டிச.7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

டிச.7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

புதுடில்லி, நவ.15- டிசம்பர் 7 முதல் 29 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரத் துறை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி யுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பழைய கட்டடத்தில் நடந்தாலும் கூட அரசாங்கம் புது நாடாளு மன்றக் கட்டடத்தின் துவக்க விழாவை டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரூ.1200 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3 ஆவது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. இதனை ஒட்டியும், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வ தாலும் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த குளிர்கால கூட்டத்தொடரை பழைய கட்டடத்திலேயே நடத்திவிட்டு பட்ஜெட் தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்கால கூட்டத்தொடரில் அரசு 1500-க்கும் மேற் பட்ட பழைய வழக்கொழிந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

இமாச்சலில் மிக உயரத்தில் அமைந்த வாக்குச்சாவடியில்

 100 விழுக்காடு வாக்குகள் பதிவு

சிம்லா, நவ.15- இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது. டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், மாநிலத்தில் அமைக்கப்பட்ட தாஷிகேங் வாக்குச்சாவடியில் 100 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தாஷிகேங் பகுதியானது, உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்த பகுதியாகும். இந்த வாக்குச்சாவடியை மாதிரி வாக்குச் சாவடியாக தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்து ஏற்பாடு களைச் செய்தது. அங்கு வரும் வாக்காளர்கள் அனை வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேளமிசைத்தும், பாடல்கள் பாடியும் வாக்காளர்களை இசைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,256 அடி உயரத்தில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 52 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் ஆர்வத் துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 

மேலும் 72 பேருக்கு கரோனா

சென்னை, நவ.15 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

சென்னை, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் புதிதாக 39 ஆண்கள், 33 பெண்கள் உள்பட மொத்தம் 72 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் உள்பட 22 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி யுள்ளது. தொடர்ந்து 50 ஆவது நாளாக கரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 189 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத் திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 674 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 

ஒரு நாளில் 547 புதிய பாதிப்புகள்

புதுடில்லி, நவ.15 இந்தியாவில் கரோனா தினசரி பாதிப் புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தற்போது ஆயிரத்திற்கும்கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு - 547 மொத்த பாதிப்பு - 4,46,66,924 புதிய உயிரிழப்பு - 1 மொத்த உயி ரிழப்பு - 5,30,532 குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 4,41,26,924 தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை - 9,468  இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 20,465 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,80,22,159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி ஒதுக்கீடு -தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, நவ.15 தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 525 நூலகங்கள் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் கடந்த ஆண்டு சட்டசபையில் வெளியிட்டார். முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 3,808 நூலகங் களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக் கப்படும். மேற்கூறிய தகவல் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment