.

அதுபோல, எங்களது தோழமை - அரசியல் நிலைப் பாடுகளையெல்லாம் தாண்டி தொய்வின்றி வளர்ந்தது!

புதுக்கோட்டையில் தோழர் முருகு.சுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப் பெற்ற ‘பொன்னி’ திங்கள் இதழில் நூற்றாண்டு விழா நாயகர் தொடர்கதை எழுதி, அதன்மூலம் தனது ஒப்பற்ற எழுத்தாற்றலையும், இணையற்ற இலக்கிய மேதை என்பதையும் நாட்டுக்கு உணர்த்தினார்!

தலைப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை!

அவர் தரும் தலைப்புகளேகூட மற்ற எழுத்தாளர் களால் எட்ட முடியாத தனித்தன்மை கொண்டதாகும்.

‘முடியவில்லை, தொடராது’, ‘ஆடும் - மாடும்‘ இப்படியெல்லாம் கொள்கைகளை இலக்கியத் தேனில் குழைத்து இளைஞர் பட்டாளத்தையும், இலக்கியவாதி களையும் இந்த இயக்கத்திற்கு, ஈரோட்டுப் பாதைக்கு அழைத்து வர அண்ணா பாணியை பேச்சில் கடைப் பிடித்து வரலாறு படைத்தவர்!

ஏராளமான ஆங்கில நூல்களையும், பல நூல் களையும் படித்தவர்.

கலைஞரின் நெருக்கமிகு நண்பர்; அவருடன் இறுதிவரை - ஒரு சிறு இடைவெளி தவிர - பயணித்த தத்துவ மேதை!

பேச்சு, எழுத்துத் தாண்டி,படிப்பிலும் உயர்ந்ததுபோல, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தில், குடிபோதையில் நீதிமன்றத்தில் வாதாடி, பிறகு நிதானித்து வாதிட்ட பாத்திரத்தை ஏற்று வியக்கும் வகையில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர்!

1948 இல் ஈரோடு திராவிடர் கழக ‘ஸ்பெஷல்’ தனி மாநாட்டு இரவு, அதே நாடகத்தில் நாங்கள் எல்லோரும் கலைஞரின் தூக்குமேடை நாடகத்தில் நடித்தோம்.

நல்ல பார்லிமெண்டேரியனாக 

முத்திரை பதித்தவர்!

நல்ல பார்லிமெண்டேரியனாக இருந்து டில்லியில் முத்திரை பதித்தவர்.

‘விடுதலை’ அலுவலகம், பெரியார் திடலுக்கு வந்து பல மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்.

கொள்கையை விட்டுக் கொடுக்காத 

கொள்கைக் கோமான்!

இப்படி அவர் ஒரு ‘பல்திறன் கொள்கலன்’ - கொள்கையை விட்டுக் கொடுக்காத கொள்கைக் கோமான்!

‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று’ பேசத் தெரியாது வாழ்ந்த ‘ஒரு மனத்தவர்!’ மனதிற்பட்டதை வெடித்துவிடக் கூடிய மறைக்கப் பழகாத சிறப்பு வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இன்றைய முதலமைச்சர் இளைஞராக இருந்தபொழுது ஊக்கப்படுத்தியவர் நூற்றாண்டு விழா நாயகர் டி.கே.சீனிவாசன் அவர்கள்.

திராவிட இயக்க வரலாறு என்பது 

வரலாற்றுக் காவியங்கள்

எனவேதான், திராவிட இயக்க வரலாறு என்பது வரலாற்றுக் காவியங்கள் ஆகும். இங்கே வெளியிடப்பட்ட மூன்று தொகுதிகளையும் சிறப்பான முறையில் தயாரித்திருக்கிறார்கள்.

இங்கே அருமை நண்பர் சுப.வீ. அவர்களும் இதைப்பற்றி அழகாகச் சொன்னார்கள். முதலில் அரசியல் கருத்துகள் - எப்படிப்பட்ட நிலைகள் எல்லாம் அன்றைக்கு இருந்தன என்று கடந்து வந்த பாதையை அரிமா நோக்கு போல பார்க்க வேண்டும் என்று சொன்னால், முதல் தொகுதியில் அதைப் பார்க்கலாம்.

அதேபோல, அவருடைய கருத்துரைகள். இலக்கியத் தில் எவ்வளவு பெரிய ஆற்றலாளர்; எப்படிப்பட்ட எழுத்தாளர்; மற்றவர்கள் சிந்திக்க முடியாத தத்துவ மேதை என்பதற்கு அடையாளம் என்னவென்றால், அவர் கொடுக்கின்ற தலைப்பு இருக்கிறதே, ‘‘ஆடும் மாடும்''பற்றி சொன்னார்; அதைவிட, ‘‘முடியவில்லை, தொடராது!'' என்பன.

‘குடியரசு', ‘திராவிட நாடு' இதழ்களில்....

இதுபோன்ற தலைப்புகள்பற்றி, ‘திராவிட நாடு' பத்திரிகை யில், அறிஞர் அண்ணா அவர்கள் மிக முக்கியமாக எடுத்துச் சொல்வார்.

இதுபோன்ற தலைப்புகள்பற்றி, ‘குடிஅரசு' பத்திரிகை யில் அய்யா அவர்கள், கருத்தாழம் மிக்க கட்டுரைகள் என்று எழுதுவார். 

அதேநேரத்தில், கலைஞர் அவர்கள், ஈரோட்டு குருகுல வாசத்திற்குச் சென்று, அவர் ‘குடிஅரசு' பத்திரி கையின் துணை ஆசிரியராக இருந்தபொழுது, சிறுசிறு தலைப்புகளில் எழுதுவார்.  ‘‘வெடிகுண்டு விமானம்'' என்ற தலைப்பில் பல செய்திகளைச் சுட்டிக் காட்டுவார்.

இப்படி அந்தக் காலத்து எழுத்துகள் இளைஞர்களை சிந்திக்க வைத்தது - இளைஞர்களை சுயமரியாதைக் காரர்களாக ஆக்கிற்று - இளைஞர்களை கொள்கை வீரர்களாக்கினார்கள். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

டி.கே.சீனிவாசன் அவர்களுடைய குரல் - அண்ணாவின் குரல் போன்றே இருக்கும்!

அவர் மேடையில் ஒலிபெருக்கியில் உரையாற்றும் பொழுது கேட்டால், ஏனென்றால், அவருடைய உரையை கேட்காத, பார்க்காத, கேட்க வாய்ப்பில்லாத தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்குப் பதிவுகள் இருக்கின்றன, நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள்கூட, அந்தப் பதிவை மீண்டும் பார்க்க முடியும். அன்றைக்கு ஒலிப்பதிவுகள் என்பது கிடையாது. அந்த சூழலில், நூற்றாண்டு விழா நாயகரின் ஒலிபெருக்கியின் உரையை வெளியில் கேட்டால், அண்ணா பேசுகிறார் என்றுதான் நினைப்பார்கள். அதே ஒலி இருக்கும்; அதே முறை இருக்கும்; ஆனால், பாணியில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

ஆனால், அதேநேரத்தில், அண்ணாவிற்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும், நூற்றாண்டு விழா நாயகருக்கும் என்ன வேறுபாடு என்றால், இவருக்கு மனதில் என்ன படுகிறதோ, அதை உடனே பட்டென்று போட்டு வெடித்துவிடுவார். அவரைப் பொறுத்தவரை யில் மாற்றிக் கொள்ளவே மாட்டார். அவரோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

பெரியாராக இருந்தாலும், அண்ணாவாக இருந் தாலும், அவர்  மனதிற்கு என்ன பட்டதோ, உடனே அதை சொல்லிவிடுவார். அதுதான் இந்த இயக்கம்  தலைவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்திருக்கிற, தொண்டர்களோடு இருக்கக் கூடிய சுமூகமான ஓர் இயக்கமாகும்!

டி.கே.சீனிவாசனின் கேள்வியும் - 

அண்ணாவின் பதிலும்!

திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த பிறகு  - ஒருமுறை அண்ணாவைப் பார்த்து இவர் கேட்கிறார், ‘‘எவ்வளவு காலத்திற்கு நாம் இப்படியே இருப்பது? மற்ற மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாமா? நாம் இன்னும் வேகமாக செல்லவேண்டாமா?'' என்று.

அண்ணா அவர்கள் சில நேரங்களில் ஆழமான கருத்துகளை வலியுறுத்துகின்ற நேரத்தில், அதற்கு அவர்  உணர்ச்சிவயப்பட்டு, ஆங்கிலத்தில் பதில் சொல்வார்.

அதை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘‘சீனிவாசன் உங்களுடைய முறை வருகிற வரையில், நீங்கள் பொறுமையாக இருந்தாகவேண்டும்; இதுதான் அரசியலில் மிக முக்கியம்'' என்று சொன்னார்.

பிறகு, டி.கே.சீனிவாசன் அமைதியானார்.''

விழாத் தலைவரே 

அதற்கு சரியான எடுத்துக்காட்டு!

இந்த செய்தி, இன்றைக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.

ஓர் இயக்கத்திற்கு வந்தவுடன், என்ன பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட, கிடைத்த பதவி, பெரியதா? சிறியதா? என்று அளர்ந்து பார்ப்பதைவிட, அந்த இயக்கம் எப்படி கொள்கையால் இருக்கக்கூடியது என்பதை நினைத்துப் பார்த்து, அந்தக் கொள்கைக்கு என்னுடைய தியாகம் என்ன? என்னுடைய பங்களிப்பு என்ன? என்று நினைத்து வரவேண்டும்; அப்படி வந்தால், இந்த இயக்கம் வலுப்படும். அதற்கு வேறு எங்கும் எடுத்துக்காட்டுகளை நீங்கள் தேடி அலைய வேண்டியதில்லை - விழாத் தலைவரே அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

அவர் இந்த இயக்கத்தின் இளைஞரணியிலிருந்து வந்தார். அவருடைய முறை எப்பொழுது என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்தப் பணியாக இருந் தாலும், அதை முன்னின்று செய்தார்.

எனவேதான், அண்ணா அன்றைக்கு சொன்னார், அது தத்துவம். அந்தத் தத்துவத்திற்குக் காரணமாக இருந்தவர் டி.கே.சீனிவாசன் அவர்கள். அந்தத் தத் துவத்தை நடைமுறையாகக் காட்டியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இதைவிட பொருத்தமானது - நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடியவர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்?

எனவேதான் நண்பர்களே, இப்படிப்பட்ட அருமை யான நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டோம் என்பதைவிட, இங்கே வெளியிடப்பட்ட நூல்களை வாங்கிப் படியுங்கள்!

புரட்சிக்கவிஞரின் பாரதிதாசன்!

நூலைப் படி - சங்கத்தமிழ்

நூலைப்படி - முறைப்படி

என்றார் புரட்சிக்கவிஞர்.

ஆகவேதான், ‘‘பொய்யிலே முக்காற்படி

புரட்டிலே காற்படி'' என்ற நூல்கள் எல்லாம் நமக்குத் தள்ளுபடி என்று சொன்னார்கள்.

தள்ளுபடி செய்யவேண்டிய நூல்கள் 

ஏராளமாக இருக்கின்றன!

ஆகவேதான், நூலுக்குத் தள்ளுபடி என்பதைவிட, தள்ளுபடி செய்யவேண்டிய நூல்கள் ஏராளமாக இருக் கின்றன. எல்லா நூல்களும் தள்ளுபடி செய்யவேண்டிய நூல்கள்தான். அது வேறிடத்தில் இருந்தாலும் சரி அல்லது புத்தகமாக இருந்தாலும் சரி, அல்லது கரு வறைக்குள்ளே போய் நுழைந்தாலும் சரி, தள்ளுபடி செய்யவேண்டிய நூல்கள் எவை, எவ்வளவு என்று கேட்கவேண்டிய காலத்தில், அந்த நூலைப்படி என்று சொன்னார்கள்.

நூலை வாங்கிப் படியுங்கள், பரப்புங்கள்!

எனவே, உங்களையும் அன்போடு வேண்டிக் கொள்வதெல்லாம் இந்த நூலை வாங்கிப் படியுங்கள், பிறருக்குப் பரப்புங்கள்; அதிலிருந்து பாடத்தை நாம் கற்றுக்கொள்வோம் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வருக திராவிடம்! திராவிடம் வெல்லும்!

நாளைய வரலாறு என்றும் அதைச் சொல்லும்!

நன்றி, வணக்கம்!- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

No comments:

Post a Comment