போதிய பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடே தவிர, ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு அஜீரணம் ஏற்படும் வகையில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது சமூகநீதிக்கு எதிரானது.
ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கொள்கை என்பது - சமூக நீதிக்கு - இடஒதுக்கீடுக்கு எதிரானது.
ஒன்றிய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு சட்டத்தைக் கொண்டு வந்தபோது (7.8.1990) அதுவரை வெளியிலிருந்து தனது ஆதரவை வி.பி. சிங் தலைமையிலான கூட்டணி அரசிற்கு அளித்து வந்த பிஜேபி தன் ஆதரவை விலக்கிக் கொண்டு அந்த ஆட்சியைக் கவிழ்க்க வில்லையா? நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பார்ப்பனர்கள் கலவரங்களை உண்டாக்கவில்லையா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லையா?
ஆர்.எஸ்.எஸ். ஏடான 'பஞ்சான்யா' மற்றும் 'அவுட் லுக்' ஏட்டுக்கு (20.9.2015) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் அளித்த பேட்டி என்ன?
"இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால் இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர்.
இடஒதுக்கீடு என்ற பெயரில், கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் செயல் பெரும்பான்மை மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே வளர்ச்சிக்காகத் தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றை அமைத்து, இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
இந்தப் பேட்டி வந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 'விடுதலை'யில் அறிக்கை (22.9.2015) ஒன்றை வெளியிட்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் விடுத்த அந்த அறிக்கை எத்தகைய தொலைநோக்குடையது என்பது இப்பொழுது விளங்கிவிட்டதே!
தலைவர் ஆசிரியர் எழுதியது என்ன?
"ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்ன வென்றால் இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவுகோலை அகற்றிவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் - இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.
இந்தத் துறையில் மட்டுமல்ல; கல்வித் துறையிலும்கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக் கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.
எனவே இந்தக் காலக் கட்டத்தில் காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந் தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப் பெரிய அளவில்போராடி வெற்றி கண்ட - பாதுகாத்த இடஒதுக்கீடு, சமூகநீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்று தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன் எச்சரித்து - எழுதிய அபாய அறிக்கை அட்சரம் பிறழாமல் இப்பொழுது அரங்கேறி விட்டதா இல்லையா?
பொருளாதார அளவுகோல், தேசிய கல்வித் திட்டம் - இந்த இரண்டும் குறித்தும் நமது தலைவர் எச்சரித்தபடியே ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றி விட்டார்கள்.
கலாச்சாரக் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொன்னது - யாரை என்று நமக்குத் தெரியாதா? அவர்கள் மொழியில் 'பிராமணர்கள் என்று வெளிப்படையாகச் சொன்னால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவர்களுக்கே உரித்தான தந்திர வாசகங்களைப் பயன்படுத்து கின்றனர்.
அந்தக் கலாச்சாரப் பாதுகாவலர்களுக்கு அகலமாகக் கதவு திறந்து விடுவதுதானே இந்த 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்ற திட்டம்).
புரிகிறதா? கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். அந்தக் கருஞ்சட்டைக் காவலர்களின் தலைவர் எச்சரித்தது தான் இப்பொழுது நடந்திருக்கிறது. கலாச்சாரக் காவலர்கள் யார்? கருஞ்சட்டைக் காவலர்கள் யார்? எத்தகையவர்கள் என்பது விளங்குகிறதா?
இப்பொழுதும் ஒன்றும் காரியம் கெட்டுப் போகவில்லை. பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும்தானே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள்.
இப்பொழுது ஏற்பட்டு இருக்கிற ஆபத்தை உணர்ந்து ஓரணியில் திரண்டால், ஒரு நொடியில் இந்தக் கலாச்சாரக் காவலர்களின் திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடும்.
அதனுடைய முதற் கட்டம்தான் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகளின் - அமைப்புகளின் (15.11.2022) கூட்டமும், தீர்மானமும் ஆகும்.
42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த வைத்தோமா? இல்லையா?
இப்பொழுதும் நம்மால் முடியும். ஒன்று சேர்வோம்!
உரிமைக்குப் போராடுவோம்!!
வெற்றிபெறுவோம்!!!
No comments:
Post a Comment