நவம்பர் 26 : வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

நவம்பர் 26 : வீர வணக்கம்!

கவிஞர் கலி. பூங்குன்றன்

சுதந்திர நாடா - இது

சுதந்திர நாடா?

ஜாதி இருக்கும் நாட்டில்

சுதந்திரம் இருக்குமா?

சுதந்திரம் இருக்கும் நாட்டில்

ஜாதி இருக்கலாமா?

இந்தியத் துணைக் கண்டத்தில்

இந்த வினாவை

எழுப்பிய ஒருவரைக்

காட்டுங்கள் பார்க்கலாம்!

சூரியனையும் சுட்டு எரிக்கும்

சுதந்திரச் சிந்தனையாளர்

ஒரே ஒருவர்தான்

உரக்கக் கேட்டார்

அவர்தான் அறிவாசான்

அய்யா பெரியார்!

வாய்ப் பேச்சு வீரரல்ல!

சட்டத்தைத் திருத்துகிறாயா

இல்லை

சட்டத்தை எரித்து சாம்பலை

அனுப்ப வேண்டுமா?

இலட்சோப லட்ச

மக்கள் சமுத்திரம்

குரல் கொடுக்க

வினா எரிமலையை

வீசினார் வெண்தாடிவேந்தர்

நாடே கிடுகிடுத்தது

டில்லிக்கோட்டை அதிர்ந்தது

கேட்ட கேள்விக்குப்

பதில் இல்லை

வெட்கம் கெட்ட

மூளிகளுக்கு!

மூன்றாண்டு தண்டனை

என்று சட்டம் இயற்றினர்

"மூன்றாண்டல்ல

தூக்குக் கயிற்றினை

முத்தமிடவும் தயங்கோம்!"

முழக்கமிட்டது 

கருஞ்சட்டைமா கடல்

பத்தாயிரம் கருஞ்சட்டைத்

தோழர்கள்

குடும்பம் குடும்பமாக

கொலை வெறியோடு

கொளுத்தினர் கொளுத்தினர்

கொள்கை மாவீரர்களன்றோ!

சிறைக் கொடுமையால்

ஜாதி ஒழிப்புக்குக்

கொடையாய்க் கொடுத்தனர்

தம்முயிரைத் தோழர்கள்

பட்டுக்கோட்டை ராமசாமி

மணல்மேடு வெள்ளைச்சாமி

பட்டியல் நீளும்

பற்றி எரிகிறது இன்று

நினைத்தாலும்.

நிறை மாதக் கர்ப்பிணிகளும்

சிறைவாசல் சென்றனரே!

ஈன்ற குழந்தைக்கு

என்ன பெயர் தெரியுமா?

"சிறைப் பறவை"

"சிறைவாணி"

செகத்தினில் கேட்டதுண்டா?

சிலிர்க்கிறது உடலணுக்கள் எல்லாம்!

வீர வணக்கம்! வீர வணக்கம்!

கருப்பு மெழுகுவர்த்திகளே

காய்ச்சிய நெருப்பில்

கொள்கைப்பால் குடித்தவர்களே

உங்கள் கால் தூசுக்கு

ஒப்புவார் யார் யார்

எரிமலை நதியிலே

எதிர் நீச்சல் போட்ட

புடம் போட்ட 

தங்கங்களே!

உங்கள் தியாக

சீலத்திற்கு

வீர வணக்கம்!, வீர வணக்கம்!!

வரலாறு செத்தாலும்

வாழ்வீர் நீங்கள்!

கடும் புயல் வீசினாலும்

கருப்புத் தீபங்களே

உங்கள் தீச்சுடர்

அணையாது - அணையாது

நவம்பர் புரட்சி

ருசியாவிலே!

நவம்பர் புரட்சி

தமிழ் மண்ணிலே!

சட்டத்தை எரித்தும்

சொரணையில்லை

ஆளவந்த கூட்டத்துக்கு

இன்னும் என்ன

விலை வேண்டும்

கொடுக்கத் தயார்!தயார்!!

சூளுரைப்போம்

நவம்பர் 26இல்!

 


No comments:

Post a Comment