சென்னை,அக்.3-தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு மாநாடு சென்னை எழும்பூரில் நேற்று (2.10.2022) நடை பெற்றது. விழாவைத் தொடங்கி வைத்து தமிழ் நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது: வன உயிரி னங்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், மக்கள் நலனுக்காகதான் வனஉயிரினங்களை அரசு பாதுகாக் கிறது. வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து குழந்தைப் பருவம் முதலே விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இதுபோன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும்
33 விழுக்காடு வனப் பரப்பை உருவாக்க நாம்பாடுபட்டு வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் 67 விழுக்காடு வனப் பகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் நான் வசிக்கும் பகுதியில் ஒரு காலத்தில் ஒருவர் வீட்டிலும் வாகனங்களே இல்லை. இன்று வீட்டுக்கு ஒன்று மற்றும் அதற்கு மேல் வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் கார்பனை உமிழ்கின்றன. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களால் காற்றும், நீரும் மாசுபட்டு வருகிறது. வரும் காலத்தில் காற்றை நாம்விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக் கூடாது. அதற்கு வனங்களும், வன உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகதான் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார். இந்த ஆண்டு 2 கோடி மரக்கன்றுகளும், அடுத்த ஆண்டு 32 கோடி மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.
மேலும் அடர்ந்த புல் வகைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான் மான்கள், ஆடுகள், மாடுகள் வாழும். அதை உண்டு புலிகள் வாழும். அரசின் நடவடிக்கைகளால் தமிழ் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள புலிகளில் 10 விழுக்காடு (267) தமிழ்நாட்டில் உள்ளது. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க, வனப் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக அரசு பல்வேறு துறைகளுடன் இணைந்து பசுமை இயக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியாசாஹூ, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், வனத்துறை தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ், தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, சென்னை மண்டலவனப் பாதுகாவலர் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment