கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
சட்ட நாளான நவம்பர் 26 ஆம் தேதி - நாடு முழு வதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கருத்தரங் குகளை நடத்துமாறு பல்கலைக் கழக மானியக் குழு ஆணையிட்டுள்ளது.
எந்தெந்த பொருள்களின் அடிப்படையில் கருத்தரங் குகள் என்பது குறித்தும் ஒரு பட்டியலையும் திணித் துள்ளது.
மன்னராட்சியின் மேன்மைகள், வேதங்கள், மனுஸ் மிருதி, அர்த்தசாஸ்திரம், இதிகாசங்கள், புராணங்கள் குறித்து கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டுமாம்.
நாட்டில் நடப்பது ஜனநாயகம் என்ற போர்வையில் நரேந்திர மோடி என்ற தனிக்காட்டு ராஜாவின் தலை மையில் மன்னராட்சிதானே நடந்துகொண்டுள்ளது.
அவர் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சமாயிற்றே!
மன்னர்கள் காலத்தில் ராஜகுருக்கள் எல்லாம் பார்ப்பனர்கள்தானே!
மந்திரிமார்களைப் பார்த்து மன்னர் கேட்பார்: ‘‘மந்திரி, நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா? மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறதா?'' என்றுதானே கேட்பார்கள்.
மனுதர்மம் என்றால் ஒரு குலத்துக்கொரு நீதிதானே. பிர்மா இந்தப் பூலோகத்தைப் படைத்ததே, ‘பிராமணர்' களுக்காகத்தானே!
வைதீகமாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும், ‘பிராமணனே' மேலான தெய்வம். (மனு:
அத்தியாயம் 9, சுலோகம் 317).
‘இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது? அதைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்?' என்று மேதாவித் தனமாகப் பேசுவோர் உண்டு. அவர்களின் முகத்தில் அறைவதுபோன்ற பதில்தான் - பல்கலைக் கழக மானியக் குழு, சட்ட நாளில் மனுதர்ம சாஸ்திரம்பற்றிக் கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டதாகும்.
2030 இல் நிலாவில் குடியிருக்கலாம் என்று ஒரு பக்கத்தில் செய்தி வருகிறது. இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழக மானியக் குழு வேத காலத்திற்குக் காலைப் பிடித்து இழுக்கிறது.
‘‘ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் - ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்தான் எங்கள் கொள்கை'' என்று மார்தட்டும் ஓர் ஆட்சியில், பல்கலைக் கழக மானியக் குழு பர்ண சாலையாக இருப்பதில் ஆச்சரியம் ஏது?
ஹிந்துராஜ்ஜியம் என்றால் அங்கே மேலாண்மை பார்ப்பன ஆதிக்கம்தானே!
வேதம் என்ன கூறுகிறது?
தேவாதீனம் ஜெகத் சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்த்ரம் பிரமணாதீனம்
பிராமணா மமதேவதா
(ரிக் வேதம், 62 ஆம் பிரிவு, 10 ஆம் சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை.
பிராமணர்களே நமது தெய்வம்.
இதனை வழிமொழியும் வகையில் காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் ‘தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில், ‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியது என்ன?
‘‘எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற் படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக் கர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு; அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான், அந்தணன்தான் முதலில். (‘நக்கீரன்', 15.11.2022).
ஆகக் கடவுளுக்குமேல் பார்ப்பனர்கள் என்பதைக் கூறும் வேதங்கள்பற்றி கருத்தரங்காம்!
மகாபாரதம், இராமாயணம் என்பதெல்லாம் நடந்த வரலாறா?
புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஆர்.எஸ்.சர்மா என்ன கூறுகிறார்?
மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூலை எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.
11 ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி வெளியிட்டுள்ள ‘தொன்மை இந்திய வரலாறு' (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா.
அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி.200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன்பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப்பற்றி பேசுவதைக் கைவிடவேண்டும்'' என எழுதப்பட்டு இருக்கிறது.
அயோத்தியாவைப்பற்றியும், ஆர்.எஸ்.சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது. புராணங்களில் மிக நீண்ட குடும்பக் கால் வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால் வழியைவிட, அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக் கொள்ளவேண்டும். புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு.2000-இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரியவில்லை'' என்று ஆர்.எஸ்.சர்மாவின் ‘‘தொன்மை வரலாறு'' எனும் நூல் கூறுகிறது.
அவாள் ஏடான ஆனந்தவிகடன்
கூறுவது என்ன?
கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத் திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உள்பட கவுரவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம்; ஏன் குருசேத்திர போர் வரை செல்லவிட்டார்?
பதில்: முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று, ‘போர் வேண்டாம்' என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவ தாரமாகக் கருதப்பட்டது, மிகப் பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் கிருஷ்ணன் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!
(‘ஆனந்த விகடன்', 31.10.2007)
‘’பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால், அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது.’’
‘‘அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.''
“கி.மு.1100-க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.''
“இராமாயணம், மகாபாரதம் இரண் டிலும் அவ்வப் போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரி சையைக் காட்டிப் பலவற்றைப் ‘புகுத்தி'யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே.”
ஆதாரம் : 12.10.1975 நாளிட்ட “ஆனந்த விகடன்”
உண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்கரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்?
‘இந்து' ஏட்டில் (18.12.1988) ஒரு கடிதம் ‘‘Adults Only Mahabharatham''என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்ட போது நேயர் ஒருவர் ‘இந்து' ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம்.
கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம்,
கடிதம் இதோ:
தர்மபுத்திரா (யுத்திஸ்திரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு தருமர் ஆகியோர் பிறக் கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட் டும்போது. உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப் பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது. திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷ லட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்துக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகா பாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.
- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்
இந்த யோக்கியதையில் உள்ளதுதான் மகா பாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம் அப்படியென்றால். இவர்களின் மான உணர்வின் யோக்கியதைதான் என்ன?
இதுபற்றிதான் கருத்தரங்கம் நடத்தவேண்டுமாம் - சொல்கிறது பல்கலைக் கழக மானியக் கமிஷன்.
கீதையை உலகம் முழுவதும் டிரஸ்டு வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியாவின் ‘புனித' நூலாக வும் அறிவிக்கப் போவதாகவும் மறைந்த ஒன்றிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்கூட சொன்னதுண்டு.
(தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘‘கீதையின் மறுபக்கத்திற்கு'' இதுவரை பதில் உண்டா?)
‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்'' என்கிறான் கிருஷ் ணன். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன். அந்த வருண தர்மத்தை உற்பத்தியாளனாகிய என் னால்கூட மாற்றிவிட முடியாது. (கீதை: அத்தியாயம் 4, சுலோகம் 13)
‘‘பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்.'' (கீதை: அத்தியாயம் 9, சுலோகம் 32).
இந்தக் கேடுகெட்ட கீதைபற்றித்தான் கருத்தரங்கு நடத்தப்படவேண்டுமாம்.
என்னே, வெட்கக்கேடு!
ராஜாஜி என்ன சொல்கிறார்?
‘வியாசர் விருந்து' என்ற தலைப்பிலும், ‘சக்கரவர்த்தி திருமகன்' என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் ‘கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.
‘‘சதாசிவம், எனக்குப் பாகவதத்தில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதி யாக உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார். (‘கல்கி', 4.10.2009, பக்கம் 72).
புராணங்கள்பற்றியும் பேசவேண்டுமாம். திருவிளை யாடல், புராணத்திலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை எடுத்துச் சொன்னால், முகரையை எங்கே கொண்டு போய் ஒளிய வைப்பார்கள்?
‘‘ஆபத்பாந்தவா, அனாதை ரட்சகா!'' என்று ஆண்டவனை ஏற்றிப் போற்றுவார்கள் பக்தர்கள். இவை ஏதோ வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல, ஆண்ட வன் அப்படியெல்லாம் தம் பக்த கோடிகளைக் காப்பாற் றியிருக்கிறார் என்று புராணங்களிலிருந்து புட்டுப் புட்டு வைப்பார்கள்.
மகாபாரதத்தில் துரோபதையின் துகிலை துரி யோதனாதிகள் உரிந்தபோது ஆபத்பாந்தவனாக வந்து பரந்தாமன் துணிகளை ரீல் ரீலாக விநியோகம் செய்ய வில்லையா? என்று செவிளில் அறைந்ததுபோல பதில் அறைவார்கள்.
ஒரு யானை - கஜேந்திரன் - அதன் காலைப் பிடித்துக் கொண்டது முதலை. கண்ணீர் மல்க ‘ஆதி மூலமே' என்று அலறியது விஷ்ணுவின் காதில் தன் பக்தனின் சத்தம் அலைமோத, கருட வாகனத்தில் கடுகி வந்தான், எடுத்தான் சங்கு சக்கரத்தை, ஏவினான், விளைவு முத லையின் உயிர் குடிக்கப்பட்டது. தனது பக்தன் கஜேந்திரன் காப்பாற்றப்பட்டான்.
அந்த முதலை உண்மையில் முதலையும் அல்ல - முதலை வடிவில் இருந்த ஹீஹீ என்ற கந்தர்வன் - அவனுக்குச் சாப விமோசனமும் அளிக்கப்பட்டதாம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றும் இந்து மதத்தில் மிக முக்கியம் என்பார்கள். இதற்கெல்லாம் தலப் புராணங்கள் கொஞ்சமா, நஞ்சமா!
திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலம். இதோ ஒரு காட்சி:
அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணித்து வீடளித்த தென்றால்
பின்னை நீ வீழ் நோய் குட்டம்
பெரு வயி றீளை வெப்பென்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை?
இந்தக் கோயில் தீர்த்தம் இருக்கிறதே சாதாரண மானதா! தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற வனுக்கே மோட்சம் அளித்த தீர்த்தம் என்றால் - குட்டம், பெரு வயிறு, ஈளை வெப்பு நோய் இவற்றைத் தீர்க்க வல்லது என்பதா பெருமை என்று பாடுகிறார் பரஞ்சோதி முனிவர்.
தாயைப் புணர்வதுபற்றி எல்லாம் மாணவர்களுக்குக் கருத்தரங்கம் நடத்தவேண்டுமா?
புண்ணிய தீர்த்தங்களுக்கு இப்படியெல்லாம் புரா ணங்களைப் புனைந்திருக்கிறார்கள். தாயைப் புணர்ந்த வனுக்குக்கூடத் தயாராக இருக்கிறது சொர்க்கம்! ஒரு குட்டையில் மூழ்கி எழுந்தால் எல்லா பாவங்களும் பறந்தோடி விடும். இந்த ஆபாசங்கள்பற்றி எல்லாம் எந்தப் பக்தனும், பாகவதனும், சங்கராச்சாரியாரும், பத்திரிகைகளும் வெட்கப்படுவதில்லை.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் 12 வருடங்கள் செய்த குற்றங்களும், பாவங்களும் கூண்டோடு பறந்தோடுவது மட்டுமல்ல; புண்ணியமும்கூட கிடைக்கும் என்கிறார்கள்.
2018 இல் நடந்த கும்பகோணம் மகாமகத்தின் வண்ட வாளம் என்ன? மகாமகம் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட ஆய்வில் அந்த நீரில் மலக்கழிவுகள் 28%, சிறுநீர்க் கழிவுகள் 40%.
(DT Next, 23.2.2018)
ஆண்டாள் கதை என்ன?
ஆச்சாரியாரே, சொல்லுகிறார்:
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததில்லை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப் படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார்.
- ராஜாஜி, (‘திரிவேணி' ஆங்கில மாதப் பத்திரிகையில், ராஜாஜி எழுதி வெளிவந்த ஒன்று, 1946, செப்டம்பர்).
கோவில், குளம் என்று கூத்தடிக்கிறார்களே, ‘தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்' என்கிறார்களே! அந்தத் திருப்பதியின் யோக்கியதை என்ன?
நாம் சொல்லவில்லை, அவாள் ஆத்து ‘ஆனந்த விகடனே அம்பலப்படுத்துகிறது.
புண்ணியதலமான திருப்பதி திருமலையில் விபச்சாரம் என்று சொல்லலாமா? அபச்சாரம் அபச்சாரம் என்று புலம்பும் பக்தர்களே! ‘ஆனந்த விகடன்' வெளியிட்ட இந்தச் செய்திக்கு என்ன பதில்?
‘‘சட்டென்று திடுக்கிட்டு ‘திருப்பதியில் நடந்த கொடுமையைப் பார்த்தியா?' என்றாள் சுமதி
திருப்பதியில் என்ன நடந்தது?
திருப்பதிக்குச் சாமி கும்பிட வர்ற காதல் ஜோடிகளை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னாபின்னப் படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்''- சுமதி
அடப்பாவமே.
‘விடுதியில் இருந்த அந்த ஜோடியில், பையனை ஏதோ காரணம் சொல்லி அனுப்பிட்டு, அந்தப் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கற்பழிச்சிருக் காங்க. பிறகு அந்தப் பெண்ணையும் வெளியே தூரத்திட்டாங்க. பையன் ஒரு பக்கமுமா பொண்ணு ஒரு பக்கமுமா ஒருத்தரை ஒருத்தர் திருப்பதி மலையில் தேடி அலைஞ்சு. கடைசியா ஒண்ணு சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்திருக்காங்க. இப்போ அந்த ரெண்டு ஊழியர்களையும் கைது பண்ணியிருக்கு போலீஸ்_ என்றாள் சுமதி
அடக் கொடுமையே புனிதமான மலையில் இப்படி சில புல்லுருவிகளா? காதல் ஜோடின்னா யாருக்கும் தெரியாம வந்திருப்பாங்க, விஷயத்தை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு நினைச் சுட்டாங்க போல" (‘ஆனந்த விகடன்' 25.2.2007).
கோவில் ஒழுக்கத்தை வளர்க்கும் இலட்சணம் இதுதான். இவற்றைப்பற்றி எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
மதம் - ஒரு மனிதனை எந்த அளவுக்கு ஒழுக்கக் கேடனாகத் துரத்துகிறது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு!
‘தினமலரையே சாட்சிக்கு அழைப்போம்!
‘‘கலிங்க நாட்டில் வாகீசர் என்ற பிராமணர் இருந்தார். இவர் வேதம் படிக்கவில்லை. ஆச்சாரங் களைப் பின்பற்றுவதில்லை. உப்பு எண்ணெப் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்தார். சாஸ் திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களை இவர் தைரியமாகச் செய்வார். பாப காரியங்கள் செய்ய அஞ்சுவதே இல்லை. இப்படிப்பட்டவர் ஒரு நாள் காட்டிற்குச் சென்ற போது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இவரது உடலின் மாமிசங்களை கழுகுகள் தின்றன. அதில் ஒரு கழுகு, அவரின் கணுக்கால் கட்டு எலும்பை மூக்கினால் தூக்கிக் கொண்டு சென்றது. காசி நகரில் கங்கை நதியைக் கடந்து செல்லும்போது, வேறு கழுகுகளுக்கும், இந்த கழுகிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது வாகீசரின் உடல் எலும்பு கங்கை நதியில் விழுந்துவிட்டது.
அதுவரை நரக லோகத்தில் தண்டனை அனு பவித்துக் கொண்டிருந்த வாகீசருக்கு, கங்கையில் அவரின் உடல் எலும்பு விழுந்ததால் பரிகாரம் ஆகிவிட்டது. உடன் எமதர்ம மகாராஜா சித்ரகுப் தரைக் கூப்பிட்டு, ‘வாகீசரின் எலும்பு கங்கையில் விழுந்ததால், அவரின் பாபங்கள் விலகி விட்டன. அதனால், இவரை சொர்க்க லோகத்திற்கு விமா னத்தில் ஏற்றி அனுப்புவாயாக' என தெரிவித்தார். அதனால் காசியில் தெரிந்தோ தெரியாமலோ அஸ்தி போடப்பட்டால் பாபம் விலகுகிறது. அதே நேரத்தில் முறையான சாஸ்திர, சம்பிரதாயங் களுடன் அஸ்தி கரைக்கப்பட்டால், அந்த அஸ்தி யின் சொந்தக்காரருக்குப் புண்ணியலோகம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் காசியில் அஸ்தியை கரைப்பது புண்ணியம் என்று கூறப்படுகிறது.
(‘தினமலர்', 4.11.2002)
மேற்கண்ட தகவல்கள் எதைத் தெரிவிக் கின்றன? எந்தக் கொடிய பாவங்களைச் செய் தாலும், கங்கையில் மூழ்கினால் அல்லது இறந்தபின் அவனது உடலின் எந்தப் பாகமாவது கங்கையில் விழுந்தால் புண்ணியம் கிடைக்குமாம். அப்படி என்றால் பாவங்கள் செய்ய யார் பயப்படுவார்கள்? பாவம் செய்யத் தூண்டுவதுதான் மதமா?
இதனால் ஒழுக்கம் வளருமா? அறிவு வளருமா? அழியுமா?
இவற்றைப்பற்றி கருத்தரங்கு நடத்தச் சொல்லும் கேவலத்தை, பிற்போக்குத் தனத்தைக் கண்டித்துத்தான் திராவிட மாணவர் கழகம் தமிழ்நாடு தழுவிய அளவில் வரும் 25.11.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
கட்சிகளைக் கடந்து மாணவர்களே, இளைஞர்களே, எழுச்சிப் புயலாய் எழுவீர்! எழுவீர்!!
No comments:
Post a Comment