நவம்பர் 26 சட்ட நாளில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

நவம்பர் 26 சட்ட நாளில்...

* மன்னராட்சியின் மேன்மைகள், வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், இதிகாச புராண கருத்தரங்குகளை நடத்தவேண்டுமாம்!

* பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியது!

அறிவுக்குத் தூக்குப்போடும் மதவெறிப் படையெடுப்பைக் கண்டித்து மாணவர்களே கண்டனக் குரலை எழுப்புவீர்! எழுப்புவீர்!!

கல்வி நிறுவனங்களில் வேதம், மனுஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் குறித்து சட்ட நாளான நவம்பர் 26 அன்று கருத்தரங்குகளை நடத்துமாறு பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வருகிற நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்டத் தினை வகுத்து, அது செயலுக்கு வர, மக்களாகிய நமக்கு நாமே வழங்கிக் கொண்டு அது செயல்படத் தொடங்கிய நாள்.

அதன் பீடிகையான முகப்புரையில் (Preamble)  இந்திய அரசும், மாநில அரசுகளும் எப்படிப்பட்ட கொள்கை கொண்டவையாக அமைதல் வேண்டும் என்பது வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட முகப்புரை 

கூறுவது என்ன?

‘‘அரசு முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகவே இயங்கும்'' என்பதும் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

‘‘Sovereign, Socialist, Secular, Democratic Republic''  என்ற அய்ந்து அம்சங்களும் என்றென்றும் மாற்றக் கூடாதவை என்று திட்டவட்டமாகச் சொல் வதோடு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான இக்கொள்கைகளே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் - மாற்றக் கூடாத அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்றும் பறைசாற்றப்பட்டு செயலிலும் இருந்தது!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. 2014 இல் ‘‘குஜராத் மாடல் - வளர்ச்சி மாடல்'', வேலை வாய்ப்பு முதலியவற்றை வேலை கிட்டாத இளைஞர்களுக்குத் தருவது முன்னுரிமை என்று கூறி, மேலும் சில பொய் வாக்குறுதிகளையும் வாரி விட்டு, ஏமாற்றி பதவியைப் பிடித்தனர்!

மோடி, பி.ஜே.பி. கொடுத்த 

வாக்குறுதிகள் என்னாயிற்று?

மோடி, பிரதமராகும் முன்னர், பிரச்சார மேடைகளில் தேர்தல் வாக்குறுதியாக,

‘‘ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று வந்துவிழும்!

ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளைத் தருவோம்!

விலைவாசிகளைக் குறைப்போம்.

வெளிநாட்டு, உள்நாட்டுக் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து, கட்டுப்படுத்தி, பொருளாதாரப் புதுமையை நிகழ்த்துவோம்'' என்று கூறினார்!

அது ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள் கேட்டவுடன், மக்களும், நம்பி வாக்களித்தவர் களும் திகைக்கும் வண்ணம், அவர்களே அது ஒரு ‘ஜூம்லா' - ‘‘சும்மா சொன்ன வேடிக்கை''  என்று சிறிதும் கூச்சமின்றி கூறி, இரண்டாம் முறையிலும் பல ‘‘வித்தைகள்''மூலம் ஆட்சியைத் தக்க வைத்து, தாங்கள் நினைத்த ஒற்றை ஆட்சி இலக்கை நோக்கி ஆட்சியை நாளும் நகர்த்தி வைப்பதோடு, ஒரே மதம் - வேத, சனாதன, பார்ப்பன ஹிந்து மதத்தின் ‘‘அறிவிக்கப்படாத ஹிந்துத்துவ ராஜ்ஜியமாகவே'' நாளும் நடத்திட முயற்சிக்கின்றனர்!

முக்கியமாக கல்வியைக் காவி மயமாக்கி, இளம் உள்ளங்களில் மத நஞ்சைப் புகுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளனர்!

இதோ ஒரு முக்கிய அரசமைப்புச் சட்ட நெறிக்கு முற்றிலும் முரணான முயற்சிக்கு முன்னோட்டம் காணுவதற்கான ஓர் எடுத்துக்காட்டு.

பல்கலைக் கழக மானியக் குழுவின் பிற்போக்குத்தனமான வழிகாட்டல்!

வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி அரசமைப்புச் சட்ட(Constitution Day) நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில், பல்கலைக் கழக மானியக் குழு (U.G.C.) சார்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதில், கீழ்க்காணும் தலைப்புகள் இடம்பெறவேண்டுமாம்!

‘‘1. மன்னராட்சியின் மேன்மைகள் 2. வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், இதிகாசம், புராணங்கள் ஆகிய  சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ‘ஜனநாயகச் சிந்தனைகள்' என்பனவற்றை கருப்பொருளாகக் கொண்டதாக இருக்கவேண்டுமாம்!''

என்னே கொடுமை!

இது ஆரிய சமஸ்கிருத கலாச்சாரப் பரப்புத் திட்டமல்லாமல் வேறு என்ன?

‘மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி' என்ற நிலையில், ஜாதி, வருண தர்மம், சனாதனம் இவற்றை இப்படித்தான் இவற்றில் போய் ஜனநாயகத்தைத் தேட வேண்டுமாம்!

ஜனநாயகத்தின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம், எதையும் ஆராய்ந்து, விவாதித்து, சீர்தூக்கிப் பார்த்து அறிவு என்ற உரைகல்லில் உரைத்துப் பார்த்தல்,

வேதம், மனுஸ்மிருதிகளில் 

ஜனநாயக வாடை உண்டா?

வேதத்திலோ, மனுஸ்மிருதியிலோ, அர்த்தசாஸ் திரத்திலோ அது சிலாகிக்கும் மன்னாராட்சி முறையிலோ ஜனநாயக வாடையே கிடையாதே! இருக்கக் கூடாதே!!

புரட்சிக்கவிஞர் அழகாக எழுதியதுபோல,

‘‘சிரம் அறுத்தல் வேந்தனுக்கோர் பொழுதுபோக்கு

நமக்கெல்லாம் உயிரின் வாதை''

என்ற வரிகளில் அக்கொடுமை அப்பட்டமாக மக்கள் புலம்பல்தானே ஒலித்தது என்று படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

மாணவச் செல்வங்கள் அறிவை விரிவு செய்யாமல், அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் கூறும் எச் பிரிவுப்படி, ‘‘அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்கும் உணர்வு களின் வேகம், மனிதநேயம், சீர்திருத்தம்'' என்பவற்றை அழிப்பதுதானே வேதம், மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் என்பதை எவரே மறுக்க முடியும்?

மாணவர்களே, கண்டனக் குரலை எழுப்புவீர்!

என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கு? என்பது போன்ற கேள்விகளுக்கு இம்மியும் இடந் தராதவற்றை - பல்கலைக் கழகங்களில், அதுவும் சட்ட நாளில், அதன் அடிக்கட்டுமான அம்சங்களுக்கு நேர் எதிரிடையான கருத்தரங்குகளா? மகாமகா வெட்கக் கேடு!

இதனை எதிர்த்து மாணவர்களே, கண்டனக் குரல்களை எழுப்புங்கள்!

அறிவுக்குத் தூக்குப் போடும் இந்த அழுக்கு மதவெறி படையெடுப்பை மண் மூட மக்களை ஆயத்தப் படுத்துவோம்!

வாரீர்! வாரீர்!!

நவம்பர் 26 ஆம் நாளை சனாதன நாளாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் திட்டங்களை முறியடிக்க ஒன்று திரள்வோம், வாரீர்! வாரீர்!!


தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.11.2022


No comments:

Post a Comment