பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

பதிலடிப் பக்கம்

எது வகுப்பு வாதம்?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

14.11.2022 பதிலடிப் பக்கத் தொடர்ச்சி....

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் - தலைமை வகித்து நடத்திய அந்த வன்முறைகளை அரங்கேற்றி யவர்கள் தண்டிக்கப்படவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும் பையில் வெடித்த மதக்கலவரம் - அதனை பால் தாக்கரே தலைமை வகித்து நடத்தினார். தண்டிக்கப் படவில்லை.

2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த மோடி தண்டிக்கப்படாததோடு மட்டுமல்ல; அவர் பிரதமராகவே இருமுறை ஆகி விட்டாரே!

இந்த நிலையில் வன்முறைகள் - வகுப்புவாத வெறித்தனங்கள் எப்படி அடங்கும் - ஒடுங்கும்?

கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்தது, அதில் 59 பேர் மரணமடைந்தனர். வருத்தத்திற்குரிய ஒன்றுதான் அது.

பொறுப்பான முதலமைச்சராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினை வேறு வடிவ மாக - வன்முறை யாக உருவெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நடந்து கொண்டு இருக்க மாட்டாரா?

மாண்டவர்களின் உடல்களை அவரவர்கள் ஊருக்கு அங்கிருந்து அனுப்புவதாக இருந்ததை மாற்றி அகமதாபாத்துக்குக் கொண்டு சென்று அத்தனை உடல்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் ஒரு முதலமைச்சர் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?

மக்கள் உணர்ச்சி வயப்பட்டு வன்முறையில் இறங்கட்டும், மதக்கல வரம் நடக்கட்டும் என்பதுதானே அதன் நோக்கம்? அதுதானே நடக்கவும் செய்தது.

அதிகாரிகளை அவசர அவசரமாகக் கூப்பிட்டு மூன்று நாட்கள் என்ன கலவரம் நடந்தாலும் கண்டு கொள் ளாதீர்கள் என்று சொல்லுகிறார் ஒரு முதல் அமைச்சர் என்றால், ஹிட்லரே இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் தானே?

காவல்துறை அதிகாரிகள் நடந்த உண்மையை வெளியிட்டு விட்டார்கள்.

குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பேயி யிடம் பலமுறை தொடர்பு கொண்டு குஜராத் கலவரத்தை அடக்கிட இராணு வத்தை அனுப்பவும் - ராணுவத்திற்குச் சில அதிகாரத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் பிரதமர் அது நடக்கவில்லையென்று சொல்லியுள்ளாரே!

மானவ சம்ஸ்கிருதி (மனிதப் பண்பாடு - மலையாள இதழில் பேட்டி 15.4.2005 - நானாவதி ஆணையத் திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது)

பெரிய மனிதர் என்று வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் பிரதமர் வாஜ்பேயி, குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டும் அதனைக் கண்டு கொள் ளாதது - ஏன்?

அவர் ஹிந்துத்துவாவின் தலைமை ஆசிரியர் - வேறு  எப்படி நடந்து கொள்ள முடியும் அவரால்?

அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவிலே விசுவ ஹிந்து பரிசத் மாநாட்டில் பேசியபோது என்ன சொன்னார்? எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத் தால் ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்ல வில்லையா?

1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற் குரியவர் ஏ.பி.வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு  Sangh my Soul  என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.

"ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா" என்ற அந்தக் கட்டுரையில் அந்த ‘நல்லவர்' என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:

(1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising).

(2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation) ( (இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை ஹிந்து மயமாக்குவது).

அப்படி முஸ்லிம்களை உட்கொள் ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:

(1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந் நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

(2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல்.

(3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.

இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.

இது எவ்வளவுக் குரூரம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாசிஸ்டுகளின் அச்சில் வார்த் தெடுத்த சிந்தனை அப்படியே இதில் வழிகிறதா இல்லையா?

வாஜ்பேயியே இப்படியென்றால் அவரின் சீடர் மோடி நான் ஒரு ‘ஹிந்து நேஷனலிஸ்ட்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இப்படிப்பட்டவர் எப்படி மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக வரமுடியும்?

மதச்சார்பற்ற தன்மை என்பதை தன் வசதிக்கு ஏற்ப திரித்தும் கூறுகிறார்.

என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங் களை நிறைவேற்றுவதுதான் மதச்சார் பின்மை.

(சென்னை காமராஜர் அரங்கில் துக்ளக் 

ஆண்டு விழாவில் குஜராத் முதலமைச்சர் 

நரேந்திர மோடி பேச்சு)

ஆதாயத்துக்காக சலுகை காட்டும் அணுகு முறைக்கு மரண வியாபாரி மோடி - இது சோவின் உரை. அதே கூட்டத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மோடி சொல்லும் மதச் சார்பின்மை சரியானதுதான் என்கிறார். இப்படி ஒரு விளக்கத்தை சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் சொன்னதுண்டா?

ஒரு பேரபாயம் நாட்டு மக்கள் தலைக்குமேல் கொடு வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

1998 மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு சிறுபான் மையினர் வாக்கு 6.9 சதவிகிதம். 2004இல் 5.07 சத விகிதம், 2009இல் 2.33 சதவிகிதம்.

குஜராத்தின் முஸ்லிம்களும் பிஜேபிக்கு வாக் களித்ததாகச் சொல்லப் படுகிறது. அது உண்மையெனில் அச்சத்தில் முரட்டுப் பிடியிலிருந்து அவர்கள் இன்னும் விடுதலை பெற வில்லை என்று பொருள்.

தேர்தல்களில் பிஜேபி சார்பில் ஒரு முஸ்லிம் கூட வேட்பாளராக நிறுத்தி வைக்கப்படவும் இல்லை.

இன்னொன்று முக்கியமானது; பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்ததால் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஆபத்தும் இழப்பு அல்ல.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கேடுகள் உண்டு. இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகிவிடும். ஒட்டுமொத்தமாக பெண்களுக்குப் பெரும் கேடு. ஹிந்துத்துவாவில் பெண்களுக்கு உரிய இடம் என்ன என்று தெரியுமே!

பிஜேபியில் பார்ப்பனர் அல்லாதார் நிலை என்ன என்று உ.பி. கல்யாண் சிங்கு, ம.பி. உமாபாரதி வெளிப் படையாகச் சொன்னதுண்டே!

இந்தியா முழுமையும் உள்ள சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் பாசிச பிஜேபிக்கும் எதிராக ஒன்று திரட் டப்பட வேண்டும்.

ஊடகங்களில் குறிப்பாக இணைய தளங்களில் நம் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும்.

ஜாதி அமைப்புக் கூட்டணி என்ற பெயரால் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படும் மக்களும்  தெளி வடையும் வகையில் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக 18 வயதில் முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.  போதிய தகவல்களும் உண்மை நிலைகளும் அவர்களிடத்தில் இல்லாமை யால் - ஏதோ மாற்றம் நடக்கட்டுமே என்ற மிதப்பில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடும்.

இந்தப் பேராபத்தைஉணர்ந்து அவர்கள் மத்தியில் உண்மை வெளிச்சம் ஊடுரு வப்பட உரியது செய்யப் பட வேண்டும். 18 வயதுள்ளவர்களுக்கும் வாக்குரிமை உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தியா முழுமையும் ஹிந்துத் துவாவை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார். அது முன்னிறுத்தப்பட வேண்டும்.

இராமனைப் பற்றி பெரியார் சொன்ன போது, இராமன் படத்தைக் கொளுத்திய போது அதன் முக்கியத்துவத்தை உணராதவர்கள், இப்பொழுது ராமராஜ்ஜியத்தை உருவாக்க முனைகிறார்களே - இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும். முதலில் பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment