ரூ.200 கோடியில் திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

ரூ.200 கோடியில் திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகம்

சென்னை,நவ.26- திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிதாக சூரை மீன்பிடிதுறைமுக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ளமீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசை,பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றின் மூலம் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். இவற்றை உள்ளூரில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

மீன்பிடி தொழிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் கடலுக்கு சென்று வருகின்றன. படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவிவரும் நெரிசலை குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் குப்பம் அருகே ரூ. 200 கோடி செலவில் மீன்பிடி துறை முகம் அமைக்க கடந்த 2019-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இங்கு பெரிய மற்றும் சிறிய படகு தளம், வலை பின்னும் கூடம், சிறுமீன்கள் ஏலக்கூடம், ஆழ் கடல் மீன் ஏல விற்பனைக் கூடம் மற்றும் சுமார் 500 விசைப் படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த மீன்பிடி துறைமுகத்தில் அலுவலகம், தங்கும் விடுதி, உணவு விடுதி, மீன் விற்பனை கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீன்கள் பதப்படுத்தும் கூடம் ஆகியவையும் கட்டப்படுகிறது. இத்துறை முகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. வரும் 2023-ஆம் ஆண்டுமார்ச் மாதத்துக்குள் இத்துறைமுகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கும்பகோணம் மடத்தில் கடத்தல் 

'கடவுளர்' சிலைகள் பறிமுதல்

கும்பகோணம் நவ. 26 கும்பகோணம் மவுன சாமிகள் மடத்தில் முறை யான ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 4 உலோக 'கடவுளர்' சிலைகள் மற்றும் 63 நாயன்மார் களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவி யத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மவுனசாமிகள் மடத்தில் பழங்கால உலோக 'கடவுளர்' சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறையினர்   கொண்ட தனிப்படையினர் அந்த மடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பழைமையான உலோக சிலைகள் இருந்தது தெரியவந்தது. அந்த சிலைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் அந்த உலோக சிலைகள் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த 23 செ.மீ உயரமும், 12.5 செ.மீ அகலமும் கொண்ட நடராஜர் சிலை, 14 செ.மீ உயரமும், 5 செ.மீ அகலமும் உடைய திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய சிவகாமி அம்மன் உலோகச்சிலை, 11 செ.மீ உயரமும், 8.5 செ.மீ அகலமும் கொண்ட திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய விநாயகர் சிலை, 37 செ.மீ உயரமும், 16 செ.மீ அகலமும் கொண்ட பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட உலோக சாமி சிலைகள் மற்றும் 144 செ.மீ உயரமும், 115 செ.மீ அகலமும் கொண்ட 63 நாயன்மார்களின் உருவங்கள் அடங்கிய தஞ்சை ஓவியம் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள், பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் ஓவியத்தை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

புதிய வேலை வாயப்புகள் அளிக்க தொழில் முதலீடு!

சென்னை,நவ.26- சென்னையை அடுத்த செம்பரம் பாக்கத்தில் ஜப்பானின் சிபவுரா மெஷின் நிறுவனம் (ஷிவிமி) நவீன மேம்பட்ட தொழில் நுட்பம் - மெகட்ரானிக்ஸ் - செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பங்கள் கொண்ட இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவில் ரூ.225 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைத்துள்ளது. இதுன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளையும், 50 சிறு, குறு நடுத் தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் தனது உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்மிட்டுள்ளது என இக்குழுமத் தின்  தலைவர் சிகெடோமோ  சகமோடோ தெரிவித்துள்ளார்.

உத்தி சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதற்கும், எங்களது தயாரிப்புகளின் விற்பனைக்கு ஏற்ற வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தையும் இந்தியாவில் நிலவுகிறது. மேலும்  நிபுணத்துவம் மற்றும் பொறுப்புள்ள மனிதவளம் கிடைப்பதால் இங்கு தொழிற்சாலை அமைத்துள்ளோம் என  இந்நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.குமார் 

தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment