17.10.2022 அன்றைய தொடர்ச்சி....
மறுநாள் காலை விடுதியிலேயே காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு அரங்கத்திற்கு வந்து சேர்ந்தோம். நேற்று பார்த்த தோழர்களோடு சிலர் புதிதாகவும் வந்திருந்தார்கள்.மாநாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் நமது இயக்க புத்தகங்கள்,பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத்தகங்கள் எல்லாம் வரிசையாக,தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் அடுக்கி வைக்கிப்பட்டிருந்தன.வெளி நாட்டுப் பிரதிநிதிகள் எல்லாம் அந்தப் புத்தகங்களைப் பார்த்து வாங் கினர். மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் உரையாற்றிய அத்தனை உரையாளர்களுக்கும் நமது இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஆங்கிலப்புத்தகங்கள்தான் பொன்னாடை போர்த்துவதற்குப் பதிலாக கொடுக்கப் பட்டன. உரையாற்றியவர்களின் சிறப்புகள் அறிமுக மாக உரைக்கு முன் கொடுக்கப்பட்டது என்றால், புத்தகங்களை வழங்குபவர்களின் சிறப்புகளும் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினரால் குறிப்பாக மருத்துவர் சோம.இளங்கோவனால் குறிப்பிடப்பட்டது மிகச்சிறப்பாக இருந்தது.
காலையில் சமூக நீதிக்கான பன்னாட்டு மனித நேய மாநாடு தொடங்கியவுடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொருளாளர் அருள்செல்வி பாலகுரு வரவேற்புரை வழங்கினார் முந்தைய நாள் நடந்த மாநாட்டு நிகழ்வுகளை மருத்துவர் சோம.இளங் கோவன் தொகுத்து வழங்கினார். முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் தொடக்க உரையாற்ற இருக்கும் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றிய அறிமுக உரையை வழங்கினார்.
ஆசிரியர் உரை
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்க நிகழ்வு உரையாக தனது உரையை வழங்கினார்கள். மனித நேயர் தந்தை பெரியாரின் தத்துவமும் உழைப்பும் எப்படி மனித நேய அடிப்படையில் அமைந்தது என்பதையும், மனித உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களை, தியாகங்களை எல்லாம் எடுத்துரைத்து ,மனித நேயம் தத்துவமாக உலகம் எங்கும் பரவிட வேண்டும்,மனித குல இன்னல்கள் எல்லாம் மனித நேய அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து உரையாற்றினார்கள்.
(விரிவான உரை விடுதலையில் வந்துள்ளது.)
10 வயதில் பெரியார் கொள்கையை ஏற்று மேடை யில் ஏறி முழுக்கமிட்ட தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்றைக்கு 90-வயதை எட்டப்போகும் நிலையிலும் 10 வயதில் முழங்கிய கொள்கைத்ததுவமாம் மனித நேயத்தை உரக்க முழங்குகிறார். கடந்த 80 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் தத்துவத்தை புகட் டும் ஆசிரியராக மட்டுமல்ல,களப்பணியால் மனித நேயத்தை மக்களின் மனதில் எல்லாம் விதைத்திடும் மனித நேயராக உள்ளார்.பெரியார் கொள்கையை ஒரு பக்கம் மேடைகளில் முழங்கிக்கொண்டே ,இன்னொரு பக்கம் படிப்பிற்காகத் தங்கப் பதக்கம் பெற்றவர் அவர். அவர் பெற்ற விழுப்புண்கள் அதிகம் என்றாலும் விருதுகளும் அதிகம். எழுதுவதும், பேசுவதும், படிப்ப தும், பயணம் செய்து செய்து மக்களை சந்தித்து பகுத் தறிவு பணி ஆற்றுவதுமாக இயங்கிக் கொண்டே இருக் கும் தலைவர் இவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இளைய வயதில் ஆசிரியர் அவர் களைப் பார்த்து 'வளமையை விரும்பா இளமையைக் கண்டேன்'என்றார்.நம்மைப்போன்றோர் 'ஓய்வை விரும்பா முதுமை'யாக சுழன்று பயணிக்கும் ஆசிரியர் அவர்களைப் பார்த்து வியந்து நிற்கின்றோம். அப்படிப்பட்ட நம் தலைவருக்கு கனடா மனித நேயர் அமைப்பு விருது அளித்து தம்மைப் பெருமைப் படுத்திக்கொண்டது.
ஆசிரியருக்கு விருது
மாநாட்டின் அடுத்த நிகழ்வாக சமூக நீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்புகளுள் ஒன்றான கனடா மனிதநேயர் அமைப்பு திராவிட கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மனித நேயர் சாதனையாளர் விருதினை வழங்கியது தமிழர் தலை வர் அவர்களின் வாழ்நாள் மனிதநேய மற்றும் மனித உரிமைக்கான பங்களிப்பை பாராட்டும் விதமாக 2022 ஆம் ஆண்டுக்கான மனிதநேய சாதனையாளர் விருதினை வழங்கிடுவதாகக் குறிப்பிடும் பட்டயம் வழங்கப்பட்டது விருதினை கனடா மனிதநேய அமைப்பின் தலைவர் மார்ட்டின் பிரீத் வழங்கினார் விருதினை தமிழர் தலைவர் சார்பாக திராவிடர் கழகப் பொருளாளர் அண்ணன் வீ. குமரேசன் நேரில் பெற்றுக் கொண்டார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம இளங்கோவன் பொருளாளர் அருள்செல்வி பாலகுரு ஆகியோரும் உடனிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர்.உள்ளமெலாம் உவகை பொங்க மாநாட்டில் பங்கேற்ற கழகப் பொறுப் பாளர்கள் தோழர்கள் அனைவரும் இருந்தோம்.விருதினைப் பெற்றுக்கொண்ட அய்யா ஆசிரியர் அவர்கள், இந்த விருது கொள்கை உறவுகள் அனை வருக்கும் உரிய விருது என்று கூறி மிக நெகழ்ச்சியாக உரையாற்றினார்கள்.
அய்யா ஆசிரியர் அவர்களின் உரைக்குப் பின் தேநீர் இடைவேளை. நேற்றுப்போலவே இன்றும் பன்னாட்டுப் பலகாரங்கள்...தேநீர் இடைவேளைக்குப் பின் உரைவீச்சுகள் தொடர்ந்தன.
தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா எனும் அமெரிக்க - சியாட்டல் வாழ் மனிதரை முதல் நாளே நான் சந்தித் தேன்.ஆங்கிலேயர் இவர்,இவரிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று ஆங்கிலத்தில் நான் பேச ஆரம் பிக்க, அவரோ 'வணக்கம்.உங்கள் பயணம் எல்லாம் நன்றாக அமைந்ததா? ' என்று முழுமையான தமிழ் உச்சரிப்போடு என்னிடம் விசாரிக்க, எனக்கு கொஞ்சம் நாணமாகத்தான் போய்விட்டது.பின்பு அவரிடம் பேச ஆரம்பித்தால், மதுரையின் அத்தனை தெருக்களை யும்,அமெரிக்கன் கல்லூரி போன்ற பல இடங்களைப் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தார்.மதுரையில் தான் தங்கியிருந்ததையும், தமிழ் கற்றதையும், பின்னர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததையும் விளக்கமாக எடுத்துரைத்தார். பெரும் சிறப்புக்குரிய அவரின் திருக்குறளைப் பற்றிய ஆங்கில உரை, மாநாட்டின் முத்திரை பதித்த ஒரு உரை எனலாம்..அவரின் ஆங்கில உரையை இரசித்தோம்.மகிழ்ந் தோம்.
சங்ககால சமூகநீதி
அடுத்து பழமையையும் புதுமையையும் இணைத்து அரிய தரவுகளோடு உரையாற்றுவதில் வல்லவரான முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் 'சங்க கால இலக்கியங்களில் சமூகநீதி, பாலியல் நீதி இருந் ததை', பல்வேறு இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உரையாற்றினார்.மனித நேய அடிப்படையில் மகளிர், குழந்தைகளிடம் எப்படிப் பழகவேண்டும், அவர்களுக்கான மனித நேய அடிப்படையிலான உரிமைகள் பற்றி கனடா நாட்டு ஆய்வு விசாரணை அமைப்பினைச் சார்ந்த லெஸ்லி ரோசன் பிளட் உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு உடல் உழைப்பாக உழைத்த பலர் நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள். துயரமே வாழ்க்கையாக அமைந்திட்ட ஈழத்தமிழர்கள் பலர், கனடா நாட்டில் குடியேறி இருப் பதையும்,அவர்களுக்கான இன்னல்களையும்,அதற்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றியும் கருத்து ரீதியாக டொராண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன் அவர்கள் அவையில் எடுத்து வைத்தார்.
மாறிவரும் தட்பவெப்ப நிலை எப்படி மனித குலத்தை அச்சுறுத்துகிறது என்பது பற்றியும், சூழலியல் பற்றித் தான் எழுதியிருக்கும் நூலை அய்யா ஆசிரியர் அவர்களிடம் அளித்தது பற்றியும்,மாறி வரும் பருவ நிலை மாற்றங்களை எப்படி மாற்ற இயலும் என்பது பற்றியும் பெரியாரியல் பேராசிரியர் அரசு செல்லையா அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார்.
இலங்கையில் ஜாதியம்இலங்கையில் ஜாதியம் எப்படி தலைவிரித்தாடியது, இன்னும் ஜாதிய மனப்பான்மை எப்படி எல்லாம் இருக்கிறது,மனித நேயமும் சமூக நீதியும் ஏன் தேவை என்பதை இலங்கையைச்சார்ந்த சிறீகதிர் காமநாதன் இணைய வழியாக உரையாற்றினார்
தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த புகழ்காந்தி, திராவிட திறமையாளர்கள் அமைப்பைச் (DPF-Driavidian Professional Forum) சார்ந்தவர். திராவிடச் சிந்தனைகள் பற்றிய அவரின் புரிதல் உண்மையி லேயே மிகப்பெரிய மகிழ்ச்சியை என்னைப் போன் றோருக்கு கொடுத்தது. இளைஞர் ஒருவர் திராவிடச் சிந்தனைகள் பற்றியும், திராவிட இயக்க வரலாறு பாடக்குறிப்புகளில் இடம் பெற வேண்டும் என்பது பற்றியும்,மதச்சார்பின்மை என்னும் கருத்தியலுக்கு இன்றைக்கு இருக்கும் சமூக ஊடகங்கள் போன்ற வற்றின் மூலம் எப்படி ஈர்ப்பது என்பது பற்றியெல்லாம் மிக அருமையாக உரையாற்றினார்.
புகழ்காந்தி அவர்களின் உரை முடிந்தவுடன் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
பிற்பகல் நிகழ்வில் முதல் நிகழ்வாக மாணவச் செல்வங்கள் இருவரின் உரையாடல் நடைபெற்றது. நாடக வடிவில் ஒருவர் கேட்க மற்றொருவர் பதில் கூறுவதுபோல தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்வுகளை மாணவர்கள் இளங்கதிர் இளமாறனும் நிகில் முனியப்பனும் வழங்கினர். புதுமையான முயற்சியாக இருந்த இந்த நிகழ்வு நகைச்சுவையோடு அமைந்தது மிகச்சிறப்பு.
அடுத்த நிகழ்வாக திராவிடர் கழக மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
இன்றைய இளைஞர்களுக்கு ஆண்-பெண் இரு பாலருக்கும் தந்தை பெரியார் எப்படி ஓர் உத்வேகமாக இருக்கிறார் என்பதையும்,சமூக நீதிக் களத்தில் நாம் போராட தந்தை பெரியாரின் கருத்துகள் எப்படி எல்லாம் உதவியாக,உத்வேகமாக இருக்கிறது என்ப தையும் இணைத்து நகைச்சுவை கலந்து, நிதானமாகவும் அதே நேரத்தில் மிக அழுத்தமாகவும் தன் கருத்துகளை ஆங்கிலத்தில் அளித்தார்.
அந்த நேரத்தில் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், ஈழத்தமிழர் கேரி ஆனந்த சங்கிரி மாநாட்டிற்கு வருகை தந்தார்கள்.
அவர்களை மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும் மற்ற உறுப்பினர்களும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.
முதலமைச்சர் உரை
திராவிட மாடல் முதலமைச்சர்,மாண்புமிகு முதல் வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை அரங்கத்தில் இன்றும் ஒளிபரப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு எல்லாம் நன்றி சொல்லி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரை யாற்றி இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப்பின் கனடா பாராளுமன்ற உறுப் பினர் கேரி ஆனந்த சங்கரி சிறப்புரை ஆற்றினார். மனித நேயம்,சமூக நீதி ஏன் இன்றைய உலகத்தில் தேவை என்பதைக் குறிப்பிட்ட சிறப்புரையாளர், இது போன்ற மனித நேய,சமூக நீதி சார்ந்த பணிகளுக்கு வரும் காலங்களில் ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.
மாநாட்டின் கடைசி அமர்வு இரண்டு அரங்குகளில் நடைபெற்றது. ஓர் அரங்கில் கனடா ஆய்வு விசாரணை மய்யம், டொரண்டோ மனித நேய சங்கத்தினர் மாண வர் கலந்துரையாடலை நடத்தினர்.
இன்னொரு அரங்கில், எதிர்காலத்தில் மனித நேயம்,சமூக நீதிக் கருத்துகள் வளர நாம் எப்படி எல்லாம் பணியாற்ற வேண்டும் என்பதனை மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் சார்பாளர்கள் உரையாற்றினர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன், திராவிடர் கழக அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன், வழக்குரைஞர் வீரமர்த்தினி,மாநில மகளிர் அணிப் பொறுப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, புதுச்சேரி திராவிடர் கழகத்தலைவர் சிவ.வீரமணி, சக்திவேல், அருணாதேவி, கோவை காரமடை சிவக்குமார், கல்லக்குறிச்சி திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சுப்பராயன், சென்னை தங்கமணி, தனலெட்சுமி, விடுதலைநகர் ஜெயராமன், முருகேசன், பிரின்சு என்னாரெசு பெரியார் எனத் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றினர்.
மாநாடு நிறைவடைவதற்கு முன் நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்துப் பாராட்டி பின்பு நிறைவுரையினை, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆற்றினார்.
அடுத்த மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து ஆஸ் திரேலியாவில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
புதிய அனுபவம்
மாநாட்டு அரங்கத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் எல்லோரும் அங்கேயே நின்றுகொண்டிருக்க 'வாங்க, வாங்க, இங்கேயே இருக்க முடியாது ,போகலாம்' என்று சிரித்துக்கொண்டே அழைத்தார் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன். இரவு உணவாக கனடா நாட்டில் இருந்த ஒரு அசைவ உணவகத்தில் , ஒரு விருந்தினை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.அம்மா டாக்டர் சரோஜா இளங்கோவன், பேரா.அரசு செல்லையா, பேரா.இலக்குவன் தமிழ்,திருமிகு அருள்செல்வி பாலகுரு, முனைவர் கண்ணப்பன் இரவிசங்கர் எனப் பெரும் ஆளுமைகளோடு இணைந்து பேசிக் கொண்டே ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து உணவு சாப்பிட்டது ஒரு புதிய அனுபவம்.பெரிய ஆளுமைகள் எல்லாம் இயல்பாக தோழர்களுக்குப் பரிமாறியதும்,வழிகாட்டியதும் வெகு சிறப்பு.
கனடா நாட்டில் விதம் விதமாகச் சமைத்திருந்த மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் சுவைத்து மகிழ்ந்ததும் சிறப்பாக அமைந்தது.
கனடா மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பே ,கனடா செல்பவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டCanada Conference என்னும் வாட்சப் குழு, மிக உத வியாக இருந்தது. ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்ள வும், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் மிகுந்த பயனாக இருந்தது. அதைப்போல கனடா நாட்டின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டப் பொறுப்பாளர் கள், குறிப்பாக ஆசிப் நியாஜ் போன்றோர் நிகழ்ச்சி யைத் தொகுப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் பங் காற்றினர்.
மறு நாள் மதியம் டொரண்டோ விமானம் நிலையம் வந்து சேர்ந்தோம். மாலையில் விமானம் ஏறி 7 மணி நேரம் பயணம் செய்து இலண்டன் வந்து,இலண்டன் விமான நிலையத்தில் 5 மணி நேரம் செலவழித்து மீண்டும் இலண்டனில் இருந்து விமானத்தில் ஏறி 10 மணி நேரப் பயணத்தில் அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
பெரியார் திடல் கலைமணி உள்ளிட்ட தோழர்கள் வரவேற்க, வந்த அனைத்து தோழர்களுக்கும் தாம்பரம் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் முத்தையனும், மோகன்ராசுவும் பொன்னாடை அணிவித்து, மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர்.
பெரியார் திடல் வாகனத்தில் ஏறி, தோழர்கள் தாங்கள் இறங்கும் இடங்களில் இறங்கிக்கொண்டனர். 28.9.2022 காலை 11 மணி அளவில் அய்யா ஆசிரியர் அவர்களைச் சந்தித்தபோது, உற்சாகமாக பயணம் பற்றியும், மாநாடு பற்றியும் அய்யா ஆசிரியர் அவர்கள் கேட்க, நானும் அண்ணன் ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பதில் அளித்தோம்.
மனது மிக நிறைவாக, கனடாவில் நடந்த பன்னாட்டு மாநாட்டு நினைவுகளோடு மதுரை வந்து சேர்ந்தேன்.
அடுத்த மாநாட்டிற்கு இப்போதே பொருள் சேர்ப் போம். பயணிப்போம்.
No comments:
Post a Comment