விழிப்பாக இருந்து இதனை முறியடிக்கவேண்டும் என்ற
தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் கருத்து மிக முக்கியமானது
இது திராவிட மண் - ஆரிய மண்ணல்ல என்று செயலில் காட்டுவோம்!
அ.தி.மு.க.வினைப் பிளவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்று பி.ஜே.பி. திட்டமிட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு தி.மு.க. தோழர்கள் கடுமையாக உழைத்து, நமது கொள்கை எதிரியான பி.ஜே.பி. யின் திட்டத்தை முறியடிக்கவேண்டும் என்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் கருத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சர்களில் ஒருவருமான கே.என்.நேரு அவர்கள், திருச்சியில் தி.மு.க. வடக்கு தெற்கு மற்றும் மத்திய மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பான வகையில் பேசியுள்ளார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளர்
கே.என்.நேருவின் அரிய கருத்து
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு எதிராக எப்படி யெல்லாம் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். வியூகம் வகுத்து, அன்றாட அரசியல் செய்கிறது என்பதை மிகச் சரியாக - அக்கட்சியினருக்கு விளக்கியுள்ளதோடு, அதை எதிர் கொண்டு முறியடிக்க உறுதிபூண்டு உழைக்கவேண்டியது தி.மு.க.வின் செயல்வீரர்கள், வீராங்கனைகளின் இன்றி யமையாத அன்றாடக் கடமை என்பதையும் வலியுறுத்தி யுள்ளார்.
இப்பணியில் தி.மு.க.வினை - தி.மு.க. அரசினை - அவ்வரசு அமைவதற்கு ஓய்வறியாது உழைத்த தி.மு.க. தொண்டர்கள் - தோழர்கள் - பொறுப்பாளர்கள் அனை வரும் இணைந்து கடுமையாக உழைத்து, அதன் ஒப்பற்ற தலைவர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைகளில் வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் - புதுச்சேரியில் முன்பு தந்ததைவிட ஒன்று கூடுதலாகவே 40-க்கு 40 தொகுதி களின் வெற்றிக் கனியைப் பறித்துத் தருவதே ஒரே இலக்கு என்று நாளும் உழைக்கவேண்டிய அவசியத்தை முதன்மைப்படுத்தியுள்ளார் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர்.
இது திருச்சி மாவட்டங்களுக்கு மட்டும் சொன்னதல்ல; தமிழ்நாட்டு அரசியலின் சரியான உண்மையான ‘ஸ்கேன்' போன்ற யதார்த்தமானதாகும்!
அ.இ.அ.தி.மு.க.வைப் பிளப்பதில்
பி.ஜே.பி.யின் திருவிளையாடல்கள்!
எந்தப் பகுதியிலிருந்து வியூகங்கள் எப்படியெல்லாம் பா.ஜ.க.வினால் வகுக்கப்படுகிறது என்பதை விளக்கிய அவர்,
‘‘அ.தி.மு.க.வினரை முன்பு பிரித்ததோடு, இப்போது அவர்களை பல பிளவுகளாக்கி, ஒன்று சேரவிடாமல் 'நான்தான், நீ தான்' என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்கள் இடத்தைப் பிடித்துவிடவேண்டும் - எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.
அதேநேரத்தில், அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்துக் கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்!
எனவே, இதைப் புரிந்துகொண்டு தி.மு.க. செயல் வீரர்கள், பொறுப்பாளர்கள் உழைக்கவேண்டும்'' என்று கூறியிருக்கிறார் தி.மு.க. முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள்.
இவை அப்பட்டமான உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கும் கருத்துகள் -வரவேற்கவேண்டியவை.
அனைவருக்கும் நாம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தி.மு.க.; அதை மாற்றினால் அ.தி.மு.க. என்றுதான் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்; காரணம், இது பெரியார் மண்; சமூகநீதி மண்.
எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க.வை வெல்வது, தி.மு.க. வுக்கு முக்கியம். தி.மு.க.வை வெல்வது எங்கள் இலக்கு என்று அ.தி.மு.க., அரசியல் - தேர்தல் யுத்தம் - போட்டிகள் இருந்தாலும், கொள்கை - லட்சியங்கள் - தோற்றம் இவற்றை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்யும் எவருக்கும் ஒன்று புரியும். பெரியார், அண்ணா கொள்கைகளை எந்த அளவுக்கு அ.தி.மு.க. வினர் புரிந்துகொண்டுள்ளனர் என்பது ஒருபுறம் இருந்தாலும், பி.ஜே.பி. என்பது அடிப்படையில் திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிர்ப்பானது என்பதை முக்கியமாகப் புரிந்துகொண்டு, இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். குறைந்தபட்சம் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக எதிர்க்கட்சியாக பி.ஜே.பி. வர முயற்சிக்கிறது என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் நுட்பமாகக் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்!
தி.மு.க.வும் - அ.தி.மு.க.வும் பங்காளி கட்சிகள். கொள்கை ரீதியாக சில நேரங்களில், சில பிரச்சினைகளில் ஒத்துப் போகும் வாய்ப்புகள் இருந்தாலும், அரசியல் களத்தில் நேர் எதிரிடை.
ஆனால், பா.ஜ.க. என்பது பகையாளிக் கட்சி - கொள்கை ரீதியாக! - (தனிப்பட்ட முறையில் அல்ல).
பி.ஜே.பி.யின் திட்டமும் - கனவும்!
அ.தி.மு.க.வினர், மூன்று, நான்கு குழுக்களாக பிளவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் கட்சியின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்வதோடு, கொள்கை எதிரியிடம் போட்டி போட்டிக் கொண்டு செல்வதனாலும், அக் கட்சிக்கு, அதன் தலைவர்களாகக் கருதி, நீதிமன்றங்கள் மூலம் சண்டையிட்டுக் கொண்டிருப்பதினாலும் எந்த லாபமும் - பயனும் கிடையாது என்பதைப் புரிந்து, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட வேண்டும்.
தங்களது கொள்கை எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், பெரும் நட்டம் அவர் களுக்குத்தான்.
‘திராவிட மாடல்' என்பதைக்கூட சில அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்வது அவர்களில் சிலருக்குக் கொள்கை அடிப்படையே புரியவில்லை என்பதால்தான்!
எனவேதான், இரு கட்சிகளையும் அழித்துவிட்டு, அந்த இடத்தில் தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் அரசியல் கிளையான பா.ஜ.க. விரும்புகிறது.
இது ‘கடல் வற்றி கருவாடு தின்ன விரும்பி, குடல்வற்றிச் செத்த கொக்கு' ஆக வேண்டுமானால் இருக்கலாம்; ஆகவே, உண்மையான எதிரியை அடை யாளம் காண வேண்டியது முக்கியம்.
தி.மு.க. எத்தனையோ நெருக்கடி காலங்களை எதிர்கொண்டு நெருப்பில் நீந்தி வந்த இயக்கம்; இன்றைக்கும், கட்டுப்பாடு மிகுந்த எஃகு கோட்டை என்பதை அனைவரும் உணரவேண்டும்!
கொள்கைகளைக் காப்பாற்றவே கட்சியும், ஆட்சியும் என்பதைத் தொண்டர்கள், தோழர்களுக்குப் புரிய வைத்து, ஆரிய மண்ணாக மாற்றிட, இந்தத் திராவிட மண்ணை ஒருபோதும் விடக்கூடாது என்பதே நம் உறுதியாக அமையவேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.11.2022
No comments:
Post a Comment