ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்கிற அந்த மதவெறிக் கூட்டம்தான் இந்தியாவைப் பிரிக்கத் துடிக்கிறது!
திருவாரூர், அக்.2 இந்தியாவைப் பிரிப்பதற்குக் கங்கணம் கட்டி செயல்படக்கூடிய பிரிவினைவாதிகள் யார் என்று சொன்னால், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்கிற அந்த மதவெறிக் கூட்டம்தான் இந்தியாவைப் பிரிக்கத் துடிக்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் அவர்கள்.
திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு
கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடை பெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்து, நாங்கள் குண்டு செய்வதற்குப் பயிற்சி கொடுக்கிறோம்
அவர் இன்னுங்கூட சொல்கிறார்; எப்படி குண்டு செய்வதற்குப் பயிற்சி எங்களுக்குக் கொடுத்தார்கள் என்று.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்து, நாங்கள் குண்டு செய்வதற்குப் பயிற்சி கொடுக்கிறோம். தேவையானால், காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்று, அங்கே குண்டு வைப்பதற்கான பயிற்சிகளை நாங்கள் கொடுக்கிறோம்.
ஏன் இந்த அபிடவிட்டை தாக்கல் செய்தார் என்று சொன்னால், மராட்டிய மாநிலத்தில் ஓரிடத்தில் குண்டு செய்கிறபொழுது, அந்தக் குண்டு வெடித்து, இரண்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இறந்துவிட்டார்கள்; அது வழக்காக மாறுகிறது; அந்த வழக்கை சி.பி.அய். விசாரிக் கிறது.
அப்படி அந்த வழக்கை சி.பி.அய். விசாரித்த பொழுது தான், இந்த யஷ்வந்த் ஷிண்டே என்பவர் வாக்கு மூலத்தைத் தாக்கல் செய்கிறார்.
அந்தக் குண்டை வேறு யாரும் வெடிக்கவில்லை; நாங்களே குண்டு செய்தபொழுது, அது வெடித்துவிட்டது. இப்படித்தான் நாங்கள் குண்டுகளை செய்கிறோம் என்று ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண்டரே இன்றைக்கு நீதிமன்றத் தில் தாக்கல் செய்கிறார் என்று சொன்னால், நான் கேட்க விரும்புகிறேன் அருமை நண்பர்களே, இங்கே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; காங்கிரசைக் கேட் டால், அது காங்கிரஸ் மாடல் என்று சொல்வார்கள்; இடதுசாரிகளாக இருக்கிற எங்களுக்கு இடதுசாரி மாடல் ஆட்சி என்று சொல்வோம்.
உங்களுடைய மாடல் என்ன?
நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பார்த்துக் கேட்கிறேன், பி.ஜே.பி.யைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுடைய மாடல் என்ன?
குண்டு வெடிக்கிற மாடல்தானே உங்களுடைய மாடல்.
இந்த நாட்டிலே வன்முறையை வெடிக்கின்ற மாடல்தானே உங்கள் மாடல்.
நல்ல சிந்தனையாளர்களை, தேச பக்தர்களை இந்த நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்த அவ்வளவு பேரையும் கொன்று குவிக்கின்ற மாடல்தானே உங்கள் மாடல்.
வேறு எந்த மாடல் உங்கள் மாடல்?
வேறு எதை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள்?
இந்த நாடு மதச்சார்பின்மை நாடு. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இன்றைக்கு இல்லை. அவர் மட்டும் இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பாரேயானால், அவர் வேதனைப்பட்டு இருப்பார். நாம் உருவாக்கிய அரச மைப்புச் சட்டத்தை இப்படிக் கேவலப்படுத்துகிறார்களே என்று வேதனைப்பட்டு, வெந்து மடிந்திருப்பார் அவர்.
ஒரு மதச்சார்பற்ற நாடு, பல இனங்கள் வாழ்கின்ற நாடு, பல மதங்கள் வாழ்கின்ற நாடு - இந்த நாட்டிலே நீங்கள் பாபர் மசூதியை இடித்தீர்களே - அதை இடித்துத் தரைமட்டம் ஆக்கினீர்களே, அந்த வழக்கையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டீர்கள். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தினால், அந்த வழக்கி லெல்லாம் நீங்கள் விடுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
சிராபுதீன் வழக்கில் அமித்ஷா விடுதலை செய்யப் பட்டு விட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், இன்றைக்கு ராமர் கோவில் கட்டுகிற அந்தப் பணி நடைபெறுகிறது.
மதச்சார்பற்ற நாடு என்பதை நீங்கள் கொச்சைப்படுத்தவில்லையா?
இது மதச்சார்பற்ற நாடு - இந்த மதச்சார்பற்ற நாட்டிலே, ஒரு இந்தியப் பிரதமர், ராமர் கோவில் அடிக் கல் நாட்டுகிற விழாவிற்குப் போகலாமா? மதச்சார்பற்ற நாடு என்பதை நீங்கள் கொச்சைப்படுத்தவில்லையா? அரசமைப்புச் சட்டத்தை மீறிய குற்றவாளியல்லவா நீங்கள்? நீங்கள் பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்ட அரசமைப்புச் சட்டத்தை மீறிய காரணத்தினால், உங்களைக் கைது செய்யக் கூடாதா?
இன்றைக்கு நீங்கள் இராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவிலே கலந்துகொண்டிருக்கிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்!
இப்பொழுது உச்சநீதிமன்றத்திலே வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலே பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். ‘‘இந்த நாட்டிலே இருக் கின்ற எந்தக் கோவிலாக இருந்தாலும், அங்கே சென்று நாங்கள் ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வேண்டும். அதன்மீது நீதிமன்ற வழக்குத் தொடுப்பதற்கு எங்களுக்கு அனுமதி வேண்டும்'' என்று இன்றைக்கு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை முன்மொழிந் திருக்கிறார்கள்; உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடுத் திருக்கிறார்கள்.
ஒருவேளை, பாபர் மசூதியை இடித்த வழக்கில், மேன்மை தங்கிய நீதிமன்றம் இருக்கிறது அல்லவா - அது பாபர் மசூதியை இடித்தது தவறுதான்; ஆனால், இடித்தவர்களிடமே அந்த இடத்தைக் கொடுத்து விடுங் கள் என்று உலக மகா தீர்ப்பு எழுதினார்கள் பாருங்கள், புண்ணியவான்கள் - அது என்ன தீர்ப்பா?
இதுபோன்ற தீர்ப்பு வேறு எங்கேயாவது கேள்விப் பட்டதுண்டா?
கிராமத்தில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துகூட நியாயமாக நடைபெறும். கிராமத்தில் இருக்கின்ற நாட்டாண்மை பஞ்சாயத்துக்கூட நேர்மையாக நடக்கும்.
இந்திய நாட்டை மீண்டும் ஒரு மதக் கலவரத்திற்கு இட்டுச் செல்லுகிற நிலை ஏற்படும்
ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இப்படி வந்தது. அப்படி ஒரு தீர்ப்பு. நாளைக்கு, திருவாரூரில் இருக்கின்ற மசூதிக்குள் போவார்கள்; வேளாங்கண்ணி ஆலயத் திற்குள் நுழைவார்கள்; இந்தியா முழுவதும் அவர்கள் நுழைகிற அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால், இந்திய நாட்டை மீண்டும் ஒரு மதக் கலவரத்திற்கு இட்டுச் செல்லுகிற அப்படிப்பட்ட நிலை ஏற்படும்.
எனவேதான், இந்த சனாதனத்தை எதிர்த்து நாம் மாநாடு போடுகிறோம் என்று சொன்னால், ஏதோ அமைந்திருக்கின்ற ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல - அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல - இந்த நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்தியா என்கின்ற இந்தப் பாரம்பரிய நாடு - அந்தப் பழம்பெருமை படைத்த நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் - இந்த சனாதனப் பேர்வழிகளை வீட்டிற்கு அனுப்பவேண்டும்; அவர்களை இந்த நாட் டிலே நடமாடவிடக் கூடாது என்கிற அப்படிப்பட்ட விஷயத்தைச் சொல்லுகிறோம் என்று சொன்னால், இந்தியா அழிந்துவிடக் கூடாது - நாம் எல்லோரும் சகோதரர்களாக வாழுகின்றோம்; தமிழ்நாட்டிலே எவ்வ ளவு பெரிய பண்பாடு? இந்தியாவிலே எவ்வளவு பெரிய பண்பாடு?
ஒற்றைக் கலாச்சாரத்தை இந்த நாட்டில் திணித்தால், என்ன நிலை ஏற்படும் தெரியுமா?
எத்தனை மொழிகள் இருக்கின்றன; எத்தனைப் பண்பாடுகள் இருக்கின்றன; எத்தனை கலாச்சாரம் இருக்கிறது. எல்லாவற்றையும் காலிலே போட்டு மிதித்துவிட்டு, அருமை நண்பர் செந்திலதிபன் சொன்னதைப் போல, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றைக் கலாச்சாரத்தை இந்த நாட்டில் திணித்தால், என்ன நிலை ஏற்படும் தெரியுமா?
ஒரு காலத்தில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்வார்கள் - அவர் பிரிவினைவாதி என்று.
எப்பொழுதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் எல்லோரையும்பற்றி சொல்வார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்கிற மதவெறிக் கூட்டம்தான் இந்தியாவைப் பிரிக்கத் துடிக்கிறது!
நான் இன்றைக்குப் பகிரங்கமாகச் சொல்கிறேன், இந்தியாவைப் பிரிப்பதற்குக் கங்கணம் கட்டி செயல் படக்கூடிய பிரிவினைவாதிகள் யார் என்று சொன்னால், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்கிற அந்த மதவெறிக் கூட்டம்தான் இந்தியாவைப் பிரிக்கத் துடிக்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
ஏனென்றால், ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணித்தால், ஒரே மொழியைத் திணித்தால், ஒரே பண்பாட்டைத் திணித்தால் இந்தியா என்கிற ஒற்றுமை இருக்குமா?
மலர்மாலைப்போல அழகாக ஜோடிக்கப்பட்டு இருக் கின்ற இந்திய தேசம், குரங்கு கையில் மாட்டிய பூமாலையைப்போல சிதறடிக்கப்படாதா?
ஆகவேதான், இது அரசியல் ஆதாயத்திற்காக கூட்டப்பட்டு இருக்கின்ற மாநாடு அல்ல. இந்தத் தேசம் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடு பாதுகாக் கப்படவேண்டும்.
வருணாசிரம தர்மத்தை இன்றைக்கு ஏன் தூக்கிப் பிடிக்கவேண்டும்?
எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைக்கு என்ன சொல்லுகிறார்கள் - வருணாசிரம தர்மம்.
என்றைக்கோ யாரோ எழுதி வைத்த வருணாசிரம தர்மத்தை இன்றைக்கு ஏன் தூக்கிப் பிடிக்கவேண்டும்?
அது சரியா? தவறா? என்று நான் அதற்குள் போக விரும்பவில்லை. என்றைக்கோ ஒருவன் எழுதினான், அன்றைக்கு அவனுக்குத் தேவை இருந்ததோ என்னவோ?
ஆனால், இன்றைக்கு ஏன் நீங்கள் வருணாசிரம தர்மம் என்கிறீர்கள்; இன்றைக்கு ஏன் நீங்கள் மனுநீதி என்கிறீர்கள். மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று சொல்கிறீர்கள்?
அம்பேத்கர் உருவாக்கியிருக்கின்ற அரசமைப்புச் சட்டம், உனக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. அந்த வாய்ப்பினால், இந்த நாட்டிலே, எவன் ஒருவனும் எந்தப் பதவிக்கும் போவதற்குத் தகுதி இருக்கிறது என்கிற அந்த சமத்துவ வாய்ப்பை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.
ஒரு பட்டியலினத்தைச் சார்ந்தவர் குடியரசுத் தலை வராக முடியும்; ஒரு பழங்குடி இனத்தவர் இன்றைக்குப் பிரதமர் ஆக முடியும். ஒரு சாதாரண அடித்தட்டு மனிதன் இன்றைக்குக் கலெக்டர் ஆக முடியும்.
இப்படிப்பட்ட ஒரு சமத்துவ நியாயத்தை வழங்கியிருக்கிற அரசமைப்புச் சட்டம் நம் நாட்டில் இருக்கின்ற பொழுது, இன்றைக்கு எதற்கு சனாதனம்? இன்றைக்கு எதற்கு வருணாசிரம தர்மம்? இன்றைக்கு எதற்கு மேல்ஜாதி, கீழ்ஜாதி என்பது.
உங்களுடைய பிறப்புத் தத்துவம் விஞ்ஞானத்திற்குப் பொருந்துமா?
பெரியார் சொன்னதுபோன்று, பிறப்பு தத்துவம் சொல்கிறீர்களே நீங்கள், அது விஞ்ஞானத்திற்குப் பொருந்துமா?
எவனாவது நெற்றியில் பிறப்பானா? என்ன விஞ்ஞானம் இது?
எனவே, இப்படி காலம் கடந்து போயிருக்கிற கண் மூடித்தனமான காட்டுமிராண்டித்தத்துவத்தை வைத்துக் கொண்டு, இந்த நாட்டை நீங்கள் ஆண்டுவிடலாம்; இந்த நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்கள்.
இப்பொழுதுதான் அதிகமான கிரிமினல்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்
நான் கடைசியாக சொல்லிக் கொள்ள விரும்பு கின்றேன், நீங்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் சரி, அண்ணாமலையைப்பற்றி முத்தரசன் அவர்கள் சொன்னார் - அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தபொழுது அவர் கிரிமினல்களைப் பிடித்தாரோ, பிடிக்கவில்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், இப்பொழுதுதான் அதிக மான கிரிமினல்களை கட்சியில் சேர்த்துக் கொண்டி ருக்கிறார்.
அப்படிப்பட்ட கிரிமினல்கள் சேர்ந்திருக்கின்ற கட்சி யாக பி.ஜே.பி. கட்சி இருக்கிறது. இதையெல்லாம் அவர் கள் தெரியாமல் செய்யவில்லை. ஏனென்றால், ஒரு நாணயமானவனை கட்சியில் சேர்த்து, அடுத்த வீட்டுக்கு நெருப்பு வை என்றால், வைப்பானா?
குஜராத்தில் கலவரம் நடந்தது - சிராஜ்புதீன் என்கிற அந்த அம்மையாருடைய வழக்கு வந்தது; அய்ந்து மாத கர்ப்பிணியை கொலைகார பாவிகள் கதறக் கதற பாலி யல் வன்முறைக்கு ஆட்படுத்தினார்கள். அவருடைய தாயை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தினார்கள்; அவருடைய சகோதரியை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தினார்கள். யாராவது நேர்மையானவன், நல்ல எண்ணம் கொண்டவன் இதுபோன்ற செயலை செய்வானா?
இந்தக் காட்சியைக் கண்டு அய்ந்து வயது குழந்தை அலறி அடித்து ஓடி வருகிறது. அந்தக் குழந்தையின் காலைப் பிடித்து சுவரில் அடித்தார்கள்; மண்டை உடைந்து மூளை சிதறிப் போனது. அந்த இடத்தில் மட்டும் 14 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்; அந்த வழக்கு மராட்டிய நீதிமன்றத்தில் நடைபெற்று, குற்ற வாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
நீதிபதியை பழிவாங்கினார்கள்!
ஒரு பெரிய ரகசியம் என்ன தெரியுமா?
மராட்டிய நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்கிறார்கள்; அந்த மேல்முறையீட்டு வழக்கை விசா ரித்து அந்தக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியாக இருந்த பியூல் ராணி என்பவர்.
அதனால்தான், அவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வந்தவுடன் - இந்தியாவிலேயே உள்ள மாநில நீதிபதிகளிலேயே மூத்த நீதிபதி அவர்தான். அவரை அசாம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றுகிறார்கள். 38 நீதிபதிகளுக்குத் தலைவராக இருந்த வரை, மூன்று நீதிபதிகள் உள்ள உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக மாற்றுகிறார்கள்.
எதற்காக குஜராத் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தினாய் என்று பழிவாங்கினார்கள்.
எனவே, இப்படிப்பட்ட கேடுகெட்ட காரியத்தை யார் செய்ய முடியும்?
கிரிமினல்கள்தான் செய்ய முடியும்; ரவுடிகள்தான் செய்ய முடியும்; கடைந்தெடுத்த பொறுக்கிகள், போக்கிரிகள்தான் செய்ய முடியும்.
ஆகவேதான், பொறுக்கிகளாகப் பார்த்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள்; கிரிமினல்களாகப் பார்த்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள்; ரவுடிகளாகப் பார்த்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் கையாலாகாதவர்கள், கோழைகள் என்று நினைத்துவிட வேண்டாம்!
அவர்கள் நினைக்கிறார்கள், ரவுடியிசம் வெற்றி பெற்றுவிடும் என்று. நான் இந்த மேடையில் நின்று சொல்லுகிறேன், நாங்கள் அமைதியான முறையில் எங்கள் கருத்துகளைச் சொல்லுகின்றோம். அதனால் நாங்கள் கையாலாகாதவர்கள் என்றோ, கோழைகள் என்றோ நினைத்துவிட வேண்டாம்.
நாங்கள் திமிறி எழுந்தால், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்களே, அப்படி உங்களை விரட்டியடிக்க எங்களால் முடியும்.
ஆனால், அப்படி செய்யவேண்டாம் என்கிற காரணத்தினாலே, கருத்து ரீதியாக மக்களை சந்திக்கின்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிற இந்த இயக்கத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
நாடே இன்றைக்கு இருட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது
அதுமட்டுமல்ல அருமை நண்பர்களே, இந்த நாட் டினுடைய பொருளாதாரம் இன்றைக்குத் தவிடுபொடி யாகிக் கொண்டிருக்கின்றது. நாடே இன்றைக்கு இருட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நாட்டில் வளர்ந்திருப்பவர்கள் யார்?
இன்றைக்கு மோடி எதைப்பற்றியும் கவலைப்பட வில்லை. மோடி ஆட்சியில் விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் வளர்ந்திருப்பவர்கள் யார்?
உலகத்தில் இருக்கின்ற மூன்றாவது பெரிய பணக்காரராக அதானி வளர்ந்திருக்கிறார்.
யாருடைய ஆட்சியில்?
மோடியினுடைய ஆக்கமும், ஊக்கமும் காரணமாகத் தான் இன்றைக்கு அவர் வளர்ந்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம்.
ஒரு மகத்தான கூட்டணி இன்றைக்குத் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது
எனவேதான், உங்களையெல்லாம் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு நடைபெறுகிற சனாதன எதிர்ப்பு மாநாடு என்பது - நாம் அனைவரும் ஒன்று திரண்டு - தமிழ்நாட்டில் ஒரு மகத்தான ஒற்றுமை உருவாகி இருக்கிறது. மரியா தைக்குரிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற ஒரு மகத்தான கூட்டணி இன்றைக்குத் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும்!
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளு மன்றப் பொதுத் தேர்தலுக்குள் இந்தக் கூட்டணியை இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தி, இந்தியா முழு வதும் மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்தி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை, ஒன்றிய ஆட்சியை விட்டு மட்டுமல்ல, அரசியல் களத்தில் ஆணிவேரைப் பிடுங்கி எறிகிற அந்த மகத்தான போராட்டத்தை நாம் நடத்த உறுதியேற்போம்!
அந்தப் பயணத்தை வெற்றி முரசு கொட்டி நிறை வேற்றுவோம் என இந்த நேரத்தில் கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment