" சமூக அநீதி....! " - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

" சமூக அநீதி....! "

பிறப்பின் அடிப்படையில் மேலோர் கீழோர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்று மனித இனத்தை பல்வேறு ஜாதிகளாகக் கூறுபோட்டு மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணால் பார்க்கக் கூடாது, தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று பார்ப்பனர்களால் வரையறுக்கப்பட்டுள்ள ஹிந்து மதம் எந்த அளவிற்கு வன்மம் நிறைந்ததாக, விபரீத எண்ணம் கொண்டதாக உள்ளது என்பதற்கு அண்மையில் விடுதலை நாளேட்டில் (29.09.2022)

வெளிவந்த ' துவாரகா பீடத்தைப் பாரீர் ' எனும் தலையங்கம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரி சுவரூபானந்த சரஸ்வதி மரணமடைந்ததையொட்டி அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவிமுத்தேஷ்வானந்த் என்பவர் பீடத் தின் சங்கராச்சாரியாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

அவிமுத்தேஷ்வானந்த் அவர்களுக்கு அறிவு - ஆற்றல், தகுதி - திறமை ஆகியவை மெச்சத் தகுந்த வகையில் இருந்தாலும், அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் அவரை சங்க ராச்சாரியாக ஏற்கமாட்டோம் என்று இந்தியாவில் உள்ள அனைத்து சாமியார்களின் கூட்டமைப்பு  வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ' அகில பாரதீய அகாடா பரிஷத் ' என்ற சாமியார்களின் கூட்டமைப்பின் தலைவர் மகந்த் ரவீந்திர பூரி கூறும்போது, சங்கராச்சாரி யார்களுக்கு என்றே குறிப்பிட்ட ஆச்சார அனுஷ்டானங்கள் உண்டு, இது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்று தெரிவித்திருப்பது அப்பட்டமான ஜாதி வெறியாகும்.

மேலும், ஒருவரை ஒரு பதவி தேடி வருகிறது என்றால் அதனை ஓடிப்போய் வாங்குவதற்கு முன்பு அதற்கு தான் தகுதியாக இருக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும். இது ஒன்றும் படித்து வாங்கும் பட்டமோ அல்லது பதவியோ கிடையாது. ரிஷி முனிவர்களால் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி இருக்க, தான் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்தும் அவிமுத்தேஷ்வானந்த் அவர்கள் சங்கராச்சாரி பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் திறமையானவர் என்பதில் எங்களுக்கு எவ்வித அய்யமும் இல்லை. இருப் பினும் அந்தப் பதவிக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று கூறியிருப்பது ஜாதி ஆணவத்தின் உச்சம்!

நாம் அனைவரும் இந்துக்கள், இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று கூக்குரல் இடும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி. யில் உள்ள பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் இனி என்ன செய்வதாக உத்தேசம். பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவி முத்தேஷ் வானந்த் அவர்களும் ஓர் இந்துதானே? பிறகு ஏன் அவரை சங்கராச்சாரியாக ஏற்றுக் கொள்ள பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள் என்பதை பார்பனர் அல்லாத மக்கள் சற்று நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒருபுறம் இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் பார்ப் பனர்கள், மறுபுறம் அவிமுத்தேஷ்வானந்த் அவர்களுக்கு அறிவு - ஆற்றல், தகுதி - திறமை மற்றும் ஆழ்ந்த அனுபவம் ஆகியவை நிரம்ப இருப்பதாக பார்ப்பனர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகும்கூட, அவரை துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சண்டித்தனம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் உதிரத்தில் உறைந்து விட்ட ஜாதி வெறியின் - ஜாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன?

தந்தை பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று போற்றிப் புகழப்பட்ட காமராஜர் அவர்கள் தகுதி - திறமை என்பது ஒரு மோசடிச் சொல் எனக் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை என்பதை இத்தருணத்தில் பார்ப்பனர் அல்லாத ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேடு (29.09.2022) வெளியிட்டி ருக்கும் தலையங்கத்தை படித்த பிறகாவது பார்ப்பனர் அல்லாத ஹிந்துக்கள் இத்தகைய சமூக அநீதியைக் கண்டிக்க முன்வரவேண்டாமா? இது போன்ற அடாவடித்தனமான செயலை இனி மேலும் நீட்டிக்க விடலாமா? சமூக நீதியில் அக்கறை கொண்ட முற்போக்குச் சிந்தனையா ளர்கள் இனியும் வாய் மூடி மவுனமான இருக்கலாமா?

துவாரகா பீடத்தில் அப்பட்டமாக அரங்கேற்றப் பட்டுள்ள சமூக அநீதி பார்ப்பனர் அல்லாத இந்துக்களுக்கு நேர்ந்த அவமதிப்பு அல்லவா? இவைபோன்ற அவமானம் - அவமதிப்பு - புறக் கணிப்பு  இனியும் தொடர்வது சரியா? முறையா? பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம் -வழக்கம் - அய்தீகம் - ஆச்சாரம் என்று கூறிக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றிக் கொண்டிருப் பார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டாமா? இதற்கு ஓர் தீர்வு எட்டப்பட வேண்டாமா? என்பதே சமூகநீதிச் சிந்தனையாளர்களின் வினாவாகும்.

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்க புலி என செயல் செய்யப் புறப்படு வெளியில்! எனும் புரட்சிக் கவிஞர் பாரதி தாதனின் புரட்சி வரிகளை நெஞ்சில் நிலைநிறுத்தி, துவாரகா பீடத்தில் நிகழ்ந்த சமூக அநீதி, அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவை இனிமேல் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்திட  சமூக நீதியில் அக்கறை கொண்ட சமூக நீதிச் சிந்தனையாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக் காளர்கள், பெரியார் பற்றாளர்கள் மற்றும் இளை ஞர்கள் - மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோர் அணி திரண்டு பார்ப்பனர் அல்லாத மக்களிடையே இதுகுறித்து போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்த ஆயத்தமாகி வரு கின்றனர்.

அவர்களுக்கு நாம் தோள் கொடுப்போம், துணை நிற்போம். நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்போம். 

மானுட நலனைப் பற்றியே நாளும் சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டும் இருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து அனைத்துத் தளங்களிலும் ' சமூக நீதியை ' வென்றெடுப்போம்.

வெல்லட்டும் சமூகநீதி!

வீழட்டும் ஆரியம்!

- சீ. இலட்சுமிபதி,

தாம்பரம்.

No comments:

Post a Comment