சென்னை நவ 1 - போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை ஒன்றிய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு கடந்த 26-ஆம் தேதி முதல் அபராத தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது. இந்த அபராத உயர்வு சென்னையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.ஆயிரமும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதிவேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும், அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் முதல்முறை ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் ஆகும். இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி முதல் காவல்துறையனர் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி அவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகையை விதித்து வருகிறார்கள். இந்தநிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,187 வழக்குகளை போக்கு வரத்து காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் 2,293 பேர் உடனடியாக அபராத தொகை செலுத்தியதால் ரூ.16 லட்சத்து 29 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப் பட்டதில் மீதம் ரூ.26 லட்சத்து 74 ஆயிரம் நிலுவையில் உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment