அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா?
பி.ஜே.பி.யை மிஞ்சும் தேர்தல் உத்தியா?
அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்)-க்கு எதிரானது அல்லவா?
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க - செல்வத்தைக் கொழிக்கச் செய்யும் இலட்சுமியின் படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சடிக்கவேண்டும் என்று அய்.அய்.டி.யில் படித்தவரும், ‘ஆம் ஆத்மி' கட்சியின் நிறுவனர் தலைவருமான டில்லி முதலமைச்சர் கூறியுள்ளார். பி.ஜே.பி. முன்னெடுக்கும் மதவாதத்தைக் கையில் எடுத்து அரசியல் ஆதாயம் தேடும் யுக்தியே இது - அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரானது - கெஜ்ரிவாலின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘நம் நாட்டில் பொருளாதார நிலையை மேம்படுத்த இலட்சுமி, விநாயகர் படங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சிடவேண்டும். நம் நாட்டின் பொருளா தார நிலைமை மோசமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இதை மேம்படுத்த நான் பல்வேறு யோசனைகளை ஏற் கெனவே கூறியுள்ளேன்.
கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் உள்ளது. இதைத் தவிர செல்வக் கொழிப்பை வழங்கும் இலட்சுமி, தடைகளை நீக்கும் விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெறவேண்டும்.
நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்வதற்கு, கடவுளின் ஆசி கிடைப்பதற்கு, இந்த முயற்சியை உடனடியாக ஒன்றிய அரசு மேற் கொள்ளவேண்டும்.''
‘உலக மஹா அறிவாளி'
- இப்படி நிதி நெருக்கடி நீங்கிட, நிதிப் பெருக்கத்திற்கு அரிய பெரிய யோசனை - ‘கருத்துத் தானம்' செய்த ‘உலக மஹா அறிவாளி' யார் தெரியுமா?
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தலைவரும், டில்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் என்ற மேதை!
ரூபாய் நோட்டுகளில் கடவுளச்சி, கடவுளர் படம் போட்டால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடுமாம்!
கடவுளின் ஆசி அப்போதுதான் கிட்டுமாம். நம்ம கடவுள்கள் இப்படி ‘‘லஞ்சம்'' வாங்கினால்தான், வளர்ச் சியைத் தருவார்கள் என்றால், அதைவிட அவர்களைக் கொச்சைப்படுத்துவது வேறு எதுவும் இல்லை! மகா வெட்கக்கேடு அல்லவா?
கரோனா தொற்றின்போது
கோவில்களை மூடினார்களே!
இந்தப் ‘பொருளாதார மேதை' அய்.அய்.டி.யில் படித்தவராம்! மேனாள் வருமான வரித் துறை அதிகாரியாக இருந்தவராம்!
நம் நாட்டில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, கம்ப்யூட்டரில்கூட விநாயகர் உருவ உத்தி உண்டே, விக்னத்தை பின், ஏன் போக்கவில்லை?
கோவிட் 19 (கரோனா) வந்தபோது அவரது கோவி லையும் சேர்த்துத்தானே மூடினார்கள்?
விஞ்ஞானக் கண்டுபிடிப்பான தடுப்பூசியும், மற்றவைகளும்தானே மக்களைக் காப்பாற்றியது. அப்போது இவர் ‘‘சிபாரிசு'' செய்யும் கடவுளர்கள் எங்கே இருந்தார்கள்? இவர் ஏன் தடுப்பூசிக்குப் போனார்?
அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை - தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பது அல்லவா?
விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்புவது ஒவ் வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ற அரசமைப்புச் சட்ட உறுதிமொழி 51-ஏ(எச்) எடுத்துப் பதவியேற்றவரின் இந்தப் போக்கு அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை - தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பது அல்லவா?
‘‘லட்சுமி விலாஸ் பேங்க்'' ஏன் காலாவதி ஆயிற்று? இலட்சுமி பேரில் உள்ள வங்கியின் கதை இப்படி முடிந்தது என்பதை டில்லி ஆம் ஆத்மி முதலமைச்சர் அறியாதவரா? பின் ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அதுவும் தேர்தல் வித்தைதான்!
ஹிந்துத்துவா வாக்கு வங்கியை வசீகரித்து இழுப்ப தற்கு பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸைவிட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாக வைத்து இப்படி ஒரு ‘துருப்புச் சீட்டை' இறக்கி இருக்கிறார் போலும்!
‘‘இந்த வித்தைக்கு நாங்களே முழு பாத்தியதை உடையவர்கள்; எங்களுடைய தேர்தல் மூலத்தை இவர் அபகரிக்கப் பார்க்கிறார்'' என்ற முணுமுணுப்பு, சலசலப்பு இப்போது காவி வட்டாரத்திலேயே உள்ளது!
பக்தி வேஷம் - தேர்தல் வெற்றிக்கான
உத்தியோ உத்தி!
முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார்; இளைஞர்களை ஈர்க்க புதுப் புது உத்தி - இப்போது எங்கே எந்த சரக்கு அதிகமாக விலை போகி றதோ, அங்கே அதை விற்று லாபம் தேட நினைப்பது போல, ‘‘காத்திருந்தவன் புதையலை நேற்று வந்தவன் பறித்துக்கொண்டு போன'' கதை போல, இது அவரது பக்தி வேஷம் - தேர்தல் வெற்றிக்கான உத்தியோ உத்தி!
நம்ம ரூபாயை
இப்படி ஏன் திண்டாட விடுகிறாள் இலட்சுமி?
நம்ம ‘‘இலட்சுமி என்ற செல்வக் கடவுள்'' ஏன் அமெரிக்காவில் குடியேறிவிட்டு, நம்ம ரூபாயை இப்படி திண்டாட விடுகிறாள்?
துபாய் முதல் பெட்ரோலிய நாடுகளில் இப்படி இலட்சுமி ஏன் புலம் பெயர்ந்து போய்விட்டார் என்ற கேள்வி கேட்கப்பட்டால், இந்த ‘பிரகஸ்பதிகள்' என்ன பதில் கூறுவார்கள்?
அறிவியல் மனப்பாங்குக்குத் தடையா?
இப்படிப்பட்டவர்கள் எதில் போட்டியிடுகிறார்கள் பாருங்கள், இளைஞர்களே, புரிந்துகொள்ளுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.10.2022
No comments:
Post a Comment