பண மதிப்பிழப்பின் வயது 6 -விளைவு என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

பண மதிப்பிழப்பின் வயது 6 -விளைவு என்ன?

மோடி ஏற்படுத்திய பொருளாதார பேரழிவு - நோட்டுத் தடை என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த 2016ஆம் ஆண்டு நவ.8இல் இந்திய பிரதமர் மோடியால் முன்யோசனை மற்றும் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1000 தடை செய்யப்பட்டது, பொதுமக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாகவும், ரூபாய் நோட்டை சாராத இந்திய பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல இந்த நடவடிக்கை உதவும் எனவும் கூறிய பிரதமர் மோடி, பின்னர், தான் எதிர்பார்த்தபடி, இல்லாமல், வங்கிகளிடம் வந்தடையும் பழைய ரூபாய்த் தாள்கள் அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், அரசு புதிய கருத்தை கூறத் தொடங்கியது.  “டிஜிட்டல் இந்தியாவை” உருவாக்கவே இந்த முயற்சி என்று பின்னர் கூறி சமாளித்தது.

பிரதமர் மோடி தான்தோன்றித்தனமாக அறிவித்த  'டிமானிடைசேஷன்' எனப்படும் பணமதிப்பிழப்பால்  மக்களுக்குக் கிடைத்தது  என்ன?  மோடியின் கூற்று நிறைவேறியதா என்றால் ஒன்றுமே நடக்கவில்லை. அதற்குப் பதிலாக நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்தித்ததுடன், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்பட்ட நிலையை உருவாக்கியது. இதுமட்டுமின்றி, பண நோட்டுப் பரிமாற்றத்தையே அதிகமாக நம்பியிருந்த ஏழை மக்களையும், கிராம சமூகங்களையும் இது மிகவும் மோசமாக பாதித்தது. பல ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டது என்பதே உண்மை. 

மிகவும் ரகசியமான முறையில் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், அவை முதலில் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வங்கிகளுக்குப் பதிலாக ஒன்றிய ஆளும் பாஜகவைச் சேர்ந்த பிரபலங்கள், அவர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்குத் தாராள மாக  கிடைத்தன. மறுபுறம், கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், அதை தங்க நகைகளாகவும், தங்கக் கட்டிகளாகவும் உருமாற்ற மோடி வாய்ப்பை உருவாக்கித் தந்தார். வங்கிகளின் பண இருப்புக் குவியும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சம்பாதித்த, சேர்த்து வைத்த பணம் கிடைக்காமல் முடக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ரூபாய் நோட் டுக்களும்  ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்தன.  பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.0007 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். 500 ரூபாய் நோட்டுகளில் சுமார்0.002 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். மொத்த கள்ளநோட்டுகள் புழக்கத்தில் மிக குறைவான சதவீதமே வந்துள்ளது. மீதி என்ன ஆனது என்பதை மோடி அரசு விளக்கவில்லை.

மோடி 2017 ஆம் ஆண்டு விடுதலை நாள் உரையின் போது ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப்பணத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டேன் என்றார். ஆனால்  கறுப்புப்பணம் போலி ரூபாய் நோட்டுக்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதை ரிசர்வ் வங்கியே புள்ளி விவரத்தோடு வெளியிட்டு நடவடிக்கை தேவை என்கிறது. பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதார வெற்றிடத்தை உருவாக்கி அடிமட்ட தொழில் முடங்கி, பட்டினியும், வேலை இழப்பும் தீவிரமானதுதான் மோடியின் பணமதிப்பிழப்பின் குறிப்பிடத்தக்க சாதனை! மற்றொரு பக்கம் எல்லா வகையிலும் சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் டிஜிட்டல் கம்பெனிகள் பெருகி, பெரும் லாபம் சம்பாதிக்க மோடி அனுமதித்தார்

கவர்ச்சி வசனங்களால் வாக்காளர்களை ஈர்த்த பிரதமர் மோடியின் திட்டமிட்ட செயற்கையான, போலித் தனமான வீராப்புப் பேச்சுகள்தான் தெருக்கோடியில் வாழும் சாமானிய மனிதனுக்கு மிச்சம். செயல் அளவில்  பணமதிப்பிழப்புக்கு பிந்தைய நடவடிக்கைகளில் நேர்மையான முன்னேற்றங்கள் இல்லை  

வெளிநாடுகளின் முதலீடுகள் என்பது உறுதியான பொருளாதாரம், வெளிப்படையான கொள்கை முடிவுகளைக் கொண்ட அரசு இருக்கும் இடத்திலேயே நடைபெறும். இந்தியாவில் பணமதிப்பு குறைப்பு, நோட்டுகளை செல்லாமல் செய்தது போன்ற திடீர் அறிவிப்புகளால் நிலையற்ற கொள்கைகளைக் கொண்ட அரசாக மோடி அரசை வெகுஜன சாமானியர்கள் பார்க்கிறார்கள்.இதே நிலை தொடர்ந்தால், அடுத்து திடீர் அறிவிப்பு மூலம் ஒரு நாள் ரூபாய் நோட்டுகளே செல்லாது என்ற அறிவிப்பை ஏன் மோடி வெளியிடத் தயங்க மாட்டார் போன்ற கேள்விகளும் சாமானிய மக்கள் மனங்களில் எழுகின்றன. இப்படிப்பட்ட நிலையற்ற தன்மையால் வெளி நாட்டு முதலீடுகள் எந்த உத்தரவாதத்துடன் இந்தியாவுக்கு வரும்? மோடியின் நடவடிக்கையால், பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. சாதாரண, நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 நாள்களுக்குள் இந்த விவகாரம் சீராகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 5 ஆண்டுகள் கடந்து விட்டன இன்றுவரை பிரச்சினை தீரவில்லை. மக்கள் தொடர்ந்து  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மக்கள் விழித்தெழ வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால்தான், வீடும் நாடும் பிழைக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment