சென்னை, நவ.3 பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் உரிமம் பெற சிறப்பு பொதுத்தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்ற புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அரசு செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:‘‘தமிழ்நாட்டில் 1998க்கு பிறகு புதியதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்பு மூலம் சிறப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் நபர்கள் பயன்பெறுவர்.
அந்த வகையில், மானிய கோரிக்கையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பதிவுத்துறை தலைவரின் கருத்துகளை ஏற்று புதிய ஆவண எழுத்தர் உரிமங்களின் நடைமுறைகளை பின்பற்றி வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
அதன்படி, ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்காக நடத்தப்பட வேண்டிய சிறப்பு பொதுத்தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதில், ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதித் தேர்வினை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எளிமையான வகையில் மாநிலம் முழுமைக்கும் ஒரே தேர்வாக நடத்தலாம். அப்படி, நடத்தப்படும் தேர்வு வழிமுறைகளை பதிவுத்துறை தலைவரே முடிவு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. இந்த தேர்வை அரசு சார்ந்த அமைப்புகள் மூலமாக நடத்திக்கொள்ளவும், தேர்வு நடத்தித் தரும் அமைப்பு கோரும் கட்டணங்களின் அடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளை துறை அலுவலர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தேர்வு நடத்தும் அமைப்பே தயாரிக்க கோரலாம்.
இதேபோல், ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வு நடத்துவது தொடர்பாகவும், தொழில்நுட்ப தகுதி தொடர்பாகவும், தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிம விதிகள் திருத்தங்கள் மேற்கொள்ள அதை அரசுக்கு அனுப்பி அரசின் உரிய அனுமதி ஆணை பெறப்பட்ட வேண்டும்.மேலும், நகல் எழுத்தர் உரிமம் பெற்றவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 55 எனவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/ பழங்குடியினர் வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும், இதர வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 எனவும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தகுதிகளுடன் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வரை செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment