தமிழ்நாட்டில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் வேளாண் திட்டங்கள் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

தமிழ்நாட்டில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் வேளாண் திட்டங்கள் விளக்கம்

சென்னை,அக்.31- விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிராம சபை கூட்டத்தில் வேளாண் துறையின் திட்டங்கள் குறித்து  விரிவாக விளக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, நாளை நவம்பர் ஒன்றாம் தேதி அன்று, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் - உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment