சீமான் வீட்டுப் பிள்ளை... மன்னர் பரம்பரை. ஆனால் இவருடைய பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை.
பல வருடம் முடங்கிக் கிடந்த மண்டல் ஆணைய அறிக்கையை அமலாக்கி, விளிம்பு நிலை மக் களை நிமிரச் செய்தவர். அதற்கா கவே தன் பிரதமர் பதவியையும் இழந்தவர்.
"உடலில் வலிமையிருந்தால் இந்நேரம் நான் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன்" என்று துணிந்து சொன்ன இளவரசர்.
சொந்த சகோதரனையே கொள்ளையனிடமிருந்து காப்பாற்ற முடியாத நான், உ.பி. மக்களை எப்படி காப்பாற்றுவேன் என்று மனம்புழுங்கி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நேர்மையாளர்.
ஊழல் புகாரில் சிக்கிய அம்பானி மீதும் அமிதாப் பச்சன் மீதும், நடவடிக்கை எடுத்த துணிச்சல்காரர்.
அவ்வளவு ஏன், "நாட்டுக்காக மிக முக்கிய பணிகள் செய்த அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது தராதபோது, எம்.ஜி.ஆருக்கு எதுக்கு இத்தனை அவசரமாக பாரத ரத்னா தர வேண்டும்?" என்று அன்றைய பலம் பொருந்திய காங்கிரஸை விமர்சித்தவர்.
அத்துடன் தன்னுடைய ஆட்சியில், அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியதுடன், நாடாளுமன்றத்திலும் அம்பேத்கரின் படத்தை கம்பீரமாக இடம்பெறச் செய்தவர்.
"அடுத்த தலைமுறையில் நம்பிக்கை இல்லை, அப்படியிருந்தால் தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறக்க ஆசை" என்றவர்.
தந்தை பெரியாரைப் பற்றி பேசும் போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார் வி.பி.சிங். 'சமூகநீதியின் தலைநகரம் பெரியாரின் தமிழ்நாடு' என்பதை வடமாநிலங் களில் மறக்காமல் பதிவு செய்துகொண்டே இருந்தார்.
இவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை வரவும், மாற்று சிறுநீரகம் தர திராவிடர் கழக இளைஞர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று, என் ஆயுளை நீட்டிக்க விருப்பமில்லை என்று நிராகரித்துவிட்டார்.
"பிரதமரிலேயே கலைஞருக்கு நெருக்கமாக இருந்தது யார்?" என்று சண்முகநாதனிடம் ஒருமுறை கேட்டபோது, "கலைஞரின் இதயத்துக்கு நெருக்கமாக இருந்தவர் வி.பி.சிங். ஒரு ராஜ பரம்பரையில் பிறந்திருந்தும், ஜாதி ஒழிப்பிலேயும், சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கிய காரணம். 2 பேரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தாங்க" என்றார்.
ஒடுக்கப்படாத ஜாதிகளில் பிறந்து, ஒடுக்கப்பட்டவர் களுக்காகவே இப்படி வாழ்வது என்பது ரொம்ப அபூர்வம்..!
ஆனால், இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி, ஒரு சாரார் இவரைப் புறக்கணித்தனர். மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது, அத்துடன் சமூக நீதியும் இணைந்தாக வேண்டும் என்பதே இவரது ஆழமான நம்பிக்கை.
அதற்காகவே கடைசிவரை யாருக்காகவும் தன்னை ‘காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளாமலும், வெறுப்பரசியலை வெறி கொண்டும் வெறுத்தவர் வி.பி.சிங்.
வெறும் 11 மாதங்களே இந்த நாட்டை ஆண்டாலும், ஒரு நல்ல தலைவன், குடிமக்களால் என்றென்றும் மதிக்கப் படுவார் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வி.பி.சிங்.
இந்தியாவின் அசமன்பாடுகளை தவிடுபொடியாக்கி யவர் வி.பி.சிங்.
சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தி யவர் வி.பி.சிங்.
தேசத்தின் அரசியலையே புரட்டிப் போட்ட இந்த குணாளன் வி.பி.சிங் செய்த சீர்திருத்தப் பங்கை, அவ்வளவு எளிதாக யாரும் மறைத்துவிட முடியாது... மறுத்துவிட முடியாது... மறந்துவிட முடியாது... மறந்துவிடவும் கூடாது.
No comments:
Post a Comment