சென்னை, அக்.2 அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 4000 பேர், நெசவாளர்களின் துயர் துடைக்க, காதி மற்றும் கைத்தறிப் பொருள்களை தோளிலே சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பனை செய்தனர். காந்தி பிறந்த நாளில் “கை கொடுப்போம் காதிக்கும் கைத்தறிக்கும்” என்ற திட்டத்தை செயலாக்க, ஒரே நாளில் ரூபாய் ஒரு கோடிக்கு மேலாக காதி மற்றும் கைத்தறித் துணிகளை விற்றனர்.
4000 மாணவ - மாணவியர் அடையார், கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் உள்ள குடியிருப்புகளில் காதி மற்றும் கைத்தறித் துணிகளை விற்றனர். இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து செயல்படுத்தினர். இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள், அமெட் பல்கலைக்கழகத்தில் காலை 6.30 மணிக்கு, விற்பனைக்குச் செல்லும் வாகனங்களுக்கு கொடியசைத்தும் மற்றும் மாணவர்களின் விற்பனையினையும் தொடங்கி வைத்தார். விழாவிற்கு அமெட் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் இப்பல்கலைக் கழக துணைவேந்தர் க.திருவாசகம் தனது வர வேற்புரையில்: ஒரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4000 மாணவர்கள் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு காதி மற்றும் கைத்தறியினை விற்று நெசவாளரின் ஒரு பகுதிக்கு உதவி செய்துள்ளனர். அதனைப் போல தமிழ்நாட்டிலுள்ள 59 பல்கலைக்கழகங்கள், 2140 கல்லூரிகள், 17 லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நெசவாளர்கள் துயர் துடைக்க விற்பனையினை மேற்கொண்டால், நெச வாளர்கள் உற்பத்தி செய்கின்ற ஆடைகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுவிடும் - மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என்றார்.
காதி மற்றும் கைத்தறித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மாணவர்களின் தன்னார்வத்தைப் பாராட்டியும் ஊக்கப்படுத்துவதற்காகவும், 30% தள்ளுபடியுடன் காதி மற்றும் கைத்தறி துணிகளுக்கு மேலும் 5% தள்ளுபடி அளிப்பதாக கூறினார்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களிடமும் அமெட் பல்கலைக் கழக மாண வர்கள் கைத்தறி துணிகளை விற்பனை செய்தனர்.
பதிவாளர் முனைவர் எம்.ஜெய பிரகாஷ்வேல் நன்றியுரை ஆற்றினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் முதன்மைச் செயலர் தர்மேந்தர் பிரதாப் யாதவ், செயலர்கள் மருத்துவர் பொ.சங்கர், இராஜேஷ், துணை மாவட்ட ஆட்சியர் சஜிவனா, கானத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளி எட்டியப்பன் மற்றும் அமெட் பல்கலைக்கழக மாணவர்நலன் துறைத்தலைவர் முனைவர் என்.ஆர். ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment