சிறப்பு திருமண பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு பதிவுத் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

சிறப்பு திருமண பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு பதிவுத் துறை உத்தரவு

  சென்னை,அக்.31- 'சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர், இந்தியராக இல்லாவிட்டாலும், மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், சொத்துப் பத்திர பதிவுகள் மட்டுமின்றி, திருமண பதிவு பணிகளும், சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப் படுகின்றன. இதில், அவரவர் மத வழிமுறை களின்படி திருமணம் செய்து, அதுகுறித்த ஆதாரங்களை அளித்து, பதிவு செய்து கொள்ளலாம்.

ஜாதி, மதம் கடந்து திருமணம் செய்வோ ருக்காக, சிறப்பு திருமண பதிவு சட்டம் அமலாகி உள்ளது. இதில், மணமக்கள் வெவ்வேறு மதங்கள், சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பதிவுக்கு எந்த தடையும் ஏற்படாது.

அதேநேரத்தில், திருமண பதிவுக்கு விண்ணப்பிக்கும் மணமக்களில் ஒருவர் இந்தியராகவும், மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால், விண்ணப்பங்களை சார் பதிவாளர்கள் நிராகரிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கில், பதிவுத்துறைக்கு சில உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித் துள்ளது.

அதன் அடிப்படையில், பதிவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சிறப்பு திருமண பதிவு சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ள வருவோரில், ஒருவர் இந்தியராகவும், மற்றவர் இந்தியர் அல்லாதவராகவும் இருந்தால், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும், அதை பதிவு செய்யவும் தடையேதும் இல்லை.

விண்ணப்பதாரர்கள் சிறப்பு திருமண பதிவு சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் போதும்.

ஏற்கெனவே நடந்த திருமணத்தை பதிவு செய்யவும், சட்டப்படியான நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் போதும். உரிய காரணங்கள் இன்றி, விண்ணப்பங்களை சார் - பதிவாளர்கள் நிராகரிக்க கூடாது. நிராகரிப்பு குறித்த புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment