சென்னை, அக். 30- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
சுற்றி வளைப்பது, துரத்தி துரத்திச் சுடுவது, படகுகளை பறிமுதல் செய்வது, வலைகளை அறுப்பது, பிடித்த மீன்களை கடலில் கொட்டுவது, சிறையில் அடைப்பது என பன்னாட்டு கடல் எல்லை மீன்பிடி விதிகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறி வருகிறது.
தொடரும் இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக் கிறது. தற்போது இந்திய கடற்படையினராலும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இடர்கள் ஏற்படுகிறது. கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘அய்என்எஸ் பங்காரம்' என்ற கப்பல், படகுகளை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளது. தொடர் மழை, இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்ச சூழல் என தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்து செல்லும் போது, இந்தியக் கடற்படையினர் நடத்தியச் துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் என்ற மீனவரின் வயிற்றிலும், தொடையிலும் குண்டு பாய்ந்தது.
மீனவர்களின் படகுகளை வளைத்து, தடுத்து விசாரிக்க இயலும். அவ்வாறு இல்லாமல் துப்பாக்கிச் சூடு என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாது காப்பளிக்க வேண்டிய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாதது. ஒன்றிய அரசு உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்தி தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரச் சூழலை உறுதிப் படுத்த வேண்டும். இனி இதுபோல் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
-இவ்வாறு அறிக்கையில் இரா.முத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment