புதுடில்லி,நவ.8- பிறப்பின் அடிப்படை யில் கற்பிக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகளால், சமுதாயத்தில் கல்வி உரிமை மறுக்கப் பட்ட மக்களுக்கு சம வாய்ப்பு அளிக் கப்பட வேண்டுமானால், கல்வியிலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன் னுரிமை அளித்து முன்னேற்றமடையச் செய்யவேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீடு அளிப்பதன் நோக்கமாகும். அந்த வகையில்தான் வகுப்புவாரி உரிமைக்கான அரசமைப்புச்சட்டத் திருத்தம் முதன்முறையாக செய்யப் பட்டது. வகுப்புவாரி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பால் தான் முதல் சட்டத்திருத்தமே செய்யப் பட்டது.
அரசமைப்புச்சட்டத்தின்படி இட ஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூக ரீதியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்களுக்கான உரிமையே தவிர சலுகை அல்ல. மேலும், பொரு ளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளிப்பது என்பது முற்றிலும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதே. மேலும், இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல.
இந்நிலையில் பல காலமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்த பார்ப்பனர் களுக்காகவே தற்பொழுது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பொரு ளாதாரத்தில் நலி வுற்றவர்கள் என்ப திலும் உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்று குறிப்பிட்டு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அர சமைப்புச்சட்டத்துக்கு விரோதமாக அமல்படுத்தியுள்ளது.
இதனை சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவரும் நாடுமுழுவதும் கடுமையாக எதிர்த்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று (7.11.2022) தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் மூன்று நீதிபதிகள் ஒருவித மாகவும், இரண்டு நீதிபதிகள் மாறு பட்டும் தீர்ப்பு அளித்துள்ளனர். பெரும் பான்மை நீதிபதிகள் என்கிற காரணத் தால் 103 சட்டத்திருத்தம் செல்லும் என்று ஆகிவிட்டது.
நீதிபதி ரவீந்திர பட் மற்ற நீதிபதி களின் தீர்ப்புரையிலிருந்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்ப தாவது:
நாட்டின் மக்கள் தொகை அடிப் படையில் ‘சினோ கமிஷன்' கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்த அறிக்கையை இப்போது சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இதில் தாழ்த்தப்பட் டோரின் (எஸ்சி) எண்ணிக்கை 7.74 சத விகிதம் ஆகும். அதாவது அந்த சமு தாய மக்களில் 38 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர்.
பழங்குடிகளில் (எஸ்டி) 4.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள னர். அதாவது அந்த சமுதாய மக்களில் 48 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பிற்படுத்தப்பட் டோரில் 13.86 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அதாவது அந்த சமுதாய மக்களில் 33.1 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர்.
பொது பிரிவினரில் 5.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இதுஅந்த சமுதாய மக்களில் 18.2 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரங்கள் நாட்டின் உண்மை நிலையை கூறுகின்றன.
பொருளாதார அடிப்படையில் பொதுபிரிவில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம் கிடையாது. ஆனால் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை சேர்க்காதது சட்டவிரோதம்.
சமூகத்தில் அனைத்து பிரிவினரும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பாரபட்சமாக இருக்கிறது.
இதில் சமத்துவம் இல்லை. 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறியது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 103 ஆவது அரசமைப்பு திருத்தம் செல்லாது.
-இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.
தலைமை நீதிபதி யு.யு. லலித் தனது தீர்ப்பினை வெளியிடவில்லை. அவர் கூறும்போது, நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்பை முழுமையாக ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment