வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, அக். 30- உலக சிக்கன நாளில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,

சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருள்களையும், இயற்கை யின் வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்க னம் தொடங்குகிறது. ‘பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித் தல்' என்கிற உவமையிலிருந்து மாறுபட்டு, ‘தண்ணீரைப் பணம் போல செலவழிக்கும்' கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது.

அக்டோபர் 30-ஆம் நாளை உலக சிக்கன நாளாக நம் நாடு கடைப்பிடிக்கிறது. இன்று ‘குறைந்தபட்சத் தேவைகளு டனான வாழ்க்கை' என்கிற கருத்தியல் விரைவாகப் பரவி வருகிறது. ஒரு பொருளை, ‘தேவையா?' என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது.

விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கிறார்கள். பெறுகிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் சேமிப்பிற்கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்றவற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கைக் கல்வி, பராமரிப்பு, வரி போன்றவற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக் கிறார்களோ, அவர்களே வளமான வாழ்க்கையை வாழ முடியும்.

சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.

இந்த ‘உலக சிக்கன நாளில்' தமிழ்நாட்டு மக்கள் அனை வரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment