சென்னை,நவ.22- சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களில் 99 விழுக் காட்டினர் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையில் 9000 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரங்களில் பொருள்கள் விற்பனை செய்வது, வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில் களை செய்து வருகின்றனர். இவ்வாறு அமைப்பு சாரா தொழில்களை செய்து வருபவர்கள் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெறலாம்.
இதன்படி சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு நலவாரியம் பற்றியும், நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து தெரிந்து உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
நகர்ப்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை சேர்ந்த தீலிப் குமார், லயோலா கல்லூரியைச் சேர்ந்த அம்ரூதா, பெர்னாட் ஸ்டாலின், சென்னை சமூகப் பணி கல்லூரியைச் சேர்ந்த ஜெனனி, நிவேதா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியைச் சேர்ந்த திவ்யபாரதி, ஸ்வேதா ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ள ஜார்ஜ் டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 372 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 242 பேர் பெண்கள், 130 பேர் ஆண்கள். 357 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வில் பதில் அளித்த 357 பேரில் 99 சதவீத பேர் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பி னராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் நலவாரியத்தில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, சாலையோரம் வசிக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வு நடத்தியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment