சென்னை,நவ.17- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக வரும்20ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரளப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 17, 18ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 19ஆம் தேதி ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் இன்று நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும். இதனால் வரும் 20ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு அதிகரிக்கும்.
20ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
No comments:
Post a Comment