சென்னை, நவ.28 சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள சி.எஸ்.அய். பெயின் பள்ளியில், 26.11.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் முதல்வர் என்.லில்லி லூயிசா தலைமையேற்றார்.
அவர் தனது தலைமை உரையில், ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என பெரியார் கூறியதை வலியுறுத்திப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வீ.கே. செல்வகுமார் ஆகியோருக்குப் பள்ளியின் சார்பில், பள்ளியின் முதல்வர் சிறப்பு செய்தார்.
நிகழ்வினைப் பற்றிய அறிமுக உரையினை வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் நிகழ்த்தினார்.
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, பெரியார் 1000 தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த டி.சிந்துஜா, கா.ஸ்ருதிகா ஆகிய இருவருக்கும் தலா ரூ.3000 பரிசுத் தொகை, மெடல்கள், சான்றிதழ்கள் , புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.
மேலும் பள்ளி அளவில் முதலிரண்டு இடங்களை பிடித்த மாணவிகள் கே.நேத்ரா, எஸ்.கீர்த்தனா ஆகியோருக்குப் பரிசுத் தொகை, மெடல்கள், சான்றிதழ்கள் வழங்கிப் பாராட் டினார்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தனது உரை யில், பெரியாரை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம், கல்வி, உரிமை, உடை, போன்றவற்றில் தந்தை பெரியாரின் கருத்துகளை மாணவிகள் உணரும் வண்ணம் அவர்களுக்குரிய முறையில் சிறப்பாக பேசினார். மாண விகளும், ஆசிரியர்களும் கையொலி எழுப்பி வரவேற்றனர். பெண்களின் ஆயுதம் அறிவு, எளிமையே வலிமை என கல்வியின் அவசியத்தையும், ஒழுக்கத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் 1000 தேர்வின் வழியாக மாணவர்கள் உணர்ந்து கொண்டதை கேட்டு, விளக்கி உரையாற்றினார்.
‘‘சென்னை மெட்டக்ஸ் லேப்'' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீ.கே.செல்வகுமார், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
பள்ளியின் முதல்வருக்கும், பெரியார் 1000 தேர்வினை சிறப்பாக நடத்திட உதவிய ஆசிரியர்கள் சுமித்ரா, ஷெரைன் ஆஷா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பெரியார் 1000 தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் சுமித்ரா, அனைவரையும் வரவேற்று , நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
பள்ளி முதல்வரிடம் தந்தை பெரியார் படம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பா.இராமு, த.கோ .திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment