தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம் முதலமைச்சர் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம் முதலமைச்சர் ஆணை

சென்னை, நவ 17 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் 16-ஆம் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறந்தவரின் குடும்பத்திற்கு ஏற்கெனவே ரூ.20 லட்சம் தரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment