வேலூர்,நவ.8- தமிழ்நாடு முழுவதும் 12,525 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் சாய்வு தளம், கழிப்பறைகள் கட்டப்படும் எனவும், பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும் எனவும், புதிய புத்தகங்கள், தளவாடப் பொருட்கள் வாங்கப்படும் எனவும் கடந்த 2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நூலகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3,808 நூலங்கள் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், சாய்வு தளம், கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும், கூடுதல் புத்தகங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 3,808 நூலகங்களும் ரூ. 55 கோடியே 71 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நூலகத்துக்கும் ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் நாற்காலி, மேசை போன்ற தளவாடப் பொருட்கள் வாங்கு வதற்கு ரூ. 9 கோடியே 51 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு நூலகத்துக்கும் தலா ரூ. 51 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ. 19 கோடியே 4 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் ரூ. 84 கோடியே 27 லட்சத்தை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment