‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற உணர்ந்ததால்தான் ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல்!
எதிரிகளை அடையாளம் காணுவோம்; தமிழ் மண்ணைக் காப்பாற்றுவோம்!
சென்னை, அக்.6 தமிழ் மண்ணான இந்தத் திராவிட மண்ணினுடைய உரிமைகளைக் காப்பாற்றுவோம். அதற்குப் பெரிய பேராயுதமாக இருப்பது பெரியார். அவருடைய ஆயுதக் கிடங்கிலிருந்து உருவானதுதான் பேராசிரியர் செகதீசன் போன்றவர்கள் தந்திருக்கின்ற கருத்துகள். அவர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய
‘‘வாழும்வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழா
நேற்று (3.10.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரி யர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள் ளுவம்'' நூலினை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நம்ம கடவுள்களுக்கே தமிழ் புரியாதாம். இன்னும் கோவில்களில் அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள் தமிழிலு‘ம்' அர்ச்சனை செய்யப்படும் என்று.
இது தமிழ்நாடுதானே?
இசைக் கச்சேரிக்குச் சென்றால், தமிழிலு‘ம்‘ பாடப்படும் என்று சொல்வார்கள்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால்,
இந்த உணர்வுகள் தோன்றியிருக்காவிட்டால்...
இவற்றையெல்லாம் மாற்றியது எந்த இயக்கம்?
திராவிடர் இயக்கம் -. பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த உணர்வுகள் தோன்றியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் நண்பர்களே நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் அண்ணா தொடருகிறார்:
‘‘இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத் துக்களும் வைசிய, சூத்திர, இனமாக அமைக்கப்பட் டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’, ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?
திராவிட ஆட்சி வந்துதான்!
ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான். ஆரியர், ‘‘சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?'' என்கிறார் அண்ணா!
திராவிட ஆட்சி வந்துதான் இந்தத் தடையை நீக்கிய சூழ்நிலை ஏற்பட்டது.
அண்ணா தி.மு.க. என்று கட்சிக்குப் பெயர் வைத்திருக்கும் கட்சிக்காரர்களும் இராசாமீது குற்றம் சொல்கிறார்கள்.
இராசா என்ன சொன்னார் - மனுதர்மத்தில் சொல்லி யிருக்கின்ற அளவிற்கு நம்முடைய நிலைமைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதைத்தானே அவர் சொன்னார், நண்பர்களே புரிந்துகொள்ளுங்கள்.
இந்த அணி இல்லாவிட்டால், தமிழர்களுக்கு மானத்தை நினைவூட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டா?
யார்மீதும் எங்களுக்குக் கோபமில்லை -
யார்மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை-
யாரையும் நாங்கள் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசவில்லை.
எங்களுடைய மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா?
கோடான கோடி மக்களுடைய நிலை என்ன?
அண்ணா மேலும் தொடர்கிறார்:
‘‘பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக் கற்றது. ஆனால் இலக்கணத்தில் விதியாகப் புகுந் துள்ளது.''
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற உணர்ந்ததால்தான் இந்த நூல்!
இன்றைக்கு நம்மில் பலரும் வெண்பா பாடுகிறார்கள். எப்படி இது நடந்தது? இன்றைக்கு இந்த இயக்கம் இருப்பதினால்தான்.
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி.”
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற உணர்ந் தார்கள், ஆகவே இந்த நூல்.
இங்கே அழகான ஓர் உரை; அற்புதமான ஓர் உரை - தத்துவ ரீதியான உரை - பெரியார் திடலுக்கு வந்து பேசினால், அந்த ஆய்வுரை தானாகவே வருகிறது - மிகப்பெரிய அளவிற்கு.
ஏனென்றால், எழுச்சித் தமிழர் அவர்கள் படித்த, படிக்கும் பள்ளிக்கூடம் இது.
ஆக, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிக அழகாக ஒரு கருத்தைச் சொன்னார். பெரியாரே அப்படி இருந்து வந்தவர்தானே! தத்துவ ரீதியாக எப்படி வந்தார் என்று கேட்டார்.
ஆமாம்!
எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பது எப்படித் தவறாகும்?
நீதி வேண்டும் என்று கேட்கிறவர்கள், எப்பொழுது நீதி கேட்கிறார்கள்? அநீதி நடைபெறும்பொழுதுதான். அநீதியிலிருந்து வெளியில் வரவேண்டுமானால், நீதி வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பது எப்படித் தவறாகும்?
எனவே, சமூக அநீதியை அவர் வீட்டிற்குள்ளே பார்த்தார், வெளியில் பார்த்தார். அவர் புத்தகத்தில் படிக்கவில்லை; கல்லூரிக்குச் செல்லவில்லை நல்ல வாய்ப்பாக. அப்படி போயிருந்தால், பெரியார் நமக்குக் கிடைத்திருக்க மாட்3டார்.
அடங்க மறு என்று சிந்தித்ததினால்தான்...
கல்லூரிக்குப் போயிருந்தால், சட்டம் என்ன சொல்லும்? விதி என்ன சொல்லும்? என்று நினைத்திருப்பார்.
அடங்க மறு - அதைத்தான் பெரியார் கொண் டார்.
அடங்க மறு என்று சிந்தித்ததினால்தான் பெரியார் பிறந்தார். பெரியார் கிடைத்தார்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எழுச்சித் தமிழர் இங்கே பேசும்பொழுது, நான் குறுக்கிட்டுச் சொன்னேன்; நீங்கள் எல்லாம் வேடிக்கைக்காக என்று நினைத்திருப்பீர்கள்.
சமஸ்கிருதத்தில் ‘அவதார்' என்கிற வார்த் தைக்கு என்ன பொருள் என்றால், ‘கீழே இறங்குதல்' என்பதுதான்.
மேலே இருந்து கீழே வருவது - அவர்கள் தேவர்கள்.
பூ தேவர்கள் என்றால், பூமியில் இருக்கின்ற தேவர்கள்.
அவர்கள் நினைத்தார்கள் என்றால், எதை வேண்டுமானாலும் மாற்றிவிடுவார்கள்.
நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
அவர்கள் அம்பேத்கரை புகழுகிறார்கள் பாருங்கள், நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்பொழுது அம்பேத்கரைப் பரப்பவேண்டிய அவசியமில்லை - ஏற்கெனவே நிறைய பரப்பிவிட்டார்கள். அவரைப் பாதுகாக்கவேண்டும் இப்பொழுது.
இன்றைக்கு அவர்கள் எப்படிப்பட்ட இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், ஓர் உதாரணம் சொல்கிறேன்.
காந்தி பிறந்த நாளில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தவேண்டும் என்று சொல்லும் பிரச்சினையைப்பற்றி இங்கே எழுச்சித் தமிழர் சொன்னார்.
ஒவ்வொரு ஆண்டும் பார்ப்பன ஏடு ஒன்று, ‘தீபாவளி' மலரை வெளியிடும். அந்தப் பத்திரிகையின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.
காந்தியாரை சுட்டுக் கொன்றவன் சித்பவன் பிரிவைச் சேர்ந்த மராத்திய பார்ப்பனர்!
அதில், 1948 ஆம் ஆண்டு காந்தியாரை கோட்சே சுட்டுக் கொன்ற பிறகு, சுட்டுக்கொன்றவன் முஸ்லிம் என்ற ஒரு வதந்தியை முதலில் பரப்பினார்கள்; பிறகு அது உண்மை இல்லை என்று தெரிந்து, காந்தியாரை சுட்டுக் கொன்றவன் சித்பவன் பிரிவைச் சேர்ந்த மராத் திய பார்ப்பனர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல்கள் எல்லாம் வெளியில் வந்த பிறகு, தமிழ்நாட்டில் யாருக்கும் எந்தத் தொல்லை யும் ஏற்படக் கூடாது என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் திருச்சி வானொலியில் உரையாற்றினார் என்ற தகவல்களையெல்லாம் இன்றைய ‘விடுதலை' அறிக்கையில் எழுதியிருப்பதை சகோதரியார் இங்கே அழகாக விளக்கிச் சொன்னார்கள்.
பார்ப்பன ஆங்கிலப் பேராசிரியர் கே.சாமிநாதன்
அப்படிப்பட்ட நிலையில், ஒரு கற்பனை நாடகம் போன்று ஒருவர் எழுதினார். அவர் ஒரு பெரிய ஆங்கிலப் பேராசிரியர். பார்ப்பனப் பேராசிரியர் பெயர் கே.சாமிநாதன்.
அவர் தமிழில் நாடகம் எழுதுகிறார்.
மகாவிஷ்ணு தர்பார் நடக்கிறது. மகாவிஷ்ணுவிடம், நாரதர் போகிறார்.
‘‘என்ன நாரதரே, பூலோகத்தில் என்ன செய்தி?'' என்று மகாவிஷ்ணு கேட்கிறார்.
‘‘காந்தி என்று ஒருவர் இருக்கிறார்; மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார். அவரால் தாங்க முடியாத அளவிற்கு பாரம் இருக்கிறது. அவர் அங்கே கஷ்டப் படுகிறார்'' என்று சொல்லுகிறார் நாரதர்.
‘‘அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?'' என்று மகாவிஷ்ணு கேட்கிறார்.
‘‘உடனே அவரை கூட்டிக்கொண்டு வந்து, மேல் உலகத்தில் வைத்துவிடவேண்டும்'' என்று நாரதர் சொல்கிறார்.
இப்பொழுது கோட்சே அவதாரம் எடுக்கிறேன்!
‘‘சரி, நான் ஏற்கெனவே 10 அவதாரம் எடுத்திருக் கிறேன்; இப்பொழுது கோட்சே அவதாரம் எடுக்கிறேன்'' என்று சொல்கிறார், மகாவிஷ்ணு.
ஆக, மகாவிஷ்ணு கோட்சே அவதாரம் எடுத்து, காந்தியாரை சுட்டுக் கொன்று மேலே கொண்டு வந்துவிட்டார் என்று அந்த நாடகம் முடிகிறது.
எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டோம்!
இது பிரபலமான பத்திரிகையில் 1949 இல் வெளிவந்த நாடகம்.
இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதற்கு ஆதாரத்தைக் காட்டுவதற்கு நாங்கள் தயார். நாங்கள் எதைச் சொல்லும்பொழுதும், ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டோம்.
நாமெல்லாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.
கடவுள் பெரியார் அவதாரம் எடுத்துத்தான் வந்து எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்று சொன்னாலும் அவர்கள் சொல்வார்கள். ஆனால், அவர்கள் இன்றைக்கு அப்படி சொன்னால், அதை நம்புவதற்கு நம்முடைய இளைஞர்கள் யாரும் தயாராக இல்லை.
அப்படிப்பட்ட சூழல் இன்றைக்கு மிகத் தெளிவாக வந்த காரணத்தினால்தான், இன்றைக்கு ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்று சொல்லக்கூடிய இந்த நூலில், அய்யா பேராசிரியர் செகதீசனார் அவர்கள், வெறும் வள்ளுவத்தை மட்டும் சொல்லவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் தம் பொதுவாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பலவற்றைப்பற்றிச் சொன்னார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் இலக்கியத்தில் எவ்வளவோ ஆய்வு செய்தவர்.அவர் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘நான் 1330 குறளை நன்றாகவும், தெளிவாகவும் படித்திருக்கிறேன். ஆனால், எனக்கு இதுவரை தெரியாத ஒரு குறளை, நான் என்னுடைய கவனத்தில் வைத்துக் கொள்ளாத ஒரு குறளை, தந்தை பெரியார் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார்'' என்றார்.
என்ன அந்த குறள் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
பிறகுதான் சொன்னார்,
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
விமர்சனங்கள்பற்றி தந்தை பெரியார் கவலைப்பட்டது இல்லை!
பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் மானம், ஈனம் பார்க்கக் கூடாது; தனி வாழ்க்கையில் பார்க்கலாம், தன்மானம். ஆனால், பொதுவாழ்க் கையில் பார்க்கக் கூடாது. அதனால், விமர்சனங்கள் நிறைய வரலாம். அதைப்பற்றி தந்தை பெரியார் கவலைப்பட்டது இல்லை. அதைத்தான் நான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், அருமையாக, நம்முடைய தன்மானப் பெரும்புலவர் அய்யா போன்ற வர்கள், இல்லையென்றால், பழைய இலக்கணத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள்.
வெண்பாவை யார் பாடுவது?
அனைத்தையும் ஜாதி அடிப்படையில் நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்து விடுவார்கள்.
ஆகவே, பேராசிரியர் அய்யா செகதீசனார் அவர்கள் நிறைய எழுதவேண்டும்.
சங்க இலக்கியத்தைப் பார்த்தீர்களேயானால், பழைய நூல்களுக்கு, புதிய உரைகளை எழுதுவதைவிட, அதில் எப்படியெல்லாம் பண்பாட்டுப் படையெடுப்பு வந்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
சங்க இலக்கியத்தை எடுத்துக்கொண்டால், எல்லா வற்றிலும் உள்ளே நுழைந்துவிட்டார்கள். அதிலேயும், முற்பகுதி, பிற்பகுதி என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
‘‘யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!''
என்ற குறுந்தொகைப் பாடலை எல்லோரும் சொல்கிறார்கள்.
ஜாதி என்பது இந்த நாட்டில் சனாதனம்!
ஆனால், இன்றைக்கு ஜாதி வந்ததினால் என்னாயிற்று?
ஆண்டவர் இங்கே உரையாற்றும்பொழுது சொன் னாரே, இப்பொழுதுதான் எங்களுடைய குடும்பத்தில், வேறு ஜாதியிலிருந்து திருமணம் செய்திருக்கிறோம் என்று.
அதுதான் குறுந்தொகை.
‘‘யாயும் ஞாயும் யாரா கியரோ!''
ஆனால், இதைக் கற்றுக்கொடுக்கின்ற புலவரே கூட, அவருடைய மகள் வேறொரு ஜாதிப் பையனை விரும்பிவிட்டால், உடனே கவுரவக் கொலைக்கு ஆள் தேட முடியுமா? என்று பார்க்கிறார்.
காரணம் என்ன?
ஜாதி என்பது இந்த நாட்டில் சனாதனம். அந்த சனா தனத்தை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு சமூகத்திற்கு மாறானவற்றை செய்யும்பொழுது, சரியான படி தங்களைப் போன்றவர்கள், பேராசிரியர்கள் இந்தக் கருத்துகளை வேகமாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் எடுத்துக் கொடுத்தால், அதை எங்களைப் போன்றவர்கள் வேகமாக நாடு முழுவதும் பரப்புவோம்.
திருக்குறள்பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வால்கர்
எல்லோருக்கும் தெரியும் திருக்குறள் ஒரு பொது நூல். இந்த மதத்திற்குச் சேர்ந்தது, இந்த இடத்தைச் சேர்ந்தவர்; இந்தக் கடவுளை சொல்கிறவர் என்றில்லாமல், உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் நூலைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வால்கர் சொல்கிறார் - அவர் எழுதிய நூல் ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' - தமிழில் ‘‘ஞானகங்கை'' என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
அதில்,
‘‘திருக்குறள் என்பது இந்து மதத்தைப் பரப்புகிற - சனாதனத்தைப் பரப்புகிற நூல்'' என்று.
அவர் எழுதினார், அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்.
இளைஞர் உலகம் தெளிவாகவும்,
விழிப்பாகவும் இருக்கிறது
ஆனால், நம்முடைய வரிப் பணத்தை சம்பளமாகப் பெறுகின்ற ஆளுநருடைய வேலை என்ன? ஆனால், அந்த வேலையை செய்யாமல், சனாதனத்தைப்பற்றிப் பேசுகிறார்.
அதுகுறித்துப் பேசுவதற்கு இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு இராசாக்களும், திருமாவளவன்களும் இருக்கின்ற காரணத்தினால்தான், உள்ளே அவ்வளவு சுலபமாக நுழைக்க முடியாத அளவிற்கு இளைஞர் உலகம் தெளிவாகவும், விழிப்பாகவும் இருக்கிறது.
வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியது யார்?
நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
வள்ளுவருக்கு 133 அடி சிலையை வைத்தவர் யார்?
நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
குறள் மாநாடு போட்டது யார்?
தந்தை பெரியார் அவர்கள்.
இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
‘‘குறள் ஆராய்ச்சிக் கட்டுரை’’
ஒரே ஒரு செய்தி சொல்லுகிறேன் கேளுங்கள். பெரியார் களஞ்சியத்தில் பெரியார் ஒரு கேள்வி கேட் கிறார், ‘‘குறள் ஆராய்ச்சிக் கட்டுரை'' என்ற தலைப்பில்.
அந்த சிந்தனைதான், வாழும் வரைக்கும் வள்ளுவம் - அதனுடைய பிரதிபலிப்பு.
பெரியார் கேட்கிறார்,
‘‘குறளில் முதலாவது அதிகாரத்திற்கு ‘‘கடவுள் வாழ்த்து'' என்று பெயர் தலைப்புக் கொடுத்திருப்பது குறள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு யாராலாவது கொடுக்கப்பட்டதா?'' என்பது ஒருபுறம் இருந்தாலும்,
நம்முடைய வ.உ.சிதம்பரம் அவர்கள், மற்ற உரையை எடுக்காமல், மணக்குடவர் உரையை எடுத்துக்கொண்டு, தெளிவாகச் சொல்கிறார், இந்த நான்கு அதிகாரமும் திருவள்ளுவரால் எழுதப்பட்டது அல்ல.
இது வ.உ.சி. கருத்து.
தந்தை பெரியார் இராமாயணத்தைப் படித்த அளவிற்கு எந்த
ராம பக்தனும் படித்தது கிடையாது!
பெரியாருக்கு இலக்கியம் தெரியாது என்று நிறைய பேர் நினைப்பார்கள். பெரியார் படித்த அளவிற்கு இலக்கியங்களை வேறு யாரும் படிக்கவில்லை. இன்னுங்கேட்டால், அவர் படித்த அளவிற்கு இராமாயணத்தை, எந்த ராம பக்தனும் படித்தது கிடையாது. அத்தனை பதிப்புகளையும் படித்துள்ளார். ஏனென்றால், ஆய்வுகள் செய்யும் பொழுது, அவர் ஆதாரப்பூர்வமாக செய்யக் கூடியவர்.
‘‘குறளில் முதலாவது அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் தலைப்புக் கொடுத்திருப்பது குறள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு யாராலாவது கொடுக்கப்பட்டதா? என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த அதிகாரத்திற்கு அப்பெயர் பொருத்தமற்றதாகும் என்பது என் கருத்தாகும்.
ஆசிரியர் குறளில் 1330 பாடல்களிலும் ஒரு இடத் திலும் கடவுள் என்கிற பெயரைக் கையாளவேயில்லை'' என்கிறார் தந்தை பெரியார்.
ஆன்மிகம் என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது?
‘‘ஆன்மிகம், ஆன்மிகம்'' என்று சொல்கிறார்களே, ஆன்மிகம் என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது? ஆத் மார்த்தம். அதைத் தமிழ்ப் படுத்தி, ஆன்மா என்றார்கள். ஆன்மாவிலிருந்து ஆன்மிகம் என்று வந்தது.
ஜாதி என்ற சொல் எப்படி இல்லையோ,
கடவுள் என்ற சொல் எப்படி இல்லையோ அது போன்று ஆத்மா என்ற சொல்லும் இல்லை.
மேலும் பெரியார் தொடருகிறார்.
அவ்வதிகாரத்தில் கண்டுள்ள 10 பாடல்களிலும் ஓரிடத்தில்கூட கடவுள் என்ற சொல் காணப்படவில்லை.
1. பகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இலானடி
6. பொறிவாயில் அய்ந்தவித்தான்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்
இந்தப் பத்து சொற்களுக்கும் விளக்கம் எழுதி யிருக்கிறார்.
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஆய்வாளர் தொ.பரமசிவம் எழுதுகிறார்.
கோவில் என்றால், கோ +இல் - கோவில்.
கோ என்றால் அரசன்
இல் என்றால் அரசன் இருக்கிற இடம் - அரண்மனை
இறை என்றால் வரி வசூல் செய்பவர்.
இப்படி பலவற்றை தூக்கி சாப்பிட்டுவிட்டு, மனு என்ன சொல்லுகிறதோ, அந்தக் கருத்தை ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு, ஆளுநர் என்பவர் சனாதனம்பற்றி பேசுகிறார்.
மதச்சார்பற்ற அரசு என்பது அரசமைப்புச் சட்டத்தில் எடுக்கப்பட்ட உறுதி.
இலக்கியத்தில் ஒரு சிறந்த இலக்கியமாக தந்திருக்கிறார் பேராசிரியர் செகதீசனார்!
ஆகவேதான் நண்பர்களே, பேராசிரியர் அய்யா செகதீசனார் போன்றவர்கள், ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' புத்தகத்தில் குறளைப்பற்றித்தான் எழுதி யிருப்பார் என்று நான்கூட நினைத்தேன். ஆனால், இந்தப் புத்தகத்தில் இன்றைக்கு இருக்கிற ‘திராவிட மாடல்' ஆட்சி - எடுத்துக்காட்டான ஆட்சியின் சாத னைகள் உள்பட அத்தனையும் எடுத்துக்காட்டி, ஒரு விடியல் ஆட்சி என்ன செய்திருக்கிறது என்பதை, தன்னுடைய 88 ஆவது வயதிலே மிக அருமையாக எழுதி, இன்றைக்கு இலக்கியத்தில் ஒரு சிறந்த இலக்கியமாக தந்திருக்கிறார்.
நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி!
இலக்கியம் என்பதற்கு என்ன அடையாளம் என்றால், எது சிறந்த நூலோ அது.
‘‘நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி'' ( நூலைப் )
என்றார் புரட்சிக்கவிஞர்.
‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூலை எழுதி யிருக்கின்ற பேராசிரியர் அவர்களுக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தகத்தை பல பேர் படிக்கவேண்டும்.
காவிகளுக்கு இங்கே இடமில்லை!
இந்த ஆபத்து நீங்கவேண்டுமானால், மனித சங்கிலி யில் நாம் அத்துணை பேரும் ஒன்று சேரவேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோளாக விடுத்தார்.
மனித சங்கிலி என்றால், தெருவில் நிற்பது மட்டுமல்ல - சனாதனத்தை எதிர்க்க -
ஆரியத்தை வீழ்த்த-
காவிகளுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு நீங்கள் ஒன்று சேரவேண்டும்.
கருப்பு வண்ணத்திற்கு ஒரு தனி சக்தி உண்டு -
எந்த வண்ணம் மேலே விழுந்தாலும், கடைசியில் கருப்புதான் இருக்குமே தவிர, அந்த வண்ணம் கருப்பிற்கு மேல் வராது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டை வளைக்க முடியாது -
வளைக்க விடமாட்டோம்!
அவர்கள் என்ன முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டை வளைக்க முடியாது - வளைக்க விடமாட்டோம்.
அதற்கான சங்கிலி இருக்கிறதே, அந்த சங்கிலி கட்டப் பட்டு விட்டது. சகோதரர் சொன்னதையும் நினை வூட்டுகிறேன் - மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சிறப்புக் கூட்டணி என்று சொன்னார்கள். மற்ற மாநிலங் களில் சேர்வது அரசியல் கூட்டணி - அது உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது, பதவியை எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இருப்பது கொள்கைக் கூட்டணி - லட்சியக் கூட்டணி!
ஆனால், இங்கே சேர்ந்திருப்பது அரசியல் கூட்டணி அல்ல - அரசியல் இருக்கலாம் - அதற்கு மேலே வலுவானது - கொள்கைக் கூட்டணி - லட்சியக் கூட்டணியாக இருக்கிற காரணத்தினால் தான், யாருக்கு எவ்வளவு இடம் என்பதைவிட, யார் எந்த இடத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதற்கான லட்சியக் கூட்டணி என்பதை மிகத் தெளிவாக உணரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
எதிரிகளை அடையாளம் காணுவோம்;
தமிழ் மண்ணைக் காப்பாற்றுவோம்!
எனவே, அய்யாவினுடைய நூல் வெளியீட்டு விழாவில் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் சொன்னதை நான் மீண்டும் வழிமொழிந்து,
ஒன்று சேருவோம் -
எதிரிகளை அடையாளம் காணுவோம் -
தமிழ் மண்ணைக் காப்பாற்றுவோம் -
பெரியார் மண் -
இது அம்பேத்கர் மண் -
இது சமூகநீதி மண் -
திராவிட மண் -
திராவிட மண்ணினுடைய உரிமைகளைக் காப்பாற்றுவோம்; அதற்குப் பெரிய பேராயுதமாக இருப்பது தந்தை பெரியார்!
இந்தத் திராவிட மண்ணினுடைய உரிமைகளைக் காப்பாற்றுவோம். அதற்குப் பெரிய பேராயுதமாக இருப்பது பெரியார். அவருடைய ஆயுதக் கிடங்கிலிருந்து உருவானதுதான் பேராசிரியர் செகதீசன் போன்றவர்கள் தந்திருக்கின்ற கருத்துகள். அவர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க ஜெகதீசனார்!
வளர்க அவருடைய முயற்சி!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment