சமூகநீதி - மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் கார்கே!
அவரது நிறத்தைக் குறித்தும்-மறைமுகமாக ஜாதி குறித்தும் பேசுவது கண்டிக்கத்தக்கது!
அகில இந்திய காங்கிரசின் தலைவராகப் பெரும் பாலும் மல்லிகார்ஜுன கார்கே வரவிருப்பது வரவேற் கத்தக்கது. சமூகநீதியிலும், மதச்சார்பின்மை யிலும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள - அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவர் அவர். அவரது கருப்பு நிறம் குறித்தும், பிறந்த சமூகத்தைக் குறித்தும் எல்லாம் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உயர்ஜாதியினரின் வெறுப்பு
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்தே வட இந்தியாவில் பல உயர்ஜாதியினரின் வெறுப்பு கலந்த சமூக வலைதளப் பதிவுகள் அதிகமாகி வருகின்றன.
வட இந்தியா ஹிந்தி ஊடகங்களில் அரசியல் தொடர்பாக கட்டுரை எழுதி வரும் ஆதேஜ் ராவல் என்பவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பதிவிட்டபோது, ‘‘காங்கிரஸ் தலைவர் பதவிக்காக- கருப்புக் குதிரையை விட கருப்பானவர் காங்கிரஸ் தலைவருக்கான பத விக்குப் போட்டி'' என்று கூறியுள்ளார். இவரின் பதிவை பல பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உயர்ஜாதித் தலைவர்கள் பின் தொடர்கின்றனர். இவரின் இந்தப் பதிவு எந்த அளவிற்கு வட இந்தியாவில் ஜாதி வெறி- அரசியல், ஊடகம் மற்றும் இதர தளங்களில் நிறைந் திருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இவரின் இந்தப் பேச்சிற்குப் பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு விளக்கம் கொடுத்த அந்தக் கட்டுரையாளர், ‘‘நான் குதிரைப் பேரம் நடக்கிறது என்றுதான் கூறினேன். கருப்புப் பணம் போல் கருப்புக் குதிரை என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்'' என்று சமாளிக்கிறார்.
ஏனிந்த வெறுப்பு?
மல்லிகார்ஜுன கார்கே மீது ஏன் இந்த வெறுப்பு? அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ப தால்தானே!
சமூகநீதியில் மிகவும் அக்கறை கொண்டவர் - நாடாளுமன்றத்தில் அது குறித்தெல்லாம் பெரிதும் அக்கறை கொண்டு பேசக்கூடியவர் என்பதால்தானே!
எடுத்துக்காட்டுக்கு இதோ இரண்டு:
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
நாடாளுமன்ற விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஆற்றிய உரை வருமாறு:
மத சகிப்பின்மை தொடர்பாக அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச் சுக்கு ''நாங்கள் திராவிடர்கள் - நீங்கள் ஆரியர்கள். நீங்கள் தான் வெளியில் இருந்து வந்தவர்கள்'' என்று மல்லிகார்ஜுன கார்கே பதில் தந்தார் (27.11.2015).
இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125 ஆவது பிறந்த நாள் போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களும் விவாதம் நடத்த, ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது.
மக்களவையில், இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங் கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்குப் பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
‘‘அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத் தில், ‘சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளே கிடையாது. ஆனால், 42 ஆவது திருத்தமாக, அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப் பட்டன. மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப் பட வேண்டும். அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான், கூட்டாட்சித் தத்துவம்; அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களை சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறிய தில்லை.''
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மக்களவை காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
‘‘சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளை அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால், அதை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்த்தார்கள், நீங்கள், ஆரியர்கள்; வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். நாங்கள், 5,000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும், தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம்; இனியும் இங்கு தான் வசிப்போம்.''
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பாடத் திட்டமும் - கார்கேயின் பதிலடியும்!
கருநாடகாவில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே பாஜகவைக் கடுமையாகச் சாடினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ஹெட்கே வாரின் 1921 ஆம் ஆண்டின் உரையைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டின் விடுதலைப் போரில் ஹெட்கேவாரின் பங் களிப்பு என்ன? பாடங்களில் பிளவுபடுத்தும் சித்தாந் தத்தை சேர்த்து பகத்சிங், நேரு மற்றும் காந்தியார் ஆகியோர் குறித்த பாடங்களை ஒவ்வொன்றாக அகற்ற முயல்கிறார்கள். இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்'' என்று அவர் சாடினார் (15.6.2021).
திரு.மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் இத்தகு கொள்கை ரீதியான கருத்துகள்தான் அவர்மீது பார்ப்பன - ஆரிய சக்திகள் பாய்ந்து பிராண்டுவதற்கு முக்கிய காரணம்.
இத்தகைய உணர்வுள்ளவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வருவதை இந்த ஆதிக்க ஆரிய சக்திகள் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
இந்தக் காரணங்களே தகுதியான சான்றுகள்!
இந்தக் காரணங்களே இவர் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய தலைவராவதற்கு மகத்தான தகுதியுள்ள பொருத்தமானவர் என்பது வெளிப்படை!
குற்றம் சாட்டியவர்கள் எங்கே?
காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது என்று குறை கூறியவர்களுக்கு வேறு ஆயுதம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால், மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் நிறத்தைக் குறித்தும், பிறந்த ஜாதியைக் குறிப்பிட்டும் அவதூறு பேசுவது அநாகரிகமானது - கண்டிக்கத்தக்கது.
காங்கிரசின் முடிவு திருப்பம் தரக்கூடியது - இந்தக் காலகட்டத்திற்குத் தேவையானது.
வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்!
No comments:
Post a Comment